youtube

8 September 2016

உமாபதியின் சூட்சம உத்தரவு

உமாபதியின் சூட்சம உத்தரவு

ஸ்ரீ பெரியவா கார்வேட் நகரில் முகாமிட்டிருந்த சமயம், சென்னையிலிருந்து காரில் சபேசன் குடும்பம் வந்திருந்தது. ஸ்ரீ பெரியவாளின் தரிசனத்திற்கு பின் சாயங்காலம் தங்கள் ஊருக்கு திரும்புவதற்கு தயாராயினர். பெரியவாளிடம் உத்தரவாகிவிட்டால் கிளம்பலாமென்று காத்திருந்தனர்.

தட்சிணாமூர்த்தி ஸ்ரீ பெரியவா ஒரு வில்வமரத்தடியில் அமர்ந்திருக்க சபேசன் குடும்பத்தினர் வந்தனம் செய்து பிரசாதத்துக்கு நின்றனர். அவர்களுக்கு பிரசாதம் கொடுக்கப்பட்டது. சபேசன் காரை நோக்கி நடந்தார். அப்போது அவரை ஸ்ரீ பெரியவா சொடுக்கு போட்டு கூப்பிட, சபேசன் ஆவலுடன் திருப்பி வந்து நின்றார்.

சற்று தூரத்தில் கருங்கல் ஜல்லி கொட்டப்பட்டிருந்தது. ஸ்ரீ பெரியவாள் இதைக் காட்டி “இதில் கொஞ்சம் சாக்கில் கட்டி வீட்டுக்கு கொண்டு போ” என்றார்.

எல்லோருக்கும் இப்படி பெரியவா உத்தரவிட்டது பெரும் வியப்பாயிருந்தது. கருங்கல் ஜல்லியை கார்வேட் நகரிலிருந்து சென்னைக்கு எடுத்துப் போவானேன்? அதில் அப்படி என்ன ரகசியம் உள்ளது என்றெல்லாம் சுற்றி இருந்தோரை சந்தேகப்பட வைத்தது இந்த உத்தரவு.

மகானிடம் விளக்கம் கேட்க முடியாதல்லவா எனவே உத்தரவு படி சாக்கில் கொஞ்சம் ஜல்லியை மூட்டையாக கட்டி கார் டிக்கியில் வைத்துக் கொண்டு சபேசன் புறப்பட்டார்.

வழியில் மலப்பாதைகள் நிறைந்த புத்தூர் வந்தது. இரவு நாலைந்து நபர்கள் நடுச்சாலையில் நின்று காரை மறித்தார்கள். அவர்கள் கொள்ளையர்கள் என்பதில் சந்தேகமில்லை.

கொள்ளையர்கள் எல்லோரையும் காரிலிருந்து இறங்கச் சொல்லி உள்ளே என்ன இருக்கிறதென்று அலசி பார்த்தனர். அங்கே ஒரு பேட்டியோ, பையையோ காணோம். ஆத்திரத்துடன் டிக்கியை நெம்பித் திறந்தனர்.

அங்கே மூட்டை!

“டேய் இங்கே இருக்குடா” என்று சந்தோஷத்துடன் ஒருவன் கூவினான். மூட்டையை எடுக்க முயன்றான். மிக கஷ்டப்பட்டு நகர்த்தி கீழே தள்ளி விட்டனர். பிறகு “போ போ” என்று சபேசனை விரட்டினர்.

சபேசன் வெகுவேகமாக காரை செலுத்திக் கொண்டு சென்று ஒரு கிராமம் வந்ததும் காரை நிறுத்தி மூச்சு விட்டார்.

“பயந்தே போயிட்டேன். நகையெல்லாம் கழட்டுன்னு சொல்லு வாங்களோன்னு நடுங்கிப் போயிட்டேன்” என்றால் அவர் மனைவி.

“எல்லோரையும் கட்டிப் போடாமல் விட்டானே” என்று பையன் பெருமூச்சு விடடான். “காரை நொறுக்காமல் போனானே” என்றாள் மகள்.

ஆனால் சபேசன் மட்டும் கார்வேட் நகரை நோக்கி மனப் பூர்வமான நன்றி உணர்த்தலோடு அந்த நடமாடும் தெய்வம் குடி கொண்ட திக்கை நோக்கி கும்பிட்டார்.

வருவதை அறிந்து காப்பாற்றிய தெய்வத்தை நினைத்து அவர் மனம் கசிந்தது. கனமான சாக்கு மூட்டையில் நிறைய பணம் இருக்கிறதென்று நகை நட்டுகளை கள்வர்கள் விட்டுவிட்ட அதிசயத்தை மகானின் தீர்க்க தரிசனம் முன்பே அறிந்திருந்து அருளிய விந்தையை சபேசன் உணர்ந்தார்.

இரண்டு நாட்கள் சென்றதும் அவர் மட்டும் மீண்டும் ஸ்ரீ பெரியவாளின் தரிசனத்திற்கு சென்று நடந்ததை பெரியவாளிடம் சொன்னார்.

“சுவாமி தான் உன்னை காப்பாத்தியிருக்கார்” என்றாராம். ஸ்ரீ பெரியவா தான் அந்த சுவாமி என்று சபேசனுக்கு தெரியாமலில்லை.

No comments: