27 December 2013

லக்னாதிபதி

நீங்கள் வாழ்க்கையில் நிறைய மனிதர்களை சந்தித்திருப்பீர்கள்.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள்.  சிலர் கம்பீரமாகத் தலைநிமிர்ந்து வருவார்கள்.  சிலர் தலையைக் குணிந்து கூச்ச சுபாவத்துடன் வருவார்கள்.  இதற்குக் காரணம் என்ன என்றால், லக்னாதிபதியே ஆகும்.  ஒருவருடைய லக்னாதிபதி ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்றால் அவர் தலைநிமிர்ந்து வாழ்வார்.  மற்றவர்கள் கண்களை நேருக்கு நேர் பார்த்து தைரியமாக பேசும் திறன் படைத்தவர்களாக இருப்பார்.  லக்னாதிபதி உச்சம் பெற்றிருந்தால் தலைமை வகிக்கும் குணம் படைத்தவர்.  எந்த இடமாக இருந்தாலும் அந்த இடத்தில் நம்பர் ஒன் என்று பிறர் சொல்லுமளவிற்கு முதன்மையாக இருப்பார்.  எல்லோரையும் தன் கட்டுப் பாட்டிற்குள் வைத்து வேலை வாங்கும் திறன் படைத்தவர், மற்றவர்கள் பார்வைக்கு இவர் கர்வம் பிடித்தவர் போலத் தோற்றமளிப்பார்.  கர்வம் பிடித்தவர் என்று கூட சிலர் நினைப்பார்கள்.
                லக்னாதிபதி ஆட்சியாகவோ அல்லது வேறு உச்சமாகவோ இருப்பது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அமையும் விஷயமாகும்.  எல்லோருக்கும் இப்படி அமையாது.  அப்படி அமையவில்லையென்றால் எப்படி அமைந்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டால், லக்னாதிபதி லக்னத்தில் இருப்பதைப் போல 5ல் இருக்கலாம்.  9ல் இருக்கலாம், வெகுசிறப்பாக இருக்கும் அதே போல் தனஸ்தானமானது 2ம் இடத்திலும் இருக்கலாம்.  ஆனால் எந்த காரணத்தைக் கொண்டும் லக்னத்திற்கு மறையக்கூடாது.  லக்னத்திற்கு 3,6,8,12 போன்ற வீடுகளில் இருப்பதைத்தான் மறைவு ஸ்தானம் என்று சொல்கிறோம்.  அதே போல பகை வீட்டிலும் நீச வீட்டிலும் இருக்க்க்கூடாது.  இவ்வாறு இருந்தால் லக்னாதிபதி பலம் இழந்து காணப்படுகிறார் என்று புரிந்து கொள்ளுங்கள்.
லக்னாதிபதி பலம் இழந்து விட்டால் அவருக்கு சமுதாயத்தில் எதிர்ப்பார்க்கும் மரியாதை இருக்காது.  அவர் எவ்வளவுதான் மற்ற்வர்களுக்கு உதவி செய்தாலும், அவ்வாறு உதவி பெற்றவர்கள் இவர்தான் உதவி செய்தார், அதனால்தான் முன்னுக்கு வந்தோன் என்று நினைக்கமாட்டார்கள்.  இதனால் இவர் மணம் நொந்து கொள்வார்.
எனவே இங்கு இவர் மற்றவர்களுக்கு ஏணியாகவேப் பயன்படுவார்.  ஆனால் அதற்கான நன்றி இவர்களிடத்தில் இருக்காது.  எனவே லக்னாதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் ஒரு மாதிரி பலனையும், மறைந்திருந்தால் ஒரு மாதிரி பலனையும் சொல்ல வேண்டும்.
ஒருவருக்கு எத்தனை யோகங்கள் ஜாதகத்தில் இருந்தாலும், அதனை அனுபவிப்பதற்கு, லக்னாதிபதி பலம் பெற்றிருக்க வேண்டும்.  லக்னாதிபதி பலம் பெறவில்லையென்றால், அந்த யோகங்களை சரியாக அனுபவிக்க முடியாது.  இதனையும் ஓர் உதாரணத்தின் மூலம் விளக்க விரும்புகிறேன்.  நீங்கள் ஒரு வீடு கட்டுவதாக வைத்துக் கொள்ளுங்கள்.  ஐந்து மாடி கட்டிடம் கட்டுவதாக வைத்து கொள்ளுங்கள்.  அவ்வாறு அழகாக இத்தனை மாடி கட்டிடங்கள் கட்ட வேண்டுமென்றால் அஸ்திவாரம் பலமாக இருக்கவேண்டும்.  அஸ்திவாரத்தைப் பலமாக அமைக்காவிட்டால் கட்டிடம் சரியாக கட்ட முடியாது.  அதுபோலத்தான், லக்னாதிபதியும் பலமாக இல்லையென்றால் யோகத்தை சரியாக அனுபவிக்க முடியாது.  எனவேதான் ஒருவரது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்ல வேண்டுமென்றால், லக்னாதிபதி நன்றாக இருக்க வேண்டும்.  லக்னம் பலம் பெற்றால்தான், லக்னாதிபதி பலம் பெற்றால்தான் யோகத்தை முறையாக அனுபவிக்க முடியும்.
ஒருவருக்கு நிறைய பணம் வந்து கொட்டுகிறது.  அதை வைத்துக் கொண்டு அவர் அறுசுவை உணவை விதவிதமான நட்சத்திர ஓட்டலில் சாப்பிட விரும்புகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால்தான், ஜீரணமாக்க் கூடிய வயிறு இருந்தால்தான் அவரால் கையில் இருக்கும் பணத்தை வைத்துக் கொண்டு ருசியாக சாப்பிட முடியும்.  உடல் ஆரோக்கியம் இழந்தால், வயிறு கெட்விட்டால், கையில் பணம் இருந்தால் கூட தான் விரும்பிய உணவு எதையும் சாப்பிட முடியாது.  இந்த அடிப்படை உண்மையைப் புரிந்து கொண்டு விட்டால், லக்னாதிபதி பலம் இழந்துவிட்டால் நல்ல பலன்களை அடைய முடியாது.  என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
உங்களது லக்னாதிபதி பலம் இழந்து விட்டால் நல்ல ஜோதிடரைப் அனுகி உங்கள் ஜாதகத்தை ஆய்வு செய்து பின் அதற்கு வேண்டிய பரிகாரத்தை செய்து கொள்ள வேண்டும்.  இருப்பினும் என்ன பரிகாரம் செய்வது ?
உங்களது லக்னாதிபதி பலம் இழந்து விட்டால் அந்த லக்னத்திற்கு அதிபராக உள்ள கிரகம் யார் என்று பாருங்கள்.  அதன் பிறகு அந்த கிரகத்திற்குரிய ஜெம்மை (ரத்தினம்) அணிந்து கொள்ளுங்கள்.  குறைந்த பட்சம் 2 காரட் அளவு திறப்பு வைத்து வெள்ளி மோதிரத்திலாவது அல்லது தங்க மோதிரத்திலாவது அணிந்து கொள்ளுங்கள்.  சிம்மலக்னமாக இருந்து, அதன் அதிபர் சூரியன் நீசமாக இருந்தால், சூரியனுக்குரிய மாணிக்கம் 1 ½ காரட் வரை அணிந்து கொள்ளுங்கள்.  சந்திரனாக இருந்தால் முத்து அல்லது சந்திரகாந்த கல் அணிந்து கொள்ள வேண்டும். செவ்வாய் ஆக இருந்தால் பவளம் அணிய வேண்டும்.  புதனாக இருந்தால் மரகதப்பச்சையையும், குருவாக இருந்தால் கனக புஷ்பராகத்தையும், சுக்கிரனாக இருந்தால் வைரம் அல்லது வெள்ளை ஜிர்கானையும், சனியாக இருந்தால் நீலக்கல்லையும் (இந்திரநிலம்) அணிய வேண்டும்.  இவ்வாறு அணிந்து கொண்டால் வானவெளியிலுள்ள அந்தந்த கிரகங்களின் சக்தியை  அந்த ரத்ன கற்கள் பெற்று அதனை அணிந்தவர்களுக்குக் கொடுத்துவிடும். 
ஜெம்ஸ் அணிவது போல லக்னாதிபதிக்கு உரிய ஆலய பரிகாரங்களையும் செய்து கொள்ளலாம்.  லக்னாதிபதி சூரியனாக இருந்தால் கோயிலுக்குச் சென்று சிவனுக்கு ஒர நெய், தீபம், நவகிரக சன்னதியில் சூரியனுக்கு ஒரு நெய்தீபம் ஞாயிற்றுக்கிழமை ஏற்றி வழிபட வேண்டும்.  ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து வழிபட வேண்டும்.  இதேபோல நவகிரக பரிகாரஸ்தலங்களில் சூரியனுக்குரிய சூரியனார் கோயிலுக்குச் (மாயவரத்திற்கு அருகே உள்ளது) சென்று பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.
உங்கள் லக்னாதிபதி சந்திரனாக இருந்தால், திங்கள்கிழமை அம்பாளை வணங்கி நெய்தீபம் ஏற்ற வேண்டும்.  நவகிரக சன்னதியில் சந்திரனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.  பௌர்ணமி பூஜையை செய்ய வேண்டும்.  அதேபோல் நவகிரக ஸ்தலங்களில் ஒன்றான திங்களுர் சென்று பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.  இதுபோல் சந்திரன்னின் ஸ்தலமான திருப்பதிக்கும் சென்று பரிகாரம் செய்து கொள்ளலாம்.  இதுபோல், உங்கள் லக்னாதிபதி எதுவோ, அந்த கிரகத்திற்குரிய பரிகாரத்தைச் செய்து கொள்ள வேண்டும். 
லக்னாதிபதியை குரு பார்த்தால் பலம் இழந்து விட்டாரே என்று நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.  குரு பார்க்க கோடி பாவம் நிவர்த்தி எனபதற்கேற்ப லக்னாதிபதியின் பலம் பெருகும்.
உங்கள் லக்னாதிபதி ஆட்சி பெற்றால் பலம்; உச்சம் பெற்றால் பலம்; குருவின் பார்வையைப்பெற்றால் பலம்; லக்னாதிபதி தன்னுடைய வீட்டைப் பார்த்தால் பலம் – இவ்வாறு பல வழிகளில் லக்னாதிபதி பலம் பெறுகிறார்.

லக்னாதிபதி ராசி கட்டத்தில் எந்த வீட்டில் இருக்கிறாரோ, அதே வீட்டில் நவாம்ச கட்டத்தில் இருந்தாலும் பலம் பெறுகிறார் என்று சொல்ல வேண்டும்.  உதாரணத்திற்கு சொல்வதென்றால், ராசிக்கட்டத்தில் சிம்மத்தில் லக்னாதிபதி இருந்தால், நவாம்ச சக்கரத்திலும், சிம்மத்தில் லக்னாதிபதி இருந்தால், பலம் பெறுகிறது என்று சொல்லவேண்டும்.  இவ்வாறு பலம் பெறுவதை வர்க்கோத்தமம் பெற்றுள்ளது என்று சொல்வார்கள்.  எனவே ஒரு கிரகம் வர்க்கோத்தமம் பெறுகிறது என்றால், அந்த கிரகம் பலம் பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும்

No comments:

Post a Comment