23 November 2016

காலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. அதைக் கேட்டு நாமும் சூரியனைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்வோம். ஆனால் இதுவல்ல சூரிய நமஸ்காரம். தொடர்ச்சியாக செய்யப்படும் 24 யோகாசனங்கள்தான் சூரியநமஸ்காரம். இதை ஏன் செய்ய வேண்டும், இதை செய்வதனால் என்ன பயன் என்பதை விளக்குகிறது இக்கட்டுரை…சத்குரு:யோகா என்ற வார்த்தைக்கு “உங்களை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும்” என்று அர்த்தம். யோகா என்ற வார்த்தை அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு வார்த்தை. அது எந்த ஒரு குறிப்பிட்ட பயிற்சியையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நீங்கள் எதைச் செய்தாலும் அது யோகாவாக இருக்கலாம். உங்கள் வளர்ச்சிக்கான செயல்முறையாக அதைப் பயன்படுத்தினால், அதுதான் யோகா.ஆசனம் என்றால் உடலை வைத்திருக்கக் கூடிய ஒரு நிலை. உடலை வைத்து எண்ணிலடங்கா ஆசனங்களை உருவாக்க முடியும். அதில் குறிப்பிட்ட சில ஆசனங்கள்தான் யோகாசனங்கள் என்று அறியப்படுகின்றன. நீங்கள் உயர்ந்த நிலையை அடைய உதவும் ஆசனம்தான் யோகாசனம்.உங்கள் தினசரி வாழ்வில் கவனித்தால், நீங்கள் சந்திக்கும் பலவிதமான மனநிலைகள் மற்றும் உணர்ச்சி நிலைகளுக்கு ஏற்ப, உங்கள் உடல் பலவிதமான நிலைகளை எடுக்கிறது. நீங்கள் கோபமாக இருந்தால், ஒரு வகையில் உட்காருவீர்கள்; அமைதியாக இருந்தால், இன்னொரு விதமாக உட்காருவீர்கள். இப்படி உங்கள் உடலை ஒரு குறிப்பிட்ட நிலையில் வைத்திருந்தால், அது உங்கள் விழிப்புணர்வை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு உயர்த்தி, உங்கள் சக்திகளை அதிர்வடையச் செய்கிறது. இதுதான் யோகாசனங்களுக்குப் பின்னால் இருக்கும் நியதி.சூரிய நமஸ்காரம் என்றால் என்ன?தொடர்ச்சியாக செய்யப்படும் 24 யோகாசனங்கள்தான் சூரியநமஸ்காரம் என்று அழைக்கப்படுகிறது. அதை சூரியநமஸ்காரம் என்று அழைப்பதிலேயே பல அர்த்தங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் சக்திப் பகுதி. சூரிய நமஸ்காரம் உங்கள் நாடிகளைத் திறந்து, உங்களுக்குள் இருக்கும் சூரியனை தூண்டிவிடுகிறது, இதன் மூலம் நீங்கள் மிகவும் துடிப்பாக, உயிர்ப்புடன் இருக்க முடியும். மெதுவாக 100 சூரியநமஸ்காரங்கள் செய்யும் நிலைக்கு வந்துவிட்டால், நீங்கள் ஒரு தடகள வீரரைப் போல ஆகிவிடுவீர்கள்.இன்னொரு விஷயம் என்னவென்றால், உங்களை பேணிப் பாதுகாக்கின்ற சூரியனுக்கு தினமும் காலையில் செய்யும் ஒரு வழிபாடாகவும் அது இருக்கிறது.உங்களுக்கு இந்த உடல் இருப்பதன் காரணமே சூரியன்தான், இல்லையா? இந்தக் கலாசாரத்தில் வழிபாடு செய்வதென்றால் சில சடங்குகளைச் செய்வதோ அல்லது சில மந்திரங்களை முணுமுணுப்பதோ அல்ல. உங்கள் முழு உடலையுமே வழிபாடாக ஆக்குவதுதான் இங்கு வழிபடும் முறை.சூரிய நமஸ்காரத்தின் பலன்கள்:போதுமான அளவு சூரியநமஸ்காரம் செய்தால், உங்களுடைய தூங்கும் நேரம் மிகவும் குறைந்து, எப்போதும் ஒரு உயர்ந்த நிலையிலேயே இருப்பீர்கள்.நீங்களாக எந்த முயற்சியும் செய்யாமலேயே உங்கள் தூக்கம் 4 அல்லது 41/2 மணி நேரமாக மிகச் சுலபத்தில் குறைந்துவிடும். சில வாரப் பயிற்சியிலேயே உங்கள் உற்பத்தித் திறனும், செயல்திறனும் மேம்பட்டுவிடும்.அது தன்னளவில் ஒரு முழுமையான பயிற்சியாகும்.அதற்கு எந்தவிதமான கருவிகளும் தேவையில்லை. அது ஒரு வரம், ஏனென்றால் நீங்கள் பயணம் செய்து கொண்டிருந்தாலும், உங்களது பயிற்சிகளைத் தொடர முடியும். சூரியநமஸ்காரத்தைத் சரியாக செய்து பாருங்கள்; உங்கள் உடலில் இருக்கும் அத்தனை பகுதிகளும் நீண்டு, மடங்கி, அவற்றுக்குத் தேவையான உடற்பயிற்சி கிடைத்துவிடும். இதைத் தவிரவும், உங்கள் சக்தி நிலைகளும் உயர்ந்த நிலையை அடைவதால், வாழ்க்கையின் மேடு, பள்ளங்களை பெரிய சிரமங்கள் இல்லாமல் எதிர்கொள்ள முடியும். அதை ஒரு குறிப்பிட்ட விழிப்புணர்வோடு செய்பவருக்கு சூரியநமஸ்காரம் அற்புதங்களை நிகழ்த்தும். தியானத் தன்மைக்குள் நுழைவதற்கு இது மிக எளிமையான ஒரு வழி.யோகப் பயிற்சி செய்வதால், ஒருவர் நாள்பட்ட நோய்களான ஆஸ்துமா, இரத்தக் கொதிப்பு, மூட்டு வலி போன்றவற்றிலிருந்து விடுதலை பெற முடியும். ஆனால் யோகா என்பது ஒரு சிகிச்சை முறை அல்ல.நீங்கள் யோகாசனங்களை பயிற்சி செய்து வந்தால், அதற்கு நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்பது வேறு விஷயம். ஆனால் இதை ஒரு சிகிச்சை முறையாகப் பயன்படுத்தக் கூடாது. ஒரு சிகிச்சை முறை என்றால், உங்களுக்கு ஒரு உடல் கோளாறு ஏற்பட்டால், நீங்கள் மருத்துவரிடம் செல்கிறீர்கள், அவர் உங்களுக்கு மருந்து கொடுக்கிறார்.நீங்கள் எத்தனை காலம் அந்த மருந்தை சாப்பிடுவீர்கள்?உங்களுடைய பிரச்சனை நீடிக்கும் வரை அந்த மருந்தை உட்கொள்வீர்கள். பிரச்சனை முடிந்தவுடன், மருந்துக்கு எந்த அவசியமும் இல்லை. யோகாசனத்தையும் இப்படி எண்ணக் கூடாது. நீங்கள் யோகாசனங்கள் செய்ய ஆரம்பித்தவுடன், அவற்றை உங்கள் வாழ்க்கையின் ஒரு ஒழுக்கநெறியாகவே கடைபிடிக்க வேண்டும். அதை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.அப்படி செய்தால் அது உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே ஆகிவிடுகிறது. அதிலிருந்து உங்களுக்கு கணக்கிலடங்காத பலன்களைப் பெற முடியும். யோகாசனங்களை அணுக இதுதான் சரியான வழி.ஆனால் எந்த ஒரு குறிப்பிட்ட பலனுக்காகவும் யோகாசனங்களைச் செய்யாதீர்கள். அது அப்படி வேலை செய்யாது.யோகம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம்""இதை அனைவருக்கும் பகிர்வோம்""ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"


No comments:

Post a Comment