செம்பருத்தியின் மருத்துவக் குணம்
பொன்னம்மாவுக்கு சதா தன் மகள் பூரணி பற்றித்தான் கவலை. அவள் வயதொத்த பெண்களெல்லாம் பூப்பெய்தி, கல்யாணத்திற்கு வரிசையாக நிற்க... பூரணி மட்டும் இன்னும் வயதுக்கு வராமல் இருந்தாள். எங்கெங்கோ காட்டிவிட்டாள்... என்னென்ன மருந்தோ கொடுத்துவிட்டாள்... ஆனால், மொட்டு மலரத்தான் காணோம். இந்த விஷயம் தெரிந்து பொன்னம்மாவின் அண்ணன் மகன் வடிவேலுவுக்கு வேறு இடத்தில் பெண் பார்க்கத் தொடங்கி விட்டார்கள். பிறந்ததில் இருந்தே பூரணிக்கும் வடிவேலுக்கும்தான் கல்யாணம் என்று ஆசை காட்டி வந்ததால், அது நிறைவேறாமல் போய் விடுமே என்ற வருத்தம் அவளையும் மகள் பூரணியையும் வாட்டி வதைத்தது. பக்கத்து வீட்டுப் பெரியம்மாவிடம் இதைப் பற்றிச் சொல்லி அழுதாள்.
‘‘பயப்படாதே பொன்னம்மா. உன் மகளுக்கு வந்திருக்கிற பிரச்னையை நான் சரி செய்யறேன்’’ என்று சொல்லிவிட்டு, அருகில் இருந்த பூந்தோட்டத்தில் இருந்து, தினமும் மூன்று செம்பருத்தி பூவைப் பறித்து வந்து, அவற்றை நெய்யில் வறுத்து பூரணிக்குச் சாப்பிடக் கொடுத்தாள். தொடர்ந்து ஒருமாதம் இப்படிக் கொடுத்து வந்திருப்பாள்... எண்ணி முப்பத்திரண்டாவது நாள்... வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பூரணி, ‘‘அய்யோ! அம்மா!’’ என்று வயிற்றைப் பிடித்தபடி உட்கார்ந்துவிட்டாள். ஆமாம், பூரணி பெரிய மனுஷியாகி விட்டாள். செய்தியறிந்த உடனே பொன்னம்மா பக்கத்து வீட்டுப் பெரியம்மாவுக்கு நன்றி சொல்லப் போனாள்.
‘‘பெரியம்மா, எம் பொண்ணு உங்க வைத்தியத்தால பெரிய மனுஷியாயிட்டா... ரொம்ப நன்றிம்மா’’ என்று கண்ணீர் மல்க நின்றாள். ‘‘அதை எனக்குச் சொல்லாத பொன்னம்மா... செம்பருத்திக்குச் சொல்லு... அதுதான் உன் பொண்ணை பூக்க வச்சுது...’’ என்று கூறிச் சிரித்தாள்.
செம்பருத்தி பூ பார்க்கறதுக்கு மட்டுமல்ல... வைத்தியத்துக்கும் ரொம்ப சிறப்பானது. அதோட வேர், இலை, மொட்டு, பூ எல்லாமே மருத்துவ குணம் நிறைஞ்சதுதான். இது பருத்தி வகையைச் சேர்ந்த ஒரு செடி. இதோட பூக்கள் இரண்டு வகையா இருக்கும். ஒரு வகை பூக்கள் அடுக்கடுக்கா காட்சியளிக்கும். இன்னொரு வகை, தனித்தனியா அகலமா காட்சியளிக்கும். இந்தச் செடி எட்டடி உயரம் வரைக்கும் நல்லா செழித்து வளரும். இதோட பூக்கள், வருஷம் முழுக்கப் பூத்துக்கிட்டே இருக்கும்.
உடல் உஷ்ணம் குறைய...
உடல் உஷ்ணம் அதிகமாகிவிட்டால் பலவித பிணிகள் வர வாய்ப்புண்டு. இதுபோல் வராமல் தடுக்க, ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறைஞ்சுடும். சாதாரண காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம்.
வெட்டை நோய் குணமாக...
ரகசிய வியாதிகளின் பிரிவைச் சேர்ந்த வெட்டை நோயை செம்பருத்திப் பூ குணமாக்குகிறது.
இந்தப் பூவினை அதிகாலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் இருந்தாலும் குணமாகும்.
இருதயம் பலம் பெற...இருதய பலவீனமானவர்களுக்குச் செம்பருத்தி பூ டானிக் சிறப்பாக உதவுகிறது.
செம்பருத்திப் பூவை 250 கிராம் கொண்டு வந்து துண்டு துண்டாக நறுக்கி, ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, காலையில் வெயிலில் வைக்கவும். பின்னர் மாலையில் எடுத்துப் பிசையவும். அப்போது சிவப்பான சாறு வரும். அந்தச் சாறை ஒரு சட்டியில் ஊற்றி சேர்க்க வேண்டிய சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
இதிலிருந்து காலை_மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்கவும். இதுபோன்று தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயமும் பலம் பெறும்.
பேன் தொல்லை ஒழிய...சில பெண்களக்கு பேன் பெருந்தொல்லை தரும். இதுபோன்றோர் செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று_நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும். தவிர, பொடுகு, சுண்டுகள் இருந்தாலும் நீங்கிவிடும்.
குழந்தையின் வளர்ச்சிக்கு...
சில குழந்தைகள் பிறக்கும்போதே பலகீனத்துடன் பிறப்பதுண்டு. இதனால் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாமல் இருக்கும். இக்குறையைப் போக்கிட, ஐந்து செம்பருத்தி பூக்களை, ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரைலிட்டர் நீர் விட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி பனைவெல்லம் சேர்த்துக் கொடுத்து வர வேண்டும். தொடர்ந்து கொடுத்து வந்தால், சில நாட்களிலேயே குழந்தை வளர்ச்சியில் நல்ல பலன் தெரியும்.’’
No comments:
Post a Comment