11 January 2016

சிருஷ்டியில் மனிதனை விட பறவைகள் மற்றும் மிருகங்களுக்கு ஒருசில விசேஷ சக்திகள் இறைவனால் அருளப்பட்டுள்ளன.



சிருஷ்டியில் மனிதனை விட பறவைகள் மற்றும் மிருகங்களுக்கு ஒருசில விசேஷ சக்திகள் இறைவனால் அருளப்பட்டுள்ளன.

குறிப்பாக முன் ஜன்மத் தொடர்பும், முற்பிறவி நினைவாற்றலும் பசு, நாய் போன்ற சில மிருகங்களுக்கும், காக்கை, கருடன் போன்ற சில பறவைகளுக்கும் உண்டு.

இவ்வுலகில் சில காலம் வாழ்ந்து இறந்துவிட்ட முன்னோர்கள், அவரவர்களின் கர்மவினைக்கேற்ப மரம், செடி, கொடி, புழு, பூச்சி, பறவை, மிருகம், மனிதன் போன்ற பற்பல வடிவில் மறுபிறவி எடுக்கிறார்கள்.

ஆனாலும், இவ்வாறு மறுபிறவி எடுக்கும் முன்பாக பித்ருக்கள் சில காலம் காக்கை வடிவில் இருப்பார்கள். அதன்பின்னரே அவர்களின் கர்ம வினைகள் யமதர்ம ராஜ சபையில் ஆராயப்பட்டு அவரவர்களுக்குரிய பிறவிகள் தீர்மானிக்கப்பட்டு வேறு பிறவிகளை எடுக்கிறார்கள்.

ஆக, ஒவ்வொருவரும் இறந்த பின்னர் சில காலம் (இறந்தவருக்கான அடுத்த பிறவி தீர்மானமாகும் வரை) காக்கை வடிவில் இருக்க வேண்டும் என்பது நியதி. ஆகவேதான், காக்கையை பித்ருக்கள் வடிவில் காண்கிறோம். மேலும், இறந்தவர்களுக்காக சிராத்தம் செய்யப்படும்போது (திதி கொடுக்கும்போது), இறந்தவரின் பெயரைச் சொல்லி அளிக்கப்படும் பிண்டத்தை (சாத உருண்டையை) காக்கைக்கு வைக்க வேண்டும் என்றும், அந்த சாதத்தை காக்கைகள் சாப்பிடுவதால் பித்ருக்களான முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் தர்ம சாஸ்திரம் கூறுகிறது.

குருவி, காக்கை, கருடன் போன்ற பறவைகள் எழுப்பும் சப்தத்தின் (ஒலியின்) மூலம் எதிர்கால நிகழ்வைத் தெரிவிப்பது ‘சகுன சாஸ்திரம்’ எனப்படும்.

இதில், பறவைகள் எழுப்பும் ஒலிக்கு, அந்த ஒலியை எழுப்பும் பறவை, ஒலி எழும் காலம், திசை ஆகியவற்றுக்கு ஏற்ப தனித்தனி பலன்கள் உண்டு. அதன்படி காக்கை எழுப்பும் ஒலிக்கும் தனிப் பலன் உண்டு.

நமது பார்வைக்கு, மற்ற பறவைகளைக் காட்டிலும் காக்கைகளே அதிகமாகக் காணப்படுவதாலும், காக்கை எழுப்பும் சப்தம் மற்ற பறவைகளின் சப்தத்தைவிட சற்று அதிகமாக இருப்பதாலும், காக்கை எழுப்பும் சப்தத்தின் பலன் நமது நினைவில் இருக்கிறது, மற்ற பறவைகள் எழுப்பும் சப்தத்தின் பலன் நினைவில் இருப்பதில்லை.

இதையொட்டியே காக்கை சப்தித்தால் (கரைந்தால்) விருந்தாளி வரப் போகிறார் போன்ற சிற்சில சகுன சாஸ்திர பலன்கள் நம்மால் நினைவு கூரப்படுகின்றன.

No comments:

Post a Comment