11 September 2016

எதிர்மறை எண்ணங்களை களைவது எப்படி

*எதிர்மறை எண்ணங்களை களைவது எப்படி



எவ்வளவு உத்வேகமான ஆளாக இருந்தாலும், எதிர்மறை எண்ணங்கள் அவர்களை புரட்டிப்போட்டுவிடும். எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக்கூட்டும் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருக்கும். அதை நிறுத்துவது மிகவும் கடினம் போல நமக்கு தோன்றும். அவை நமக்கு விரைவில் கொடுப்பது வலியும் வேதனையும்தான். இதை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன்.

எதிர்மறை எண்ணங்கள் நம்மை இந்த நொடியில் ஒட்டாமல் செய்துவிடும். அவற்றை நாம் நிறுத்தாவிடில் அவை மிகவும் வலிமை கொண்டதாக மாறிவிடும். அதன் சக்தியை இப்படியும் சொல்லலாம்.. ஒரு மேடான பகுதியிலிருந்து உருண்டோடி வருகின்ற பந்து உருள உருள பெரிதாகிக்கொண்டே வருவதைப்போன்றது.

நேர்மறை எண்ணங்களுக்கும் அதேபோன்ற சக்தி உண்டு.

எதிர்மறை எண்ணங்கள் பொங்கி வழியும்போது அதைப்போக்க எனக்கு உதவிய 10 விஷயங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன்.

1. தியானம்

தியானமோ யோகாவோ எதுவாக இருந்தாலும் சரி அது இறைநம்பிக்கை கொண்டதாகவோ அல்லது சாதரணமானதாகவோ இருக்கலாம். ஆனால் என்ன நடக்கும் என்ற பயத்தை போக்கி உங்கள் வாழ்வின் இந்த நிமிடத்தில் உங்களை வாழவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

2. புன்னகை

கடினமான நொடிகளில் சிரிப்பது மிகவும் கடினமாக தோன்றும். ஒரு கண்ணாடியின் முன்பு உங்களை நிறுத்திக்கொள்ளுங்கள். உங்கள் முகத்தை பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக புன்னகையை வரவழையுங்கள். முடிந்தால் ஏதாவது காமெடி சேனல் போட்டு பாருங்கள். சிறிது நேரத்தில் உங்கள் இறுக்கம் குறைந்து தசைநார்கள் இலகுவாகிவிடும். சிரிப்பைவிட சிறந்த மருந்து உலகில் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.

3. நண்பர்கள்

முடிந்தவரை நேர்மறையாக பேசும் நண்பர்கள் சூழ இருங்கள். உங்களை அறியாமலே அவர்கள் உங்கள் கவனத்தை மாற்றுவார்கள்.

4. எண்ணங்களை நேர்மறைக்கு மாற்றுதல்

சிரமங்களை பற்றியும் கஷ்டங்களை பற்றியும் நினைப்பதை கொஞ்சம் மாற்றி, சவால் இருந்தாலும் சமாளிக்கலாம் என்று நினைத்துப்பாருங்கள்.

5. குறைகூறாதீர்கள்

உங்களைப் பற்றியோ மற்றவர்களை பற்றியோ குறைகூறுவதை முதலில் நிறுத்துங்கள். அது எந்தவிதத்திலும் உங்களுக்கு உதவப்போவதில்லை. அப்படியே ஏதேனும் தவறு நடந்திருந்தால் அதை சரிசெய்ய உங்கள் பங்கு என்ன என்பதை நினைத்துப்பாருங்கள். நல்லதே நடக்கும்.

6. உதவுங்கள்

எதிர்மறை எண்ணங்களின் கவனத்தை திசைதிருப்ப இதைவிட சரியான வழி இருப்பதாய் தோன்றவில்லை அடுத்தவருக்கு ஏதாவது ஒரு உதவி (அது சிறியதோ அல்லது பெரியதோ) செய்யும்போது உங்கள் மனதில் தானாகவே நேர்மறை எண்ணங்கள் முளைவிட துவங்கும்.

7. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

தவறுகள் அற்ற மிகவும் சரியான மனிதன் யாரும் கிடையாது. நடந்தது நல்லதற்கே என்று நினைத்து சம்பவங்களை நேர்மறையாக எதிர்கொள்ளும்போது, அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

8. பாடுங்கள்

உங்களுக்கு தெரிந்த ஏதாவது பாடலை முனுமுனுக்க துவங்குங்கள் அது உங்கள் மனதின் சுமையை குறைத்து லேசாக்கும்.

9. நன்றி கூறுங்கள்

நன்றி கூறுவதைவிட சிறந்த நேர்மறை உணர்வு இருக்கமுடியாது. ஏற்கெனவே நீங்கள் பெற்றிருக்கும் அனைத்திற்கும் நன்றி கூறுங்கள். அது மேலும் நல்ல சம்பவங்களையும் இன்னும் அதிக நேர்மறை எண்ணங்களையும் உங்களிடம் இழுத்து வரும்.

10. நல்லதை படியுங்கள்

தினமும் காலையில் செய்தித்தாள் படிப்பவரா நீங்கள்? முடிந்தவரை அதில் உள்ள எதிர்மறை செய்திகளை படிக்காதீர்கள். அது மேலும் எதிர்மறை எண்ணங்களை உங்களிடம் தூண்டிவிடும். தூண்டப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் உங்களிடம் அதேபோன்ற கெட்ட சம்பவங்களை உங்களிடம் இழுத்துவரும். ஏனென்றால் நீங்கள் அதில் உங்கள் கவனத்தை செலுத்தினீர்கள் அல்லவா..? முடிந்தவரை நல்ல செய்திகளையும் நல்ல வாசகங்களையும் படியுங்கள். அது எப்போதுமே உங்களுக்கு நல்லது.

எங்கேயோ படித்தது நினைவுக்கு வருகிறது..

உங்கள் எண்ணங்களை கவனியுங்கள், அது சொல்லாக மாறக்கூடும்.
உங்கள் சொற்களை கவனியுங்கள், அது செயலாக மாறக்கூடும்.
உங்கள் செயல்களை கவனியுங்கள், அது பழக்கமாக மாறக்கூடும்.
உங்கள் பழக்கங்களை கவனியுங்கள், அது குணமாக மாறக்கூடும்.
உங்கள் குணத்தை கவனியுங்கள், அது தலைவிதியை மாற்றக்கூடும்.

No comments:

Post a Comment