29 October 2015

சரப்பயிற்சியின் போது கடைப்பிடிக்க வேண்டியது
ஈரமற்ற தரையில் விரிப்பின் மீது அமர்ந்து காற்றோட்டமுள்ள இடத்தில் செய்ய வேண்டும். பனியும், குளிரும் இல்லாத காலங்களில் நதிக்கரை, ஏரிக்கரை, தோட்டம், வெளி மலைப்பகுதி ஆகிய இடங்களில் செய்யலாம். உணவுக் கட்டுப்பாடு அவசியம், சாத்வீக உணவு நல்லது. அரை வயிறு உணவு, கால் வயிறு நீர், மீதி கால் வயிறு வெறுமையாய் இருக்க வேண்டும்.
சரப்பயிற்சி செய்ய ஏற்ற காலங்கள்
1.சூரிய உதயம் 3நாழிகை (3 x 24 = 72 நிமிடங்கள்)
2.மதியம்
3.சூரியன் மறைவதற்கு முன்னும் பின்னுமாக 4 நாழிகை.
4.(அர்த்த இராத்திரி) நடு இரவு சாமத்தில்.
சரப்பயிற்சியின் போது மூச்சை வெளிவிடல் உள் வாங்கல், மெதுவாகவும் நிதானமாகவும் செய்ய வேண்டும்.பூரித்த நாடி வழியே இரேசிக்காமல் பயிற்சி செய்வது சரியானபடி நன்மை அளிக்கும். இரேசித்த நாடி வழியே பூரிக்கலாம். இது பயிற்சி முறையைப் பொறுத்து அமையும். சரப்பயிற்சியின்போது பத்மாசனம் (அ) துறவிகளாக இருப்பின் சித்தாசனம் நிலையில் இருந்து கொள்ளலாம் (அ) சாதாரணமாக சுக ஆசனத்தில் (சப்பணமிட்டு அமர்தல்) இருந்து கொண்டு செய்யலாம்.
பயிற்சி முறை
முதலில் வலதுகையின் ஆட்காட்டு நடுவிரல்களை மடக்கிக் கொள்ள வேண்டும். வலது கட்டை விரலால் வலது நாசித் தொளையை மூடிக் கொண்டு இடது தொளையால் மெதுவாக காற்றை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உள்ளிழுக்க வேண்டும்.அடுத்து வலது கட்டை விரலை எடுத்துவிட்டு மோதிர விரல் மற்றும் சிறுவிரல்களால் இடது நாசித் துவாரத்தை அடைத்துக் கொண்டு மிகவும் மெதுவாகவும், நிதானமாகவும் வலது நாசித் துவாரத்தின் வழியாகத் காற்றை இரேசிக்க வேண்டும். அடுத்து வலது மூக்குத் துளை வழியாகவே காற்றை பூரகம் செய்து பின் இடது மூக்குத் துளை வழியாக இரேசிக்க வேண்டும்.இதுவே பயிற்சியின் ஒரு கட்டமாகும். இதைத் தொடர்ந்து 50 முதல் 60 தடவை வரை செய்யலாம்.
பிரத்தியாகாரம்
இது 5 புலன்களை வசப்படுத்தும் விஞ்ஞானக் கலையாகும். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய பொறிகளின் வழியாக அனுபவிக்கும் நுகர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் பயிற்சி முறை பிரத்தியாகாரம் ஆகும். புலனுகர்வு அளவுக்கு மிஞ்சும் போது உயிராற்றல் அழிகிறது. எனவே அளவுடன் புலனுகாலை அமைத்து உடலை நோய்வாய்படாமல் அழியாமல் காத்து வருவதற்கும் மனதை நம் கட்டுபாட்டிற்கு கொண்டு வரவும் இப்பயிற்சி உதவுகிறது.
தாரணை
இது மனதை ஒருமுகப்படுத்தும் (Concentration) கலை (அ) பயிற்சி முறையாகும். பிரத்தியாகாரப் பயிற்சி உடையவர்களுக்கு இது எளிதில் வாய்க்கும். ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி மனதை ஒருநிலைப்படுத்துதல் தாரணை எனப்படும். வாயு தாரணை என்பது பிராணாயமத்தின் மூலம் மனதை ஒருமுகப்படுத்தி குண்டலினியை எழுப்பும் பயிற்சி முறை ஆகும் என்பர்.
தியானம்
மனதை வசப்படுத்தும் பரிபூரண விஞ்ஞானக்கலை, மனவிசை புலன்களின் வழியே பொறிகள் வாயிலாக கண்டபடி அலைக்கழிக்கப்படுவதை தடுத்து அதனை பிரசுத்தியாகாரம் தாரணை வழியாக ஒருமுகப்படுத்தி நம் வசப்படுத்தி ஏதேனும் ஒரு பொருள் பற்றிய இடைவிடாச் சிந்தனை (Cessation of all thoughts except one) சித்தர்கள் கடவுளையே சிந்தித்து இறைமையை உணர்வதற்கு தியானமே, கருவியாக ஆயிற்று, ஆழ்நிலை தியானம் (Transcendental Meditation) என்பது மேலும் ஒரு படி மேலே போய் சிந்தனையற்ற எண்ண அலைகள் நீங்கிய அமைதியான மன நிலையை அடைவதாகும்.
தியானத்தின் மூலம் மனக்கிலேதம் (Stress) நீங்குகிறது. மனமும், உடலும் புத்துணர்ச்சி பெறுகின்றன. மனம் அதிகம் பாதிப்பதால் உண்டாகும் அதி குருதி அழுத்த நோய், மதுமேக நோய் இவை வராது தடுக்கவும், வந்து விட்டால் அந்நோய்களைக் கட்டுப்படுத்தவும் தியானம் பயன்படுகிறது. தியானப் பயிற்சியின் மூலமாக குண்டலினியை எழுப்புதல் எளிய முறையாகும். தியானத்தை எப்போது வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம். தியானத்தை சுக ஆசனத்தில் இருந்து கொண்டு அல்லது பத்மாசனத்தில் இருந்துக் கொண்டு செய்யலாம் (அ) படுத்துக் கொண்டேயும் செய்யலாம், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.
சமாதி
அஷ்டாங்க யோகத்தின் இறுதி நிலை, சித்தர்கள் இறைநிலையை உணர்ந்து இறை தன்மை அடையும் நிலை ஆகும். பொதுவாக கூறும்போது குறிப்பிட்ட இலக்கை நோக்கி மனதை செலுத்தி இறுதியில் இந்த இலக்கை அடைதல் சமாதி எனலாம்.

No comments:

Post a Comment