28 January 2014

ஆல்ஃபா

ஆல்ஃபா நிலையில் ஒரு இலட்சியத்தை ஆழ்மனத்தில் பதித்தால் அது நம் வாழ்க்கையில் சுலபமாக நிறைவேறும் என்பதை பார்த்தோம். அந்தக் காட்சியை சரியான முறையில் அமைப்பது மிகவும் முக்கியம். அது எப்படி என்பதை பார்ப்போம்.
நமது மூளையின் ஆல்ஃபா நிலை என்பது மிக அற்புதமான, சுகமான நிலையாகும். மூனையின் வேகம் வினாடிக்கு 7லிருந்து 14 வரை இருக்கும் நிலை ஆல்ஃபா நிலை. நாம் சற்று அமைதியாக இருக்கும் நிலை இது. தியானத்தின் மூலம் இந்த நிலையை அடைகிறோம். இதற்கு பயிற்சி தேவை. ஆல்ஃபா நிலையை நாம் அடைந்தவுடன் நமக்குள் இருக்கும் ஆழ்மனம் திறக்கிறது. அங்கிருக்கும் வியக்கத்தக்க சக்தியை அந்த நேரத்தில் நாம் பயன்படுத்த முடிகிறது.
நமது இலட்சியங்களை ஆல்ஃபா நிலையில் மனத்திரையில் ஒரு காட்சியாகப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும் காட்சி, ஆழ்மனத்தில் பதிந்து அங்கிருந்து பிரபஞ்ச சக்திக்கே ஒரு செய்தியாகப் போய் சேர்ந்துவிடுகிறது. பிரபஞ்ச சக்தி பல விதத்தில் செயல்பட்டு நமது இலட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கிறது. தகுந்த சூழ் நிலைகளை நமது வாழ்க்கையில் உருவாக்கி, தகுந்த மனிதர்களைச் சந்திக்க செய்து அந்த இலட்சியம் நிறைவேற வழி வகுக்கிறது.
இப்படி ஆல்ஃபா நிலையில், இலட்சியத்தை ஆழ்மனத்தில் பதிக்கும் பொழுது, நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களில் மிக முக்கியமானது அந்தக் காட்சிகளின் அமைப்புதான். இலட்சியத்தை மனத் திரையில் உருவாக்கும் பொழுது அந்த இலட்சியம் நிறைவேறிவிட்ட காட்சியை மட்டும் கண்டால் போதும். இதை எப்படி அடையப்போகிறோம், வழிமுறைகள் என்ன, என்பதைப் பற்றி தியானத்தில் யோசிக்க வேண்டாம். வழிமுறைகளை யோசிக்கும் பொழுது நமது மனம் பல இடங்களில் செயல்பட முடியாமல் தடுமாறும்.
சுரேந்திரனின் அனுபவத்தைப் பார்ப்போம். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஒருமுறை என்னைச் சந்தித்து தன் பிரச்னையைப் பற்றிச் சொன்னார்.
"குடும்பத்தில் செலவு மிகவும் அதிகமாகிவிட்டது. என்னால் சமாளிக்க முடியவில்லை. எப்படியாவது எனக்கு பிரமோஷன் கிடைத்து சம்பளம் உயர வேண்டும் என்று பல மாதங்களாக ஆல்ஃபா தியானம் செய்து வருகிறேன். ஆனால், இதுவரை நடக்கவில்லை. என்ன செய்வது?'
"சரி. உங்கள் நிறுவனத்தின் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன?'
"அதுதான் மேடம் பிரச்னை. எனக்கு மேல் உயர் பதவி எதுவும் இல்லை. எம்.டி. தான் இருக்கிறார். இருந்தாலும் வேறு எப்படி தியானம் செய்வது என்று எனக்கு புரியவில்லை. அதனால்தான் இந்த வழிமுறையை யோசித்தேன்.'
"நீங்கள் இந்த பிரமோஷன் என்கின்ற வழிமுறையை விட்டுவிட்டு குடும்ப வருமானம் பெருகுவது போல் பார்த்து வாருங்கள். நிச்சயம் நடக்கும்.' என்றேன்.
நாமாக யோசிக்கும் பொழுது நமது இலட்சியம் நிறைவேற ஏதேனும் ஒருவழிதான் நமக்கு புலப்படும். ஆனால் வழிமுறைகளை பிரபஞ்சத்திடம் விட்டுவிட்டோமானால் நம் கண்ணுக்குத் தெரியாத பல கதவுகள் திறக்கும். பல வழிகள் பிறக்கும்.
நான் சொன்னபடி சுரேந்திரன், தியானம் செய்து வந்தார். சில மாதங்கள் கழித்து சுரேந்திரன் தன் மனைவியுடன் என்னை சந்திக்க வந்தார். இருவர் முகத்திலும் பிரகாசமான புன்னகை.
"நீங்கள் சொன்னபடி இருவருமே தியானம் செய்து வந்தோம். அதன் பிறகு என் மனைவி செய்த சில கைவினைப் பொருட்கள், ஒரு கண்காட்சியில் வைத்து விற்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்று அதுவே அவளுக்கு மிகப் பெரிய ஒரு தொழிலாக அமைந்துவிட்டது. இன்று அதன் மூலம் எங்களது குடும்ப வருமானம் பெருகி மிகவும் சௌகரியமாக இருக்கிறோம்.'
இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்கும். பிரபஞ்ச சக்தி ஒரு தாய் போன்றது. நமக்கு என்ன வேண்டும் என்பதை ஒரு குழந்தையைப் போல் காண்பித்தால் போதும். அந்தத் தாய் அதை நிச்சயம் நிறைவேற்றிக் கொடுப்பாள். வழிமுறைகளை நாம் தியானத்தில் செல்லும் பொழுது பல சமயம் அது நமக்கு சரியான வழியாக இல்லாமல் போகலாம். அப்பொழுது பிரபஞ்ச சக்தியால் கூட நமது இலட்சியத்தை நிறைவேற்ற முடியாமல் போகலாம். அதனால்தான் இலட்சியம் நிறைவேறும் காட்சியை மட்டும் காண வேண்டும். எந்த நிபந்தனைகளும் இன்றிக் காண வேண்டும். அப்படிச் செய்தால் நமது இலட்சியங்கள் ஒவ்வொன்றாக நாம் நினைத்ததைவிட மிகவும் சுலபமாக நடைபெறுவதை நாம் காண முடியும்.
பிரபஞ்ச சக்தி நமக்கு எல்லா வளங்களையும் கொடுக்கத் தயாராக இருக்கிறது. அவற்றை குறைவின்றிப் பெற்றுக் கொள்ள நாம் தான் தயாராக வேண்டும்.

No comments:

Post a Comment