youtube

8 January 2016

வடநாட்டில் காசிக்குச் செல்லும் வழியில்

வடநாட்டில் காசிக்குச் செல்லும் வழியில் தொழிலாளி ஒருவன் வசித்து வந்தான்.

 அவன் திருமணமாகி நெடு நாளாய் புத்திரன் இல்லாமல் இருந்தான்.

தொழிலாளி ஒரு பெரியவரிடம் தன் குறையைக் கூறினான்.

அவர் தர்மம் செய்தால் அதன் பயனாக புத்திரன் உண்டாவான் என தேற்றினார்.

தொழிலாளி  எந்த முறையில் தர்மம் செய்ய வேண்டுமென்று கேட்டான்.

அக்காலம் கோடை காலம். அவ் வழியாக காசிக்குப் போகும் ஓர் அந்தணனுக்கு ஒரு குடை, ஒரு மிதியடி, ஒரு விசிறி இம் மூன்றையும் தானமாகக் கொடுத்தால் அவர்களுடைய ஆசியால் புத்திரன் உண்டாகும் என்றார்.

தான் தாழ்த்தப்பட்டவன் ஆதலால் அந்தணனுக்கு எவ்வாறு தானம் செய்ய முடியும் என சிந்தித்தான்.

ஒருநாள் ஒரு குடை, ஒரு மிதியடி, ஒரு விசிறி இம் மூன்றையும் தயாரித்து எதிரிலுள்ள மரத்தடியில் வைத்து விட்டு தன் தொழிலில் ஈடுபட்டான்.

பக்தியில் மேம்பட்ட அந்தணர் ஒருவர் தன் இறுதிக் காலம் நெருங்குவதற்குள் காசிக்குச் சென்று வர வேண்டுமென்ற வைராக்கியத்தோடு கால்நடையாகப் புறப்பட்டார்.

அது சமயம் வெயில் காலமாதலால் வெப்பத்தால் துடிதுடித்துச் சென்று கொண்டிருந்தார்.

வழியில் ஒரு மரத்தடியில் வைத்திருந்த குடை, செருப்பு, விசிறி இம் மூன்றையும் கண்டார். அதை மகிழ்ச்சியோடு எடுத்துக் கொண்டு அம் மூன்றையும் வைத்தவனை வாழ்த்திக் கொண்டே சென்றார்.

 அந்தணர் காசிக்குச் சென்று திரும்பி வரும் வழியில் உயிர் துறந்தார்.

மூன்று பொருட்களையும் தானஞ் செய்த தொழிலாளி  வீட்டில் மகனாகப் பிறந்தார்.

 தொழிலாளி  தனக்கு மகப்பேறு உண்டானது கண்டு மகிழ்ந்தான்.

குழந்தை பிறந்து பேச ஆரம்பித்த பருவத்தில் யாரிடமும் பேசாமல் மௌனமாக இருந்தது.

 அது கண்டு பெற்றோர்கள் கவலைப் பட்டனர். குழந்தை ஞான நெறிக்கேற்ப வளர்ந்து பதினாறு வயது அடைந்தது.

காசி அருகிலுள்ள ஊரில் கள்வர்கள் பயம் அதிகமாக இருந்தது. மக்கள் அமைதியாக வாழ முடியவில்லை.

அவ்வூர் அரசனிடம் சென்று அனைவரும் முறையிட்டனர்.

அரசன், நாள் தோறும், தினம் ஒருவராக ஊர் சுற்றி வந்து நான்கு ஜாமங்களும் பறை கொட்டி வரும்படி ஆணை பிறப்பித்தார்.

 அவ்வாறே மக்களும் வீட்டிற்கு ஒருவராகப் பறை கொட்டி வந்தனர்.

ஒரு நாள் தொழிலாளி  முறை வந்தது. அன்று அவன் முக்கியமாக வெளியில் செல்ல நேர்ந்தது.

மனைவியிடம் ஊமை மகனை பறை அடிக்க அனுப்பும் படிச் சொல்லி விட்டுச் சென்றான்.

 அன்றிரவு தாய் மகனை அழைத்தாள். அவன் கையில் பறையைக் கொடுத்து சாம சாமத்திற்கு அடிக்கும் படி ஜாடை காட்டினாள்.

ஊமைச் சிறுவன் பறையை எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட இடத்திலிருந்து அடித்துக் கொண்டே சென்றான்.

பிறந்தது முதல் பதினாறு பிராயம் வரையிலும் பேசாமல் இருந்தவன் முதல் ஜாமம் முடிந்ததும் பறையை நிறுத்தி வடமொழியில் ஒரு ஸ்லோகத்தைச் சொன்னான்.

அந் நாட்டு அரசன் அதைக் கூர்ந்து கேட்டார். இவ்வாறு சிறுவன் நான்கு ஜாமங்களுக்கும் பறை கொட்டி நான்கு ஸ்லோகங்கள் சொல்லி முடித்தான்.

பொழுது புலர்ந்தது. வீட்டிற்குச் சென்றான். பறையை வைத்தான். பழைய படி மௌனமாயிருந்தான்.

அன்றிரவு முழுவதும் விழித்திருந்து அச் ஸ்லோகங்களைக் கேட்ட அரசன், அவைகளின் பொருளை ஆராய ஆவல் கொண்டான்.

விடிந்ததும் தந்தை  வீட்டிற்கு வந்தான். மகன் தன் கடமையை ஆற்றினானா என்பதைப் பற்றி மனைவியிடம் விசாரித்தான்.

அரசனும் காலையில் அரசவைக்கு வந்தார். மந்திரியிடம் நேற்றிரவு பறை கொட்டியவனை அழைத்து வரும்படி ஆணையிட்டார்.

அவர்கள் சேவகர்களுக்குக் கட்டளையிட்டனர். அவர்கள் சேரியில் சென்று தொழிலாளி  அழைத்து அரசர் முன் நிறுத்தினர்.
தொழிலாளி  அரசரைக் கண்டு நடுக்கமடைந்தான்.

அரசன் அவரை ஆசனத்தில் அமரச் செய்து, “நேற்றிரவு பறை கொட்டும் போது நான்கு ஜாமத்திற்கும் நான்கு ஸ்லோகங்கள் சொன்னீர்களே அதன் பொருள் என்ன?” என ஆவலுடன் கேட்டார்.

அவர்  வியப்புடன், “அரசே! நேற்றிரவு பறை கொட்டியவன் என் மகன் அவன் பேச மாட்டான் ஊமையன்!” என்றான்.

உடனே அரசன் அச் சிறுவனை அழைத்து வரும் படிச் சொல்லச் சேவகர்கள் அவனை அழைத்து வந்தனர். அரசனது மனம் பக்குவம் பெற்றிருந்தது.

தொழிலாளி மகனைக் கண்ட அரசன் தம் சிம்மாசனம் விட்டிறங்கினார். அச்சிறுவனை எதிர் கொண்டு அழைத்தார். ஆசனத்தில் அமரும் படி பணிவுடன் சொன்னார்.

 இக் காட்சியைக் கண்ட அனைவரும் பிரமித்தனர். அரசர் சிறுவனை உணர்ந்தார். அவனது உள்ளக் கிடக்கையை அறிய அவாக் கொண்டு நேற்றிரவு நான்கு ஜாமங்களிலும் சொன்ன ஸ்லோகங்களின் பொருளை விளக்கும் படி வேண்டினன்.

சிறூவன் முதல் ஸ்லோகத்தைச் சொல்லி விளக்கம் செய்தனன்

“காம; குரோதச்ச லோபச்ச தேஹே நிஷ்டந்தி
தஸ்கரா;
ஞான ரத்நாப ஹாராய தஸ்மாத் ஜாக்ரத
ஜாக்ரதா!”

சரீரத்தில் மதிப்பிடற்கரிய ரத்தினம் போன்ற மணிகள் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. காமம், குரோதம், லோபம் ஆகிய திருடர்கள் ஞானமாகிய ரத்தினத்தை அபகரிக்கும் பொருட்டு சரீரத்தில் வசிக்கிறார்கள். ஆகையால் எச்சரிக்கையாக இருங்கள்.

சிறுவன் ஞான நெறியில் ஈடுபட்டு அந்தரங்கத்திலுள்ள ஆன்மாவை அறிந்தவன்.

