திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம்
வருந்தும் மரம்
உலகிற்கே ஒளிதரும் சூரியனிடம் காதல் கொண்டாள் ஒரு அரசகுமாரி. அந்த காதலை ஏற்க மறுத்த சூரியனை எண்ணி மனமுடைந்து தன்னையே மாய்த்துக் கொண்டாளாம். அவளின் அஸ்தியிலிருந்து இம்மரம் உருவாகியதாகவும், இம்மரம் வளர்ந்ததும் சூரியனின் பார்வையைத் தாங்க முடியவில்லை என்றும் கர்ண பரம்பரைக் கதை ஒன்று உண்டு. இதன் காரணமாக இந்த மரம் இரவிலே பூக்களை மலர்வித்து காலையிலே
பூக்களையெல்லாம் உதிர்த்து விடுகிறது என்றும் கூறப்படுகிறது. இவ்விதம் வருத்தமுடன் வாழும் பவள மல்லிகையைக் குறிப்பிட வருந்தும் மரம் என்கின்றனர்.
மகாபாரத கிளைக்கதை
பாரிஜாத மலரின் மீது ருக்மணிக்கு கொள்ளைப் பிரியம். இதனை அறிந்த கிருஷ்ணர் தேவலோகத்தில் இருந்து பாரிஜாத செடியை கொண்டு வந்து ருக்மணியின் தோட்டத்தில் நட்டு வைத்தார். ஆனால் அந்த மரம் நன்றாக வளர்ந்து சத்யபாமாவின் அரண்மனையில் பூக்களைச் சொரிந்தது. இதனால் ருக்மணி வருத்தமுற்றதாலேயே இதனை வருத்தமரம் என்று அழைக்கின்றனர்.
திரௌபதியின் விருப்பப்படியே பீமன் தேவலோகத்தில் இருந்து பாரிஜாத மரத்தை கொண்டு வந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
திருமாலுக்கு உகந்த மலர்
சிரஞ்சீவியாக திகழும் ஆஞ்சநேயர் பவளமல்லி வேரில் வசிப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் பகவான் கிருஷ்ணன் பாரிஜாத மரத்தடியில் வீற்றிருப்பவன். இந்த மரத்தில் பூக்கும் சுகந்தமான மலர் திருமாலுக்கு ஏற்றது. பவள மல்லிகை, மருக்கொழுந்து, போன்ற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து திருமாலின் அருளைப் பெறமுடியும்.
திருமாலிற்கு பிரியமானதுமான பவள மல்லிகையை ஆலய நந்தவனங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும் நட்டு வளர்ப்போம். இதன் மூலம் திருமாலின் அர்ச்சனைக்குகந்த இப்பூக்களையும் பெறுவதுடன் பவள மல்லிகையின் இனிய மணத்தை இரவு முழுவதும் நுகர்ந்து, நம் சூழலையும் பசும் போர்வையாக்குவோம்.
No comments:
Post a Comment