youtube

25 February 2016

மிருக வசியம்

இத்தகைய உத்திகளை நம் முன்னோர்கள் மிருக வசியம் என்றழைத்தனர். இன்றும் கூட மலைவாழ் மக்கள் இத்தகைய சில உத்திகளை தமது அன்றாட பழக்கத்தில் வைத்திருக்கின்றனர். மனித நடமாட்டமில்லாத மலைகளிலும், காடுகளிலும் உறைந்திருந்த நம் சித்தர் பெருமக்களும் இத்தகைய பல மிருக வசியங்களை அருளியிருக்கின்றனர். அவற்றில் சில வசிய முறைகளை இங்கே பகிர்ந்திருக்கிறேன். அந்த வரிசையில் இன்று போகர் அருளிய மிருக வசியம் ஒன்றினை பார்ப்போம். இந்த தகவல் “போகர் 7000” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. தானென்ற மூலிநரி விரட்டிக்கப்பா தப்பாமா லாதித்த வாரந்தன்னில் வண்மையுடன் ஓம்சடா சடாவென்று ஆனென்ற வாயிரத்தெட் டுருசெபித்து வவ்வேரை மறுவாரம் பிடுங்கிக்கொள்ளே குறியான வேரையுநீ பிடுங்கிக்கொண்டு நள்ளுவாய் நிழலுலர்த்திக் கொண்டு நலமான செப்புகுளிசத்திலடைத்துக்கொள்ளே அணிவாய் முன்னுருவே தியானஞ்செய்து ஆச்சரிய மந்திரத்தான் மிருகஞ்சேராது. நரிவிரட்டி என்றொரு மூலிகை உண்டு. இதற்கு “நரிமிரட்டி”, “கிலுகிலுப்பை”, “பேய்மிரட்டி” என வேறு பெயர்களும் உண்டு. இந்த மூலிகையை தேடி கண்டு பிடித்து, ஒரு ஞாயிற்றுக் கிழமை நாளில் அந்த செடியின் முன்னர் அமர்ந்து "ஓம் சடா சடா" என்ற மந்திரத்தினை 1008 தடவைகள் செபித்துவிடவேண்டுமாம். பின்னர் அடுத்த ஞாயிற்றுக் கிழமை அன்று அந்த செடியினை பறித்து அதன் வேரை பிடுங்கி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டுமாம். செம்பினால் ஆன தாயத்து ஒன்றினை செய்து, அதில் காயவைத்த நரிமிரட்டி வேரினை அடைத்து, "ஓம் சடா சடா" என்ற மந்திரத்தினை முன்னூறு தடவைகள் செபித்துக் பின்னர் அணிந்து கொள்ள வேண்டுமாம். இவ்வாறு அணிந்தவரை மிருகங்கள் நெருங்காது என்கிறார் போகர்.

No comments: