6 February 2017

காமாக்ஷிய தர்ஶனம் பண்ணிட்டு போ!

காமாக்ஷிய தர்ஶனம் பண்ணிட்டு போ!

பெரியவாளை தர்ஶனம் செய்வதற்காக ஒரு தம்பதி தங்கள் ஐந்து வயதுப் பெண் குழந்தையுடன் காரில் காஞ்சிபுரம் கிளம்பினார்கள். அவர்களோடு அந்த பக்தரின் அப்பாவும் கிளம்பினார்.

சுங்குவார் சத்திரம் அருகில் வரும்போது, கூட வந்த தாத்தாவுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியிருந்ததால், ரோடின் ஒரு ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு, அப்பாவும் மகனும் ரோடைக் க்ராஸ் பண்ணி எதிர் பக்கம் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஐந்து ஸெகண்டுக்கு ஒருமுறை குறைந்தது இரண்டு வண்டிகளாவது போய்க் கொண்டிருந்தன.

காருக்கு வெளியே தன் அம்மாவுடன் நின்று கொண்டிருந்த குழந்தை, எதிர்பக்கம் வரும் தாத்தாவை பார்த்து விட்டு, ஏதோ இப்போதுதான் புதுஸாகப் பார்ப்பது போல், "தாத்தா!.." என்று கத்திக் கொண்டு, திடீரென்று ஒரேயடியாகத் துள்ளிக் கொண்டு ரோடை க்ராஸ் செய்ய ஆரம்பித்தாள் !

வண்டிகளைப் பற்றிய பயமே அந்தக் குழந்தைக்கு இல்லை!

அம்மாவும் அப்பாவும் தாத்தாவும் பதறிப் போன ஸமயம், வேகமாக வந்த லாரி, அந்தக் குழந்தையை தூக்கி வீசி எறிந்தது!

கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த விபத்து அத்தனை பேரையும் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது!

அலறிக்கொண்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டு காஞ்சிபுரத்தில் ஒரு ஹாஸ்பிடலில் சேர்த்தனர்.

"கொழந்தையை ஒடனே மெட்ராஸுக்கு கொண்டு போய்டுங்க! ரொம்ப ஸீரியஸ் கேஸ்!.."

டாக்டர்கள் கைவிரித்து விட்டு, ஏதோ முதலுதவியைச் செய்தனர்.

விஷயத்தை கேள்விப்பட்டு, காஞ்சிபுரத்தில் இருந்த அவர்களுடைய ஸொந்தக்காரர் ஆஸ்பத்ரிக்கு ஓடி வந்து குழந்தையைப் பார்த்து விட்டு, நேராக பெரியவாளிடம் ஓடினார்.

"பெரியவாளைப் பாக்கறதுக்காக வர்றச்சே... வழில கொழந்தை மேல லாரி மோதிடுத்து! டாக்டர்.. கைவிரிச்சுட்டார்! பெரியவாதான் கொழந்தையைக் காப்பாத்தணும்.."

அழுதார்........

"என்னைப் பாக்க வரச்சேயா ஆக்ஸிடென்ட் ஆய்டுத்து?..."

பெரியவா...சற்று நேரம் கண்களை மூடிக் கொண்டிருந்தார். அப்புறம், பக்கத்தில் இருந்த ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்து அவர் கையில் ப்ரஸாதமாகப் போட்டார்....

"மெட்ராஸுக்கு கொழந்தையப் பாக்க போறச்சே... இதக் குடு !.......போறதுக்கு முன்னாடி, காமாக்ஷிய தர்ஶனம் பண்ணிட்டுப் போ!..."

உறவினரும் உடனேயே காமாக்ஷி கோவிலுக்குச் சென்று தர்ஶனம் பண்ணப் போனார். ஆனால், நடை சார்த்தும் நேரம் என்பதால், அவரால் ஒரே ஒரு க்ஷணம் மட்டுமே அம்பாளை தர்ஶனம் பண்ண முடிந்தது.

நெய்தீபச் சுடரில் ஸர்வாலங்கார பூஷிதையாக பச்சைப் பட்டுப் புடவையுடன், அருள் பொழியும் முகத்தோடும் அமர்ந்திருந்த அம்பாளை ஒரு க்ஷணமே தர்ஶனம் பண்ணினாலும், மனஸில் அந்தக் கோலத்தை இருத்தியபடி மெட்ராஸுக்கு பஸ் ஏறினார்.

நேராக ஹாஸ்பிடலுக்கு சென்று, ICU வில் இருந்த குழந்தையின் தலைமாட்டில் பெரியவா அனுக்ரஹித்துக் கொடுத்த ஆப்பிளை, எப்படியோ வைத்து விட்டார். அழுது கொண்டிருந்த பெற்றோரிடம் பெரியவாளிடம் விஷயத்தைச் சொன்னதைப் பற்றி கூறினார்.

"கொழந்தை coma-க்கு போய்ட்டா! மணிக்கணக்கோ, நாள்கணக்கோன்னு டாக்டர் சொல்றார்...."

அம்மா கதறினாள்.

சில மணி நேரங்கள் கழிந்தது. ICU வாஸலில் குடும்பமே அமர்ந்திருந்தது.

இதோ! குழந்தையின் உடலில் சிறு சிறு அசைவுகள்!

"Coma, மணிக்கணக்கு, நாள்கணக்கு"... என்று பெரிய பெரிய டாக்டர்கள் சொன்னதையெல்லாம் அடித்து த்வம்ஸம் பண்ணிவிட்டு, "அம்மா!..." என்று குழந்தையை அழைக்க வைத்தது... தெய்வத்தின் அனுக்ரஹம் !

அழுகையெல்லாம் நிமிஷத்தில் காணாமல் போனது. ஓரிரண்டு நாட்களில் ஓரளவு நன்றாகத் தேறிய குழந்தையை, தனி ரூமுக்கு ஷிப்ட் பண்ணினார்கள். ஆப்பிள் கொண்டு வந்த உறவினரும் கூடவே இருந்தார்.

"அம்மா....."

தீனமாகக் கூப்பிட்டாள் குழந்தை.

"என்னம்மா?...."

"எங்கூட இருந்த பாப்பா எங்கம்மா?..."

"பாப்பாவா? இங்க ஏதும்மா... பாப்பா? நீ ஆஸ்பத்ரிலன்னா இருக்க! இங்க பாப்பா யாரும் இல்லியேடா!.."

குழந்தை சிணுங்கினாள்.

"அந்தப் பாப்பா எங்கம்மா? எனக்கு... அவகூட வெளையாடணும்.."

ஏதோ அரைகுறை ஞாபகத்தில் உளறுகிறாள் என்று எண்ணி அவளை ஸமாதானப்படுத்தினாள் அம்மாக்காரி...

"எந்தப் பாப்பா? எப்டி இருந்தா சொல்லு! நா.... கூட்டிண்டு வரேன்"

"பச்சைப் பட்டுப்பாவாடை கட்டிண்டு எங்கூடவே இருந்தாளே! அந்த பாப்பாதான்!..."

மற்றபேருக்கு புரியாவிட்டாலும், ஆப்பிள் கொண்டு வந்த உறவினருக்கு பொட்டில் அடித்தார்ப்போல் புரிந்தது!

"போறதுக்கு முன்னாடி, காமாக்ஷியை தர்ஶனம் பண்ணிட்டுப் போ!..."

பெரியவா சொன்னதும், அம்பாள் ஒரு க்ஷணமே தர்ஶனம் தந்தாலும், ஹ்ருதயத்தை விட்டு அகலாவண்ணம், பச்சைப் பட்டுப் புடவையில் காஷி அளித்ததும் அவருக்குப் புரிந்தது!

மேனியெல்லாம் புல்லரித்தது!

பெரியவா சொன்னதுக்கு எத்தனை மஹத்தான அர்த்தம்!

அம்பாளே, ஒரு குழந்தை உருவில் வந்து கூட விளையாடி, விளையாட்டாகவே... அந்தக் குழந்தைக்கு உயிரூட்டியிருக்கிறாள்!

மேனியெல்லாம் புல்லரிக்கிறது!

உறவினர், மற்றவர்களுக்கு இதைச் சொன்னதும், திக்கற்றோருக்கு துணை வரும் பெரியவா இருந்த காஞ்சிபுரம் நோக்கி, விழுந்து விழுந்து நமஸ்கரித்தனர்.

பெரியவா நினைத்தால், ஆப்பிளில் கூட அம்பாளை ஆவாஹனம் பண்ண முடியும்.

ஸர்வம் ப்ரஹ்மமயம் ரே ரே!

அணுவில் இருப்பவள் ஆப்பிளில் மட்டும் இல்லாமலா போவாள்?

அம்மா...! அம்பிகே!..... நம்பிக்கை போதும்.....!

நமக்கெதற்கு மனக்கவலை? நம் தாய் நம்முடன் இருக்கும் போது!

ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்

No comments:

Post a Comment