youtube

1 April 2016

இளவயது மரணங்கள் எதனால் சம்பவிக்கின்றன?

இளவயது மரணங்கள் எதனால் சம்பவிக்கின்றன?

இளவயது மரணங்களுக்கு பாலாரிஷ்டம் என்று பெயர். பாலா என்றால் குழந்தை என்றும் அரிஷ்டம் என்றால் மரணம் என்றும் வடமொழியில் பொருளாகும். மரணம் இன்ன காலத்தில் உறுதியாக நேர்ந்துவிடும் என்று எவராலும் அறுதியிட்டுக் கூற முடியாது. மிகவும் வெகுசிலரால் மட்டுமே, அதாவது தெய்வாம்சமாகக் கருதப்படுபவர்களால் மட்டுமே இன்னாருக்கு இன்ன காலத்தில் இது நடக்கும் என்று கூறமுடியும். இத்தகையோரால் எதிர்வரும் இன்னல்களையும் கெடுதல்களையும் மாற்ற முடியும். நம் பாரதத் திருநாட்டில் இத்தகைய பல மகான்களும் அவதாரப் புருஷர்களும் சித்தர்களும் வாழ்ந்தார்கள். இவர்கள் மரணம் உட்பட பல விஷயங்களிலும் அதிசயம் செய்து காட்டினார்கள். சிவபெருமானின் அருளைப் பெற்று சிவத்தொண்டு புரிந்த திருநாவுக்கரசர் போன்ற ஆன்றோர்களுக்கு இறைவன், இறந்தவர்களையும் உயிர்பிக்கும் தன்னுடைய ஆற்றலையும் வழங்கினார்.

ஒருசமயம், அப்பூதியடிகளின் மகன் பாம்பு கடித்து இறந்து விட்டான். அந்த குழந்தையை சிவபெருமானின் அருளால் திருநாவுக்கரசர் உயிர்ப்பித்தார். இத்தகையோருக்கு நவக்கோள்களும் (ஒன்பது கிரகங்களும்) கட்டுப்பட்டன என்றால் மிகையாகாது. நம் கர்ம வினைகள், பாவங்கள் அனைத்தும் தீர, திருஞான சம்பந்தர் கோளறு திருப்பதிகம் என்கிற பத்து பாக்களை இயற்றி வழங்கியுள்ளார். இதில் இந்த பதிகத்தைப் படித்து சிவபெருமானை வழிபடுபவர்களுக்கு சூரிய பகவான் முதலான ஒன்பது கிரகங்களும் நல்லனவே செய்யும் என்று உறுதியாகக் கூறுகிறார்.

அறுபத்து நான்கு அருங்கலைகளில் ஜோதிடமும் ஒன்றாகும். இதில் மரணம் எப்பொழுது சம்பவிக்கும்? எந்த விதத்தில் சம்பவிக்கும்? என்பவைகள் பற்றி பல இடங்களில் விவரமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், பிள்ளைகளின் ஜாதகங்களில் இத்தகைய கிரக நிலைகள் வந்தால் தந்தைக்கு மரணம், தாய்க்கு மரணம், உடன்பிறந்தோருக்கு மரணம் என்று எல்லாம் வருகிறது. அதனால் ஜோதிட கணிதத்தின்மூலம் ஆயுள் பற்றிய விஷயங்களை ஓரளவு அறிந்து கொள்ளமுடியும். இறைவன் விரும்பும்வரையில் மகிழ்ச்சியுடன் வாழ்வோம் என்பதே எங்களின் எண்ணமாகும்.

இது கர்மவினையின் பலனா? என்றும் கேட்கலாம். ஆம். நம் வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்தும் கர்ம வினைப்பலன்கள் தான் என்பதே உண்மை. நாம் இந்த பிறவியில் அனுபவிக்கும் நல்லது கெட்டது அனைத்தையும் காட்டும் கண்ணாடி போன்றதுதான் நம் ஜனன ஜாதகமாகும். ஜோதிடம் என்பது கடலைப் போன்றது. எப்படி கடலிலிருந்து அள்ள அள்ள செல்வங்கள் குறையாதோ அதுபோன்று ஜோதிடத்திலும் ஆராய்ச்சி செய்யச் செய்ய புதுப்புது விஷயங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். பொதுவாக அசாதாரண சூழ்நிலைகள் ஏற்பட்டாலோ அல்லது குடும்பத்தில் அகால மரணங்கள் சம்பவித்தாலோ அதற்கு காரணம் பித்ரு தோஷம் என்று கூறவேண்டும். அதோடு பித்ரு தோஷமானது குடும்பத்தில் வழிவழியாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கும். சில குடும்பங்களில் ஒரு குறிப்பிட்ட வியாதி அல்லது நிகழ்ச்சி தொடர்ந்து வந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். கஷ்டங்களிலும் துன்பங்களிலும் அசாதாரண நிகழ்வுகளிலும் நோய்களும் நம்மை பாதிக்கின்றன என்றால் மிகையாகாது. நம் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் எதுவும் விபத்தாக நடக்கிறது என்று கூறமுடியாது. அனைத்தும் அந்தந்த காலங்களில் நம்மைத் தேடி வருகிறது. இதனைச் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் “ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டுதூம் என்பதூம்” என்கிறார். அதாவது ஊழ்வினை தேடிப்பிடித்து அதனுடைய செயல்களைச் செய்யும் என்பது இதன்பொருள். ஊழ்வினைகளிலிருந்து மகான்களும் தப்புவது இல்லை. உதாரணத்திற்கு பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி புற்று நோயால் பாதிக்கப்பட்டார் என்பதும் இங்கே ஒப்பு நோக்கத்தக்கது.

ஜாதகங்களில் இத்தகைய விஷயங்கள், சூரிய பகவான், சனி பகவான், ராகு/ கேது பகவான்களின் நிலைமையை பார்த்து ஒருவருக்கு பித்ருதோஷம் உள்ளதா அல்லது இல்லையா என்று முடிவு செய்ய வேண்டும். பொதுவாக சூரிய பகவான் மற்றும் ராகு பகவான்களின் சேர்க்கை அல்லது பார்வை, இந்த கிரகங்கள் பெற்றுள்ள காரகத்துவங்கள், சாரம் ஆகியவை சுபமாக அமையாவிட்டால் இடர்கள் உண்டாகலாம். இப்படி அசுபத் தன்மை பெற்றிருந்தால் மட்டும் கஷ்டம் வந்துவிடும் என்று எடுத்துக்கொள்ள கூடாது. அந்த ஜாதகரின் குடும்பப் பின்னணியில் நடந்த விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் பிறந்த இருவருக்கு ஜாதகப்படி பித்ரு தோஷம் உண்டாக காரணிகள் இருந்தாலும் அவர்களின் பாரம்பரியத்திற்கு ஏற்ப வித்தியாசமான பலன்கள் அல்லது பாதிப்புகள் ஏற்படலாம் என்பதையும் அனுபவத்தில் பார்க்கிறோம். இப்படி பல விஷயங்களைக் கருத்தில் கொண்டு ஜாதகத்தில் இருப்பது பித்ரு தோஷமா அல்லது பித்ரு சாபமா என்று பார்க்க வேண்டும். இதற்கேற்ப பரிகாரங்களைச் செய்தால் தோஷங்கள் குறைந்து, கஷ்டங்கள் கட்டுக்குள் இருக்கும். அனைத்து பரிகாரங்களுக்கும் மேலாக குலதெய்வ வழிபாடு என்பது அவசியமானது. இப்படி வழிபாடுகளைத் தவறாமல் செய்து வந்தால் குறைகள் மறைந்து நிறைகள் பெருகும் என்பது அனுபவ உண்மை.

இத்தகைய நிலைமைகளைக் கருத்தில் கொண்ட பிறகு பூர்வபுண்ய ஸ்தானம் (ஜந்தாம்வீடு) மற்றும் பாக்கிய ஸ்தானம் (ஒன்பதாம் வீடு) ஆகிய இரண்டு ராசிகள் அந்த ராசி அதிபதிகள் அந்த ராசிகளில் அமர்ந்துள்ள கிரகங்கள் நமக்கு எந்த அளவுக்கு பித்ருதோஷம் வேலை செய்யும் என்பதை அறிவித்துவிடும். இதோடு பித்ரு சாபம் என்பது சற்று கூடுதலான அசுபப் பலன்களைத் தரும். ஷட் பலன்களில் சூரிய, சந்திர, சனி பகவான்கள் பெற்றிருக்கும் ரூப பலத்திலிருந்து இந்த கிரகங்கள் ஜாதகருக்கு சாதகமாக உள்ளதா அல்லது பாதகமாக உள்ளதா என்றும் இந்த பலத்தினால் பித்ருதோஷம் பரிகாரங்களால் தீர்ந்து விடுமோ என்பதையும் அளவளாவ வேண்டும். இவைகளுக்கும் மேலாக பதினாறு வித அம்ச ஜாதகங்களையும் அலசி ஆராய்ந்து ஜாதகம் எந்த அளவுக்கு அனைத்து விஷயங்களிலும் (ஆயுள் உட்பட) பலம் பெற்றுள்ளது என்கிற முழுமையான முடிவுக்கு வர வேண்டும்.

இங்கனம்

No comments: