youtube

11 September 2016

நெஞ்சு சளி

1. நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி

பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்

வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. அஜீரணம்

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம்

படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. உடம்புவலி

சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. ஆறாத புண்

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. கண் நோய்கள்

பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. மலச்சிக்கல்

தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. கபம்

வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

24. நினைவாற்றல்

வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. சீதபேதி

சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. ஏப்பம்

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27. பூச்சிக்கடிவலி

எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

28. உடல் மெலிய

கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

29. வயிற்றுப்புண்

பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

30. வயிற்றுப் போக்கு

கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

31. வேனல் கட்டி

வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

32. வேர்க்குரு

தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

33. உடல் தளர்ச்சி

முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு

நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

35. தாய்ப்பால் சுரக்க

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

37. எரிச்சல் கொப்பளம்

நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

38. பித்த நோய்கள்

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

39. கபக்கட்டு

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

40. நெற்றிப்புண்

நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. மூக்கடைப்பு

இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

42. ஞாபக சக்தி

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

43. மாரடைப்பு

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்

44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. கை சுளுக்கு

கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

46. நீரிழிவு

அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

49. உடல் வலுவலுப்பு

ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது..
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

எதிர்மறை எண்ணங்களை களைவது எப்படி

*எதிர்மறை எண்ணங்களை களைவது எப்படி



எவ்வளவு உத்வேகமான ஆளாக இருந்தாலும், எதிர்மறை எண்ணங்கள் அவர்களை புரட்டிப்போட்டுவிடும். எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக்கூட்டும் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருக்கும். அதை நிறுத்துவது மிகவும் கடினம் போல நமக்கு தோன்றும். அவை நமக்கு விரைவில் கொடுப்பது வலியும் வேதனையும்தான். இதை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன்.

எதிர்மறை எண்ணங்கள் நம்மை இந்த நொடியில் ஒட்டாமல் செய்துவிடும். அவற்றை நாம் நிறுத்தாவிடில் அவை மிகவும் வலிமை கொண்டதாக மாறிவிடும். அதன் சக்தியை இப்படியும் சொல்லலாம்.. ஒரு மேடான பகுதியிலிருந்து உருண்டோடி வருகின்ற பந்து உருள உருள பெரிதாகிக்கொண்டே வருவதைப்போன்றது.

நேர்மறை எண்ணங்களுக்கும் அதேபோன்ற சக்தி உண்டு.

எதிர்மறை எண்ணங்கள் பொங்கி வழியும்போது அதைப்போக்க எனக்கு உதவிய 10 விஷயங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன்.

1. தியானம்

தியானமோ யோகாவோ எதுவாக இருந்தாலும் சரி அது இறைநம்பிக்கை கொண்டதாகவோ அல்லது சாதரணமானதாகவோ இருக்கலாம். ஆனால் என்ன நடக்கும் என்ற பயத்தை போக்கி உங்கள் வாழ்வின் இந்த நிமிடத்தில் உங்களை வாழவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

2. புன்னகை

கடினமான நொடிகளில் சிரிப்பது மிகவும் கடினமாக தோன்றும். ஒரு கண்ணாடியின் முன்பு உங்களை நிறுத்திக்கொள்ளுங்கள். உங்கள் முகத்தை பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக புன்னகையை வரவழையுங்கள். முடிந்தால் ஏதாவது காமெடி சேனல் போட்டு பாருங்கள். சிறிது நேரத்தில் உங்கள் இறுக்கம் குறைந்து தசைநார்கள் இலகுவாகிவிடும். சிரிப்பைவிட சிறந்த மருந்து உலகில் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.

3. நண்பர்கள்

முடிந்தவரை நேர்மறையாக பேசும் நண்பர்கள் சூழ இருங்கள். உங்களை அறியாமலே அவர்கள் உங்கள் கவனத்தை மாற்றுவார்கள்.

4. எண்ணங்களை நேர்மறைக்கு மாற்றுதல்

சிரமங்களை பற்றியும் கஷ்டங்களை பற்றியும் நினைப்பதை கொஞ்சம் மாற்றி, சவால் இருந்தாலும் சமாளிக்கலாம் என்று நினைத்துப்பாருங்கள்.

5. குறைகூறாதீர்கள்

உங்களைப் பற்றியோ மற்றவர்களை பற்றியோ குறைகூறுவதை முதலில் நிறுத்துங்கள். அது எந்தவிதத்திலும் உங்களுக்கு உதவப்போவதில்லை. அப்படியே ஏதேனும் தவறு நடந்திருந்தால் அதை சரிசெய்ய உங்கள் பங்கு என்ன என்பதை நினைத்துப்பாருங்கள். நல்லதே நடக்கும்.

6. உதவுங்கள்

எதிர்மறை எண்ணங்களின் கவனத்தை திசைதிருப்ப இதைவிட சரியான வழி இருப்பதாய் தோன்றவில்லை அடுத்தவருக்கு ஏதாவது ஒரு உதவி (அது சிறியதோ அல்லது பெரியதோ) செய்யும்போது உங்கள் மனதில் தானாகவே நேர்மறை எண்ணங்கள் முளைவிட துவங்கும்.

7. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

தவறுகள் அற்ற மிகவும் சரியான மனிதன் யாரும் கிடையாது. நடந்தது நல்லதற்கே என்று நினைத்து சம்பவங்களை நேர்மறையாக எதிர்கொள்ளும்போது, அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

8. பாடுங்கள்

உங்களுக்கு தெரிந்த ஏதாவது பாடலை முனுமுனுக்க துவங்குங்கள் அது உங்கள் மனதின் சுமையை குறைத்து லேசாக்கும்.

9. நன்றி கூறுங்கள்

நன்றி கூறுவதைவிட சிறந்த நேர்மறை உணர்வு இருக்கமுடியாது. ஏற்கெனவே நீங்கள் பெற்றிருக்கும் அனைத்திற்கும் நன்றி கூறுங்கள். அது மேலும் நல்ல சம்பவங்களையும் இன்னும் அதிக நேர்மறை எண்ணங்களையும் உங்களிடம் இழுத்து வரும்.

10. நல்லதை படியுங்கள்

தினமும் காலையில் செய்தித்தாள் படிப்பவரா நீங்கள்? முடிந்தவரை அதில் உள்ள எதிர்மறை செய்திகளை படிக்காதீர்கள். அது மேலும் எதிர்மறை எண்ணங்களை உங்களிடம் தூண்டிவிடும். தூண்டப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் உங்களிடம் அதேபோன்ற கெட்ட சம்பவங்களை உங்களிடம் இழுத்துவரும். ஏனென்றால் நீங்கள் அதில் உங்கள் கவனத்தை செலுத்தினீர்கள் அல்லவா..? முடிந்தவரை நல்ல செய்திகளையும் நல்ல வாசகங்களையும் படியுங்கள். அது எப்போதுமே உங்களுக்கு நல்லது.

எங்கேயோ படித்தது நினைவுக்கு வருகிறது..

உங்கள் எண்ணங்களை கவனியுங்கள், அது சொல்லாக மாறக்கூடும்.
உங்கள் சொற்களை கவனியுங்கள், அது செயலாக மாறக்கூடும்.
உங்கள் செயல்களை கவனியுங்கள், அது பழக்கமாக மாறக்கூடும்.
உங்கள் பழக்கங்களை கவனியுங்கள், அது குணமாக மாறக்கூடும்.
உங்கள் குணத்தை கவனியுங்கள், அது தலைவிதியை மாற்றக்கூடும்.

சங்கு பொதுவாகவே லட்சுமியின் அம்சத்தை தாங்கி இருக்கிறது.


சங்கு பொதுவாகவே லட்சுமியின் அம்சத்தை தாங்கி இருக்கிறது. சங்குகளில் பல இனங்கள் உண்டு. அவற்றில் பால் சங்கு என்றொரு இனம் உண்டு. வெண்சங்கு என்றும் கூறுவார்கள். இந்தச் சங்கே அபிஷேகங்களிலும் சங்கொலி எழுப்புவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. சாதாரணமாக உள்ள சங்கில் அதன் சுழற்சி இடப்புறம் நோக்கிக் காணப்படும்.
அபூர்வமாக சில சங்குகளில் அது வலமாக ஓடும். அந்த மாதிரியான அபூர்வமான சங்குகளை வலம்புரிச் சங்கு என்பார்கள். தமிழ் மக்களின் ஆதி கலாச்சாரத்தில் ஒன்று இந்த சங்கு ஊதுதல்.சங்கு ஊதினால் அபசகுணம் என்று தற்போது நம் மக்களை நம்ப வைத்துள்ளனர். ஆனால் சங்கின் மகத்துவம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
சங்கின் குணம் நுண் கிருமிகளை அளிக்கும் தன்மை கொண்டது. இதனை அறிந்த நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் சங்கை பாதி பூமிக்கு அடியிலும் மீது மேலே தெரியும் படியும் பதித்திருப்பார்கள். இதனால் வெளியில் இருந்து வரும் காற்று சங்கின் ஊது துவாரம் வழியாக உள்ளே சென்று சங்கின் உள்ளே கிருமிகள் அழிக்கப்பட்டு சுத்தமான காற்றாக வீட்டுக்குள்ளே வருகிறது.
இதனால் தான் இன்று வரை சங்கை வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுகின்றனர். பழங்காலங்களில் அரண்மனைகளில் அரச விழாக்கள் ஆரம்பிக்கும் முன்பும், போருக்கு தயாராகும் போது சங்கினை ஒலிக்க வைப்பார்கள். இப்படி ஓசை தரும் சங்கு பாசம் தரும் சங்காக குழந்தைகளுக்கு பால் பருக்குவதற்கும் அந்நாளில் பயன்படுத்தினர்.
வெண்மை நிற பால் சங்கை உரைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள கிருமிகள் அழிக்கபடுவதோடு பல விதமான நோய்களும் குணமாகிறது. சங்கு ஒலியில் தீய சக்திகள் நீங்கி நல்ல சக்திகள் உருவாகிறது. ஆலயங்களில் பூஜைகள் ஆரம்பிக்கப்படும் போது சங்கு முழங்கும் செய்து பூஜைகள் செய்யப்படும்.
மகாலட்சுமிக்கு ஒ

முதல் திருமுறை 36 வது திருப்பதிகம்

தலையின் தொடை மாலை அணிந்து
கலை கொண்டது ஒரு கையினர் சேர்வாம்
நிலை கொண்ட மனத்தவர் நித்தம்
மலர் கொண்டு வணங்கும் ஐயாறே.

பாடல் விளக்கம்‬:

தலையோட்டினால் தொகுக்கப்பட்டுள்ள மாலையை அணிந்து மானைக் கையின்கண் கொண்டவராகிய சிவ பிரானது இடம், இறைவன் திருவடிக்கண் நிலைத்த மனமுடையவராகிய அடியவர் நாள்தோறும் மலர்கொண்டு தூவி வழிபாடு செய்யும் திருவையாறாகும்.
      -திருவையாறு திருமுறை பதிகம்,
திருமுறை : முதல் திருமுறை 36 வது திருப்பதிகம்,
அருளிச்செய்தவர் :திருஞானசம்பந்த சுவாமிகள்.

8 September 2016

சைவத்தின் மாமந்திரம் ‘நமசிவாய’ எனும் ஐந்து எழுத்துக்கள் மட்டுமே.

சைவத்தின் மாமந்திரம் ‘நமசிவாய’ எனும் ஐந்து எழுத்துக்கள் மட்டுமே. அந்த ‘மா மந்திரம்’ திருவைந்தெழுத்து. மந்திர ராஜம், பஞ்சாட்சரம் போன்ற இதர பெயர்களாலும் இம்மந்திரம் ஓதப்படுவதுண்டு.

சிவ வழிபாட்டில் திருநீறும், ருத்திராட்சமும், புறச்சாதனங்களாக விளங்க ‘நமசிவாய’ எனும் திருவைந்தெழுத்து அகச்சாதனமாக விளங்குகிறது.

“ வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது

நாதன் நாமம் நமசிவாயவே “ என திருஞான சம்பந்தரும்,

“ கற்றுணை பூட்டியோர் கடலினிற் பாய்ச்சினும்

நற்றுணை யாவது நமசிவாயவே “ என திருநாவுக்கரசரும்,

“ நற்றவா உனைநான் மறக்கினும் சொல்லும்

நா நமசிவாயவே” என சுந்தரரும் கூறியுள்ளனர்.

மாணிக்கவாசகப் பெருமானும், “நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க” என்றே தனது சிவபுராணத்தைத் துவக்கியுள்ளார்.

ஆதி மந்திரம் ஐந்தெழுத்து ஓதுவார் நோக்கும்

மாதிரத்தும் மற்றை மந்திர விதி வருமே

என சேக்கிழார் பெருமானும் ஆதிமந்திரம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இப்பஞ்சாட்சரமானது, தூல பஞ்சாட்சரம், சூக்கும பஞ்சாட்சரம், அதி சூக்கும பஞ்சாட்சரம், காரண பஞ்சாட்சரம், மகா காரண பஞ்சாட்சரம் என ஐந்து வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

நமசிவாய எனும் எளிய ஐந்தெழுத்துக்களே தூல பஞ்சாட்சரம் எனப்படும். இதில் ‘ந’ என்பது திரோதாண சக்தியையும், ‘ம’ என்பது ஆணவமலத்தையும், ‘சி’ என்பது சிவத்தையும், ‘வா’ என்பது திருவருள் சக்தியையும், ‘ய’ என்பது ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன. இப்பிறவியில் இன்பமாக வாழ விரும்புபவர்கள் ஓத வேண்டிய மந்திரமே நமசிவாய.

மேற்கூறிய ஐந்தெழுத்துக்களை இடம்மாற்றி ‘சிவாய நம’ என்று ஓதுவதே சூக்கும பஞ்சாட்சரம். தூலப் பஞ்சாட்சரத்தில் இரு மலங்களை பின்னுக்குத்தள்ளி, சிவத்தையும் சக்தியையும் முன்னிறுத்தி ஓதுதல் வேண்டும். முக்திப் பேறு விரும்புபவர்கள் ஓதக்கூடிய மந்திரம் இதுவே.

“சிவாய நம என்று சிந்திப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை “ என ஒளவைப் பிராட்டியும், “செம்பும் பொன்னாகும் சிவாயநம எண்ணில்” என திருமூலரும் இதன் சிறப்பைக் கூறியுள்ளார்.

சிவாய நம எனும் சூக்கும பஞ்சாட்சரம், நடராசப் பெருமானின் ஞானத் திருவுருவைப் பிரதிபலிப்பதாகவும் கூறுவார்கள். ‘சி’ உடுக்கை ஏந்திய திருக்கரத்தையும், ‘வா’ தூக்கிய திருவடியைக் காட்டும் இடது கரத்தையும். ‘ய’ அஞ்சேல் என்ற வலது அபய கரத்தையும், ‘ந’ அனலேந்திய இடக்கரத்தையும், ‘ம’ முயலகன் மீது ஊன்றிய திருவடியையும் குறிப்பனவாக உள்ளன.

சிவசிவ என்ற நான்கெழுத்து மந்திரமே அதிசூக்கும பஞ்சாட்சரம். மும்மலங்களை அறுத்தெறிந்த பின்னரும் தொடரும் வாசனா மலத்தையும் போக்க வேண்டும் என எண்ணுபவர்கள் ‘சிவசிவ’ என்ற காரண பஞ்சாட்சரத்தை ஓதி, உன்னத முக்திநிலையை எய்தலாம். ‘சி’ என்ற ஓரெழுத்து மந்திரமே மகா காரண பஞ்சாட்சரம் என அழைக்கப்படுகிறது. மேற்கூறிய ஐந்துவகை பஞ்சாட்சரத்தில் பிந்தைய மூன்றிலும் ஐந்தெழுத்துக்கள் முழுமையாக இல்லாவிடினும், ஐந்தெழுத்து மந்திரத்திற்கு ஒப்பானதே. முதல் இரண்டை மட்டுமே நம்மைப் போன்ற எளிய மக்களால் ஓதி, அருள்பெற இயலும் வண்ணம் உள்ளது. ஞானியர், துறவியர் மட்டுமே இதர மூன்றை ஓதவல்லவர்கள்.

எப்போது ஓதலாம்?

எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், நமசிவாய என்றோ சிவாய நம என்றோ ஓதலாம். எவ்வித பேதமும் இம்மந்திரத்திற்கு இல்லை. எனினும் குறைந்த பட்சம் படுக்கையிலிருந்து எழும் போதும், உணவு உண்ணும் போதும், நற்காரியங்களைத் தொடங்கும்போதும், உறங்கச்செல்லும் போதும் இதனைக் கூறலாம், ஆலயச் சுற்றின் போது இதர மந்திரங்கள், பதிகங்கள் ஓதாவிடினும், இதைமட்டுமே ஓதினால் சிவ புண்ணியம் கிட்டும்.

குழந்தைகளுக்குப் பெயர்

நாம் அடிக்கடி நமசிவாய மந்திரத்தைக் கூறவேண்டும் என்பதற்காக முன்னோர்கள் ஒரு யுக்தியைக் கையாண்டனர். அதாவது மழலைகளுக்கு நமசிவாய என்ற பெயரைச் சூட்டி அப்பெயரை உச்சரிப்பதன் மூலம் நம்மையறியாமல் சிவ மந்திரத்தை உச்சரிக்கச் செய்து சிவனருள் கிடைக்க வழி செய்தனர்.

நமசிவாய எனும் அருமந்திரம் ஓதினால் எவ்வித உடற்பிணியும் வராது என்ற பொருளில் சேக்கிழார் கூறியுள்ளார். உறக்கத்திலும், உறக்கமில்லா நிலையிலும், நமசிவாய எனும் ஐந்தெழுத்தை நெஞ்சுருகத் தினமும் வழிபடுவோருக்கு எமனும் அஞ்சுவான். ஐந்தெழுத்து மந்திரம் எமனையே அஞ்சும் அளவிற்கு உதைத்துவிடும் என்கிறார் திருஞானசம்பந்தர்.

உமாபதியின் சூட்சம உத்தரவு

உமாபதியின் சூட்சம உத்தரவு

ஸ்ரீ பெரியவா கார்வேட் நகரில் முகாமிட்டிருந்த சமயம், சென்னையிலிருந்து காரில் சபேசன் குடும்பம் வந்திருந்தது. ஸ்ரீ பெரியவாளின் தரிசனத்திற்கு பின் சாயங்காலம் தங்கள் ஊருக்கு திரும்புவதற்கு தயாராயினர். பெரியவாளிடம் உத்தரவாகிவிட்டால் கிளம்பலாமென்று காத்திருந்தனர்.

தட்சிணாமூர்த்தி ஸ்ரீ பெரியவா ஒரு வில்வமரத்தடியில் அமர்ந்திருக்க சபேசன் குடும்பத்தினர் வந்தனம் செய்து பிரசாதத்துக்கு நின்றனர். அவர்களுக்கு பிரசாதம் கொடுக்கப்பட்டது. சபேசன் காரை நோக்கி நடந்தார். அப்போது அவரை ஸ்ரீ பெரியவா சொடுக்கு போட்டு கூப்பிட, சபேசன் ஆவலுடன் திருப்பி வந்து நின்றார்.

சற்று தூரத்தில் கருங்கல் ஜல்லி கொட்டப்பட்டிருந்தது. ஸ்ரீ பெரியவாள் இதைக் காட்டி “இதில் கொஞ்சம் சாக்கில் கட்டி வீட்டுக்கு கொண்டு போ” என்றார்.

எல்லோருக்கும் இப்படி பெரியவா உத்தரவிட்டது பெரும் வியப்பாயிருந்தது. கருங்கல் ஜல்லியை கார்வேட் நகரிலிருந்து சென்னைக்கு எடுத்துப் போவானேன்? அதில் அப்படி என்ன ரகசியம் உள்ளது என்றெல்லாம் சுற்றி இருந்தோரை சந்தேகப்பட வைத்தது இந்த உத்தரவு.

மகானிடம் விளக்கம் கேட்க முடியாதல்லவா எனவே உத்தரவு படி சாக்கில் கொஞ்சம் ஜல்லியை மூட்டையாக கட்டி கார் டிக்கியில் வைத்துக் கொண்டு சபேசன் புறப்பட்டார்.

வழியில் மலப்பாதைகள் நிறைந்த புத்தூர் வந்தது. இரவு நாலைந்து நபர்கள் நடுச்சாலையில் நின்று காரை மறித்தார்கள். அவர்கள் கொள்ளையர்கள் என்பதில் சந்தேகமில்லை.

கொள்ளையர்கள் எல்லோரையும் காரிலிருந்து இறங்கச் சொல்லி உள்ளே என்ன இருக்கிறதென்று அலசி பார்த்தனர். அங்கே ஒரு பேட்டியோ, பையையோ காணோம். ஆத்திரத்துடன் டிக்கியை நெம்பித் திறந்தனர்.

அங்கே மூட்டை!

“டேய் இங்கே இருக்குடா” என்று சந்தோஷத்துடன் ஒருவன் கூவினான். மூட்டையை எடுக்க முயன்றான். மிக கஷ்டப்பட்டு நகர்த்தி கீழே தள்ளி விட்டனர். பிறகு “போ போ” என்று சபேசனை விரட்டினர்.

சபேசன் வெகுவேகமாக காரை செலுத்திக் கொண்டு சென்று ஒரு கிராமம் வந்ததும் காரை நிறுத்தி மூச்சு விட்டார்.

“பயந்தே போயிட்டேன். நகையெல்லாம் கழட்டுன்னு சொல்லு வாங்களோன்னு நடுங்கிப் போயிட்டேன்” என்றால் அவர் மனைவி.

“எல்லோரையும் கட்டிப் போடாமல் விட்டானே” என்று பையன் பெருமூச்சு விடடான். “காரை நொறுக்காமல் போனானே” என்றாள் மகள்.

ஆனால் சபேசன் மட்டும் கார்வேட் நகரை நோக்கி மனப் பூர்வமான நன்றி உணர்த்தலோடு அந்த நடமாடும் தெய்வம் குடி கொண்ட திக்கை நோக்கி கும்பிட்டார்.

வருவதை அறிந்து காப்பாற்றிய தெய்வத்தை நினைத்து அவர் மனம் கசிந்தது. கனமான சாக்கு மூட்டையில் நிறைய பணம் இருக்கிறதென்று நகை நட்டுகளை கள்வர்கள் விட்டுவிட்ட அதிசயத்தை மகானின் தீர்க்க தரிசனம் முன்பே அறிந்திருந்து அருளிய விந்தையை சபேசன் உணர்ந்தார்.

இரண்டு நாட்கள் சென்றதும் அவர் மட்டும் மீண்டும் ஸ்ரீ பெரியவாளின் தரிசனத்திற்கு சென்று நடந்ததை பெரியவாளிடம் சொன்னார்.

“சுவாமி தான் உன்னை காப்பாத்தியிருக்கார்” என்றாராம். ஸ்ரீ பெரியவா தான் அந்த சுவாமி என்று சபேசனுக்கு தெரியாமலில்லை.

7 September 2016

சதாசிவ பிரம்மேந்திரர்

சதாசிவ பிரம்மேந்திரர் ஆற்றங்கரையில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த போது ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். பின்னர் சில மாதங்கள் கழித்து ஆற்றில் மண் அள்ளியபோது அவரது உடல் கண்டு எடுக்கப்பட்டது. அப்போது கண்விழித்த அவர் எதுவும் நடக்காதது போல எழுந்து சென்றார். இனி...

மூன்று மாதங்கள் வரை மணலில் புதைந்திருந்த காலத்திலும் சமாதி நிலையில் இருந்து விடுபடாமல் சதாசிவ பிரம்மேந்திரர் இருந்த செய்தி அவருடைய குருவான பரம சிவேந்திர சரஸ்வதி சுவாமிகளை எட்டிய போது ‘அப்படியொரு நிலையை எப்போது என்னால் எட்ட முடியும்’ என்று வியந்தாராம்.

குருவையே அப்படி வியக்க வைத்த சதாசிவ பிரம்மேந்திரர் எத்தனையோ சக்திகளைப் பெற்றிருந்த போதும் அதை விளம்பரப்படுத்திக் கொள்ளவோ, தன்னை ஒரு மகானாகக் காட்டிக் கொள்ளவோ எப்போதும் முயன்றதில்லை. அவருடைய அந்த சக்திகள் இயல்பாக தேவைப்பட்ட இடங்களில் வேலை செய்தன. அதற்கு சம்பந்தப்பட்டவர் போலவே அவர் காட்டிக் கொண்டதில்லை.

ஒரு முறை ஒரு தானியக் குவியலில் அமர்ந்தவர் அப்படியே சமாதி நிலையில் லயித்திருக்க ஆரம்பித்து விட்டார். அந்த விவசாயி அவரை தானியம் திருட வந்த கள்வன் என்று நினைத்து ஒரு கம்பால் அவரை அடிக்க ஓங்கினான். ஆனால் அவன் கை அப்படியே நின்று விட்டது. அவர் விழித்து அவனைப் பார்த்த போது தான் அவனால் கையைக் கீழே இறக்க முடிந்தது. அவன் அவரைத் திருடன் என நினைத்ததற்கு வருந்தி மன்னிப்பு கேட்பதற்கு முன் அவர் அங்கிருந்து போயுமிருந்தார்.

ஒரு முறை திருநெல்வேலியில் இருந்து குற்றாலத்திற்கு அவர் நடந்து போய்க் கொண்டிருந்தார். வழியில் சிலர் வண்டியில் மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். நெடிய கட்டை போல் அவர் போய்க்கொண்டிருந்ததைப் பார்த்து அவர்களில் ஒருவன் அவரை அழைத்து கட்டைகளை எடுத்துத் தரச் சொன்னான். எந்த விதமான மறுப்பும் சொல்லாமல் அவரும் எடுத்துத்தந்து அந்த மரக்கட்டைகளை வண்டியில் ஏற்றுவதற்கு உதவினார். வேலை முடிந்த பின் அவர் மறுபடி தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

அந்தக் கயவர்கள் தங்களுக்கு உதவிய ஒருவர் என்கிற நன்றியும் இல்லாமல் ‘இந்தக் கட்டை எங்கே போகிறது?’ என்று கூவி ஏளனமாகக் கேட்டார்கள்.

சதாசிவ பிரம்மேந்திரர் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் வண்டியில் ஏற்றி இருந்த கட்டைகள் திடீரென்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன. அப்போது தான் அவர்களுக்கு அவர் ஒரு யோகி என்பது புரிந்தது.

இன்னொரு சமயம் ஒரு பண்டிதன் அவருடைய பூர்வாங்கம் தெரியாமல் அவருக்குக் கிடைக்கும் புகழைக் கண்டு பொறாமைப்பட்டான். பல சமஸ்கிருத நூல்களைக் கற்றுத் தேர்ந்திருந்த அவன், அவர் வேத நூல்கள் பற்றிய பரிச்சயமே இல்லாதவர் என்றும், அவர் வாழும் வாழ்க்கை வேதங்களின் அங்கீகாரம் இல்லாதது என்றும் அவரிடம் நேரில் வந்து குற்றம் சாட்டினான்.

சதாசிவ பிரம்மேந்திரர் அப்போது அங்கே அருகில் இருந்த ஒரு சலவைத் தொழிலாளி நாக்கில் சில எழுத்துக்கள் எழுத, படிப்பறிவில்லாத அவர் வேத மந்திரங் களைச் சொல்ல ஆரம்பித்து விட்டார்.

அந்த மந்திரங்கள் ஒரு ஞானியின் வாழ்க்கை முறையை விவரிப்பதாக இருந்தன. அவை அனைத்தும் சதாசிவ பிரம்மேந்திரரின் வாழ்க்கையை ஒத்ததாகவும் இருந்தன.

இப்படி அவருடைய சக்திகளை உணர்ந்தவர்கள் சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல, அரசர்களும் தான்.

ஒரு முறை அவர் பயணத்தின் போது வழியில் ஒரு நவாபின் (சில குறிப்புகள் ஒரு படைத்தலைவன் என்கின்றன) அந்தப்புரத்துக்குள் புகுந்து விட்டார். ஆடைகள் இல்லாத ஒரு பித்தர் என்று அவரை எண்ணிய அந்தப்புர பெண்மணிகள் அலறி அடித்துக் கொண்டு ஒதுங்கினார்கள். ஆனால் அவரோ சுற்றுப்புற சூழலே உணராமல் அந்தப்புரத்தைக் கடந்து கொண்டு இருந்தார். இந்தத் தகவல் நவாபின் செவிகளை எட்டியது.

கோபம் கொண்ட நவாப் அந்தப் பித்தனின் கையை வெட்டிக் கொண்டு வரும்படி சிப்பாய்களிடம் ஆணை இட்டான். சிப்பாய்கள் விரைந்து வந்து சதாசிவ பிரம்மேந்திரரின் ஒரு கையை வெட்டினார்கள். கை வெட்டப்பட்டு ரத்தம் வந்து கொண்டிருந்த போதும் சிறிதும் சலனப்படாத அவர் சென்று கொண்டே இருந்தார். அந்தச் செய்தியும் நவாபின் செவிகளை எட்டியது.

திகைத்துப் போன நவாப் அந்த வெட்டப்பட்ட கையை எடுத்துக் கொண்டு ஓடி அவரை அடைந்து மன்னிப்பு கேட்டான்.

அந்தக் கையை அவனிடம் இருந்து வாங்கி மீண்டும் பொருத்திக் கொண்டு அவர் போய்க் கொண்டே இருந்தார்.

கையை வெட்டியதற்குக் கோபம் கூடக் கொள்ளாத அந்த யோகி சாதாரண மனிதர்களின் உணர்ச்சிகளை என்றோ கடந்திருந்தார் என்றல்லவா இதிலிருந்து நமக்குப் புரிகிறது.

கி.பி.1730 முதல் 1768–ம் ஆண்டு வரை புதுக்கோட்டை மன்னராக இருந்த விஜய ரகுநாத தொண்டைமான் சதாசிவ பிரம்மேந்திரர் பற்றிக் கேள்விப்பட்டு அவரைத் தன் அரண்மனைக்கு அழைத்து கவுரவிக்க விரும்பினார். தன் ஆட்சி எல்லைக்குள்ளே இருந்த அந்த யோகியைத் தானே நேரில் சென்று அழைக்கவும் செய்தார்.

மவுன விரதம் மேற்கொண்டிருந்த சதாசிவ பிரம்மேந்திரர் ஒன்றுமே பேசாமல் அமைதியாக இருந்தார். அவர் அப்படி அரண்மனைக்கு எல்லாம் வர மாட்டார் என்பதைப் புரிந்து கொண்ட மன்னர் ஆன்மிகம் குறித்த கேள்வி ஒன்றை அவரிடம் கேட்டார். அதற்காவது அவரிடம் இருந்து பதில் வந்தால் அது தனக்கு அவரது ஆசீர்வாதமாக இருக்கும் என்று மன்னர் எண்ணினார்.

சதாசிவ பிரம்மேந்திரர் மணலில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி மந்திரத்தைப் பதிலாக எழுதி விட்டுச் சென்றார்.

விஜய ரகுநாத தொண்டைமான் தன் அங்கவஸ்திரத்தில் அந்த மணலைக் கட்டி எடுத்துக் கொண்டு சென்று அரண்மனையில் பூஜித்து வந்ததாகச் சொல் கிறார்கள்.

சதாசிவ பிரம்மேந்திரரின் அருளைப் பெற்ற இன்னொரு மன்னர் சரபோஜி மன்னர். அவரது அமைச்சராக இருந்த மல்லாரி பண்டிட் என்பவர் சதாசிவ பிரம்மேந்திரரைச் சந்தித்து மன்னருக்கு மகன் பிறக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாகவும், அவரும் ஆசீர்வதித்து தனது ‘ஆத்மவித்யா விலாசம்’ என்ற நூலை அளித்ததாகவும் குறிப்பிட்டு எழுதிய கடிதம் வரலாற்று ஆவணமாக தஞ்சை சரஸ்வதி மகாலில் இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இப்படி ஒரு பிரம்ம ஞானியாகவே வாழ்ந்து வந்த சதாசிவ பிரம்மேந்திரர் தன் வாழ்வு கடைசிக் கட்டத்தை நெருங்குவதை உணர்ந்தார். அருகில் இருந்த அவரது பக்தர்களிடம் தனது சமாதியை கரூரை அடுத்த நெரூரில் அமைக்கும்படி எழுதிக் காட்டினார்.

அந்தப் பக்தர்கள் பெருந்துக்கம் அடைந்தனர். கண்களை மூடிக்கொண்டு கடைசி யாத்திரைக்குத் தயாராக இருந்த சதாசிவ பிரம்மேந்திரரிடம் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்திய அவர்கள் ‘இனி எங்களுக்கு யார் இருக்கிறார்கள்? எங்களுக்கு வழி காட்டுங்கள்’ என்று வேண்டினார்கள். கஷ்டப்பட்டு கண்களைத் திறந்த சதாசிவ பிரம்மேந்திரர் தன் கடைசி கீர்த்தனையை எழுதிக் காட்டினார்.

‘சர்வம் பிரம்ம மயம் ரே ரே  சர்வம் பிரம்ம மயம்...’ என்று தொடங்கும் அந்தக் கீர்த்தனையில் ‘எல்லாமே இறைமயம் தான். அப்படி இருக்கையில் கடவுளை எங்கே தேட வேண்டும். அந்தப் பிரம்மத்தில் அல்லவா நாமும் இருக்கிறோம்’ என்ற பொருள் இருக்கிறது.

1755 –ம் ஆண்டு சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதி அடைந்து இவ்வுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டார். நெரூரில் அவரது ஜீவ சமாதியைக் கட்ட புதுக்கோட்டை மன்னர் உதவி இருக்கிறார். இன்றும் அவரது ஜீவசமாதிக்குப் பல ஆன்மிக அன்பர்கள் சென்ற வண்ணம் இருக்கிறார்கள். சென்றவர்கள் அங்கு அவரது ஆன்மிக அலைகளை உணர்ந்த வண்ணம் இருக்கிறார்கள்.

அவரது ஜீவசமாதிக்கு ‘ஒரு யோகியின் சுயசரிதை’யை எழுதிய பரமஹம்ச யோகானந்தரும் சென்று வழிபட்டிருக்கிறார். அதையும் சதாசிவ பிரம்மேந்திரர் புரிந்த சில அற்புதச் செயல்களையும் அந்த நூலில் குறிப்பிட்டும் இருக்கிறார்.