23 December 2015

பிரளயம், கால சக்கரம், யுகங்கள், 14 உலகங்கள்

பிரளயம், கால சக்கரம், யுகங்கள், 14 உலகங்கள்:
1. யுகங்கள் நான்கு, கிருத (சத்திய) யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம்.

2. கலியுகத்தின் கால அளவு நான்கு லட்சத்து முப்பத்திரண்டு ஆயிரம் ஆண்டுகள் (4,32,000). துவாபர யுகம் இக்கால அளவைப் போல் இரண்டு பங்கு (8 64,000), திரேதா யுகம் மூன்று பங்கு (12,96,000), கிருத யுகம் நான்கு பங்கு (17,28,000).

3. நான்கு யுகங்கள் சேர்ந்தது ஒரு சதுர்யுகம். இதன் மொத்த கால அளவு நாற்பத்து மூன்று லட்சத்து இருபது ஆயிரம் ஆண்டுகள் (43,20,000).

4. 71 சதுர்யுகங்களைக் கொண்டது ஒரு 'மன்வந்திரம்' என்று அழைக்கப் பெறும். மன்வந்திரத்தின் அதிகாரியை 'மனு' என்று புராணங்கள் குறிக்கிறது.

5. 14 மன்வந்திரங்களின் கால அளவு ஒரு 'கல்பம்' . இது 1000 சதுர்யுகங்களைக் கொண்டது. இதுவே பிரம்மாவின் ஒரு பகல் பொழுது.

6. பிரம்மாவின் ஒரு நாள் இரு கல்ப காலம். முதல் கல்பமான பகல் பொழுதின் முடிவில் பிரளயம் வரும். பிரயளத்தில் 14 உலகங்களில் மூன்று (பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம்) மட்டும் முழுவதுமாய் அழியும்.

7. இப்பிரளயம் பிரமனின் இரவுப் பொழுது முழுவதும் நீடிக்கும் (ஒரு கல்ப காலம்). அதாவது அடுத்த 1000 சதுர்யுகங்களுக்கு படைப்பு இல்லை. அச்சமயத்தில் ஆன்மாக்கள் உருவமற்று, செயலற்று மாயையாகிய கோளத்தில் கட்டுண்டு இருக்கும்.

8. பிரமனின் இரவுப் பொழுது முடிந்தவுடன் மீண்டும் மூன்று உலகங்களின் படைப்பு துவங்கும். இக்கால அளவின் படி, பிரமனின் ஒரு நாள், மாதமாகி, மாதம் வருடமாகி, அவ்வருடங்கள் நூறு கடந்தால் பிரமனின் ஆயுள் முடிவுறும். தற்பொழுது இருக்கும் பிரம்மாவுக்கு இவ்வகையில் 50 ஆண்டுகள் கடந்து விட்டது.

9. தற்பொழுது நடப்பது 'சுவேத வராக கல்பம்'. இதன் 14 மன்வந்திரங்களில் இப்பொழுது நடைபெறுவது 7 ஆம் (வைவசுவத) மன்வந்திரம். இம்மன்வந்திரத்தின் 71 சதுர்யுகங்களில் நாம் இருப்பது 28 ஆம் சதுர்யுகத்தில்.

10. தற்பொழுது நடைபெறும் கலியுகத்தில் சுமார் 5100 ஆண்டுகள் கடந்துள்ளது. இக்கலியுகம் முடிவுற சுமார் 4,27,000 ஆண்டுகள் மீதமுள்ளது.

பிரமனின் கால அளவின் படி நூறு ஆண்டுகள் கழிந்ததும் உருவாகும் பிரளயம் 'மகா பிரளயம்' என்று அழைக்கப் பெறும். இப்பிரளயத்தில் உலகங்களும் முழுவதுமாய் அழியும். இதன் பிறகு பல கோடி ஆண்டுகளுக்கு பின்னரே அடுத்த பிரமனின் சிருஷ்டியும், படைப்பையும் இறைவன் துவக்கி வைப்பான்.

பிரமனின் இரவுப் பொழுது ஒரு கல்ப காலம் (ஆயிரம் சதூர்யுகங்கள்) முக்தி பெறாத ஆன்மாக்கள் செயலற்று மாயையில் அமிழ்ந்து இருக்கும். இக்காலம் 'கேவல திசை' என்று அழைக்கப் பெறும். ஏனினில் ஆன்மாக்கள் முக்திக்கான எவ்வித பிரயத்தனமும் மேற்கொள்ள இயலாத நிலையில், காலமானது வியர்த்தமே கழியும்.

நாம் இருக்கும் அண்டத்தில் மொத்தம் 14 உலகங்கள் உள்ளன. பூமிக்கு மேலே 6 உலகங்களும், பூமிக்கு கீழே 7 உலகங்களும் உள்ளன. 'புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே பின் கரந்தவளே' என்று அபிராமி அந்தாதியில் குறிக்கிறார் அபிராமி பட்டர்!!!


பூமிக்கு மேலே உள்ள 6 உலகங்கள்:
சத்தியலோகம் (பிரம்மா)
தபோலோகம் (தேவதைகள்)
ஜனோலோகம் (பித்ருக்கள்)
மகர்லோகம் (முனிவர்கள்)
சுவர்லோகம் (இந்திரன், தேவர்கள்):
புவர்லோகம் (கிரகங்கள், நட்சத்திர தேவதைகள்):


பூமிக்கு அடியில் உள்ள 7 உலகங்கள்:
அதல லோகம்:
விதல லோகம் (அரக்கர்கள்):
சுதல லோகம் (மகாபலி):
தலாதல லோகம்:
மகாதல லோகம் (அசுரர்கள்):
ரசாதல லோகம்:
பாதாள லோகம் (வாசுகி முதலான பாம்புகள்):

'அதல பாதாளத்தில் வீழ்வது' என்னும் வார்த்தைப் பிரயோகம் 'அதல லோகம்' முதல் 'பாதாள லோகம்' வரையிலான உலகங்களின் பெயரால் பழக்கத்துக்கு வந்தது.

ஸ்ரீமகாவிஷ்ணு கல்பத்தின் தொடக்கத்தில் வராக அவதாரம் எடுத்தருளி, பாதாள லோகத்தில் நீரில் அமிழ்ந்து இருந்த பூமியை எடுத்து, மீண்டும் அதன் ஸ்தானத்தில் வைத்தருளினார். இதனால் இக்கல்பம் 'சுவேத வராக கல்பம்' என்று அழைக்கப் பெறுகிறது!!!

No comments:

Post a Comment