அவ் ஆன்மாவைக் கொண்டு பரமாத்மா தரிசனம் காண முயற்சிப்பவன். ஆதலால் அவன் பார்வையும், சொற்களும் மன்னன் மதிக்கும் நிலையில் இருந்தது.

 மன்னன் மேலும் கேட்க அவாக் கொண்டான்.

சிறுவன் இரண்டாம் ஸ்லோகம் சொல்லி பொருள் கூறினன்
“ஜன்மதுக்கம் ஜராதுக்கம் ஜாயாதுக்கம் புந;புந:
சம்ஸார ஸாகரதுக்கம் தஸ்மாத் ஜாக்ரதா:
ஜாக்ரதா”

“பிறத்தல் மிகவும் துன்பம். பின்பு விருத்த பருவம் பெருந்துன்பம். இதனிடையில் வாலிப காலங்களில் மாதரின் மோகத்தால் அடிக்கடி உண்டாகும் துன்பங்கள் மிகப் பெரியதாகும்.

 இவையன்றி ஜனன, மரண சம்சாரமாகிய சமுத்திரத்தில் படும் துயரம் அளவிறந்தனவாம். ஆகையால் ஆன்மாக்களே ஜாக்கிரதையாக இருங்கள்”

இரண்டாம் ஸ்லோகத்தின் மூலம் சம்சார சாகரம் தீராத துக்கம் என்றும் இதனின்று விலக அறிவு தனித்திருக்க வேண்டும் என்றும் தெளிந்தார் மன்னர்.

சிறுவன் சொன்ன மொழிகளைக் உபதேசமாகக் கொண்டு வாழ்நாளில் அடைய வேண்டிய மெய்ப் பொருளை அடைய ஆவல் கொண்டு அடுத்த ஸ்லோகத்தின் பொருளைக் கூறும் படி வேண்டினார்.

“மாதா நாஸ்தி பிதா நாஸ்தி பந்து ஸஹோதரா
அர்தம் நாஸ்தி க்ருஹம் நாஸ்தி தஸ்மாத்
ஜாக்ரதா ஜாக்ரதா”
“ஈன்று வளர்த்த அன்னையும், தந்தையும் அநித்தியம்.

இவையன்றி தனக்குரிமை என்றெண்ணும் பொருள்களும் அநித்தியம். தனக்குச் சொந்தம் என்றெண்ணும் வீடு முதலியவைகளும் அநித்தியம்.

ஆகையால் எச்சரிக்கையாய் இருங்கள்! எச்சரிக்கையாய் இருங்கள்!!

அரசன் சிறுவன் சொன்ன அறிவுரைகளைக் கேட்டு ஆனந்தம் அடைந்தார்.

நான்காம் ஸ்லோகத்தின் பொருளைக் கூறும் படி வேண்ட, அவ்வாறே சிறுவன் கூறினன்.
“ஆயசா பத்தே லோகே கர்மணா பஹு
சிந்தையா
ஆயுக்ஷீணம் நஜாநாதி தஸ்மாத் ஜாக்ரதா
ஜாக்ரதா”

“இந்த உலகில் மனிதர்கள் நானாவித சிந்தைகளாகிய கர்ம சம்பந்தமான ஆசைகளினாலே கட்டுப்பட்டுள்ளார்கள்.

 இதனால் தனது ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து வருவதை அறிகின்றதில்லை. ஆகையினால் எச்சரிக்கையாய் இருங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். கர்மாவை வெல்ல முயலுங்கள்”

சிறுவனின் ஞான உரைகளைக் கேட்ட மன்னர் மிக வியந்தார். சிறுவனின் தந்தையை அழைத்து, “உன் மகன் ஊமையன் அல்லன்.

பெரிய ஞானி நான் அவன் ஞான மொழிகளைக் கேட்கும் பேற்றைப் பெற்றேன்” என்று ஆனந்தமடைந்தார்.

நம்முள் இருக்கும் திருடர்களை கவனியாது புறத்தேயிருக்கும் திருட்டுகளைப் பற்றி கவலைப்பட்டு காலத்தை வீணாகக் கழிக்கின்றோம் என்பதை இக்கதை வலியுறுத்துகிறது.

No comments: