youtube

22 December 2016

தோஷங்களைத் தீர்க்கும் வன்னிமரம்

தோஷங்களைத் தீர்க்கும் வன்னிமரம்

தமிழ்நாட்டில் பல பழமையான சிவன்கோயில்களில் தல விருட்சமாக வன்னிமரம் உள்ளது. விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோயிலிலும், திருவான்மியூர், வியாசர்பாடி, மேலைத் திருக்காட்டுப் பள்ளி, திருப்பூந்துருத்தி, திருச்சாட்டியக்குடி முதலிய இருபதிற்கும் மேற்பட்ட சிவன்கோயில்களிலும் தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது. வில்வத்திற்கு அடுத்தபடியாக அதிக கோயில்களில் தல மரமாக உள்ளது வன்னியே ஆகும்.

பெருமைகள் வாய்ந்த வன்னி மரத்தின் சிறப்புகள், மருத்துவ குணங்கள்: வன்னிமரம் என்றாலே விருத்தாசலம் என்ற ஞாபகம்தான் வரும். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் பழமையான வன்னி மரம் உள்ளது. இந்த மரத்தின் இலைகளைப் பறித்துப் பங்கிட்டு தான் இந்த கோயிலையே கட்டி இருக்கிறார்கள்! எப்படி? முன்னொரு காலத்தில் விபசித்தி முனிவர் என்று ஒருவர் இருந்தார். அந்த முனிவர், தான் இருந்த இடத்திலேயே கோயிலைக் கட்டி விட்டு ஜீவ சமாதியும் அடைந்தார். அவர் கோயிலைக் கட்டும் வேலையாட்களுக்கு வேலை முடிந்த ஒவ்வொரு நாளின் மாலையிலும் வன்னி மரத்தின் இலைகளைப் பறித்துக் கூலியாக அளிப்பாராம். வியர்வை சிந்திக் கடுமையாக உழைத்தவர்களுக்கு முனிவர் அளித்த வன்னி இலைகள் பொன்னாக மாறுமாம். உழைக்காமல் ஏமாற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு இலைகளாகத் தான் இருக்குமாம். இந்தச் செய்தி கல்வெட்டுக்களிலேயே உள்ளது.

இராமபிரான் இராவணனை நோக்கிப்ட போர் தொடுக்கப்போகும் முன்பாக வன்னி மரத்தைத் தொட்டு வணங்கிச் சென்றதாகவும், முருகப்பெருமான் வள்ளியை மணப்பதற்காக வன்னிமர வடிவில் காட்சி தந்ததாகவும் ஐதீகம். பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞான வாசம் செல்வதற்கு முன்பாக தங்கள் அணிகலன்கள், ஆயுதங்களைப் பெரிய துணியில் கட்டி, வன்னி மரத்தில் மறைத்து வைத்ததாக மகாபாரதம் கூறுகிறது. விஜயதசமியில் துர்காதேவி மகிஷனை அழிக்க வேல் வாங்கும் நிகழ்ச்சி வன்னி மரத்தடியில்தான் நடக்கும். மேற்கண்ட சிறப்புகளைக் கொண்ட வன்னிமரத்தடியில் அமரும் விநாயகப் பெருமானை வன்னி மரத்தடி விநாயகர் என்று சிறப்பாகக் கூறுவார்கள். இவர் இந்த மரத்தில் பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னி ஸ்வரூபமாக உள்ளார். வன்னி மரத்தின் இலைகள் விநாயகருக்கும், சனீஸ்வரருக்கும் உகந்ததாகக் கூறுவர்.

No comments: