youtube

8 September 2016

சைவத்தின் மாமந்திரம் ‘நமசிவாய’ எனும் ஐந்து எழுத்துக்கள் மட்டுமே.

சைவத்தின் மாமந்திரம் ‘நமசிவாய’ எனும் ஐந்து எழுத்துக்கள் மட்டுமே. அந்த ‘மா மந்திரம்’ திருவைந்தெழுத்து. மந்திர ராஜம், பஞ்சாட்சரம் போன்ற இதர பெயர்களாலும் இம்மந்திரம் ஓதப்படுவதுண்டு.

சிவ வழிபாட்டில் திருநீறும், ருத்திராட்சமும், புறச்சாதனங்களாக விளங்க ‘நமசிவாய’ எனும் திருவைந்தெழுத்து அகச்சாதனமாக விளங்குகிறது.

“ வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது

நாதன் நாமம் நமசிவாயவே “ என திருஞான சம்பந்தரும்,

“ கற்றுணை பூட்டியோர் கடலினிற் பாய்ச்சினும்

நற்றுணை யாவது நமசிவாயவே “ என திருநாவுக்கரசரும்,

“ நற்றவா உனைநான் மறக்கினும் சொல்லும்

நா நமசிவாயவே” என சுந்தரரும் கூறியுள்ளனர்.

மாணிக்கவாசகப் பெருமானும், “நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க” என்றே தனது சிவபுராணத்தைத் துவக்கியுள்ளார்.

ஆதி மந்திரம் ஐந்தெழுத்து ஓதுவார் நோக்கும்

மாதிரத்தும் மற்றை மந்திர விதி வருமே

என சேக்கிழார் பெருமானும் ஆதிமந்திரம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இப்பஞ்சாட்சரமானது, தூல பஞ்சாட்சரம், சூக்கும பஞ்சாட்சரம், அதி சூக்கும பஞ்சாட்சரம், காரண பஞ்சாட்சரம், மகா காரண பஞ்சாட்சரம் என ஐந்து வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

நமசிவாய எனும் எளிய ஐந்தெழுத்துக்களே தூல பஞ்சாட்சரம் எனப்படும். இதில் ‘ந’ என்பது திரோதாண சக்தியையும், ‘ம’ என்பது ஆணவமலத்தையும், ‘சி’ என்பது சிவத்தையும், ‘வா’ என்பது திருவருள் சக்தியையும், ‘ய’ என்பது ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன. இப்பிறவியில் இன்பமாக வாழ விரும்புபவர்கள் ஓத வேண்டிய மந்திரமே நமசிவாய.

மேற்கூறிய ஐந்தெழுத்துக்களை இடம்மாற்றி ‘சிவாய நம’ என்று ஓதுவதே சூக்கும பஞ்சாட்சரம். தூலப் பஞ்சாட்சரத்தில் இரு மலங்களை பின்னுக்குத்தள்ளி, சிவத்தையும் சக்தியையும் முன்னிறுத்தி ஓதுதல் வேண்டும். முக்திப் பேறு விரும்புபவர்கள் ஓதக்கூடிய மந்திரம் இதுவே.

“சிவாய நம என்று சிந்திப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை “ என ஒளவைப் பிராட்டியும், “செம்பும் பொன்னாகும் சிவாயநம எண்ணில்” என திருமூலரும் இதன் சிறப்பைக் கூறியுள்ளார்.

சிவாய நம எனும் சூக்கும பஞ்சாட்சரம், நடராசப் பெருமானின் ஞானத் திருவுருவைப் பிரதிபலிப்பதாகவும் கூறுவார்கள். ‘சி’ உடுக்கை ஏந்திய திருக்கரத்தையும், ‘வா’ தூக்கிய திருவடியைக் காட்டும் இடது கரத்தையும். ‘ய’ அஞ்சேல் என்ற வலது அபய கரத்தையும், ‘ந’ அனலேந்திய இடக்கரத்தையும், ‘ம’ முயலகன் மீது ஊன்றிய திருவடியையும் குறிப்பனவாக உள்ளன.

சிவசிவ என்ற நான்கெழுத்து மந்திரமே அதிசூக்கும பஞ்சாட்சரம். மும்மலங்களை அறுத்தெறிந்த பின்னரும் தொடரும் வாசனா மலத்தையும் போக்க வேண்டும் என எண்ணுபவர்கள் ‘சிவசிவ’ என்ற காரண பஞ்சாட்சரத்தை ஓதி, உன்னத முக்திநிலையை எய்தலாம். ‘சி’ என்ற ஓரெழுத்து மந்திரமே மகா காரண பஞ்சாட்சரம் என அழைக்கப்படுகிறது. மேற்கூறிய ஐந்துவகை பஞ்சாட்சரத்தில் பிந்தைய மூன்றிலும் ஐந்தெழுத்துக்கள் முழுமையாக இல்லாவிடினும், ஐந்தெழுத்து மந்திரத்திற்கு ஒப்பானதே. முதல் இரண்டை மட்டுமே நம்மைப் போன்ற எளிய மக்களால் ஓதி, அருள்பெற இயலும் வண்ணம் உள்ளது. ஞானியர், துறவியர் மட்டுமே இதர மூன்றை ஓதவல்லவர்கள்.

எப்போது ஓதலாம்?

எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், நமசிவாய என்றோ சிவாய நம என்றோ ஓதலாம். எவ்வித பேதமும் இம்மந்திரத்திற்கு இல்லை. எனினும் குறைந்த பட்சம் படுக்கையிலிருந்து எழும் போதும், உணவு உண்ணும் போதும், நற்காரியங்களைத் தொடங்கும்போதும், உறங்கச்செல்லும் போதும் இதனைக் கூறலாம், ஆலயச் சுற்றின் போது இதர மந்திரங்கள், பதிகங்கள் ஓதாவிடினும், இதைமட்டுமே ஓதினால் சிவ புண்ணியம் கிட்டும்.

குழந்தைகளுக்குப் பெயர்

நாம் அடிக்கடி நமசிவாய மந்திரத்தைக் கூறவேண்டும் என்பதற்காக முன்னோர்கள் ஒரு யுக்தியைக் கையாண்டனர். அதாவது மழலைகளுக்கு நமசிவாய என்ற பெயரைச் சூட்டி அப்பெயரை உச்சரிப்பதன் மூலம் நம்மையறியாமல் சிவ மந்திரத்தை உச்சரிக்கச் செய்து சிவனருள் கிடைக்க வழி செய்தனர்.

நமசிவாய எனும் அருமந்திரம் ஓதினால் எவ்வித உடற்பிணியும் வராது என்ற பொருளில் சேக்கிழார் கூறியுள்ளார். உறக்கத்திலும், உறக்கமில்லா நிலையிலும், நமசிவாய எனும் ஐந்தெழுத்தை நெஞ்சுருகத் தினமும் வழிபடுவோருக்கு எமனும் அஞ்சுவான். ஐந்தெழுத்து மந்திரம் எமனையே அஞ்சும் அளவிற்கு உதைத்துவிடும் என்கிறார் திருஞானசம்பந்தர்.

உமாபதியின் சூட்சம உத்தரவு

உமாபதியின் சூட்சம உத்தரவு

ஸ்ரீ பெரியவா கார்வேட் நகரில் முகாமிட்டிருந்த சமயம், சென்னையிலிருந்து காரில் சபேசன் குடும்பம் வந்திருந்தது. ஸ்ரீ பெரியவாளின் தரிசனத்திற்கு பின் சாயங்காலம் தங்கள் ஊருக்கு திரும்புவதற்கு தயாராயினர். பெரியவாளிடம் உத்தரவாகிவிட்டால் கிளம்பலாமென்று காத்திருந்தனர்.

தட்சிணாமூர்த்தி ஸ்ரீ பெரியவா ஒரு வில்வமரத்தடியில் அமர்ந்திருக்க சபேசன் குடும்பத்தினர் வந்தனம் செய்து பிரசாதத்துக்கு நின்றனர். அவர்களுக்கு பிரசாதம் கொடுக்கப்பட்டது. சபேசன் காரை நோக்கி நடந்தார். அப்போது அவரை ஸ்ரீ பெரியவா சொடுக்கு போட்டு கூப்பிட, சபேசன் ஆவலுடன் திருப்பி வந்து நின்றார்.

சற்று தூரத்தில் கருங்கல் ஜல்லி கொட்டப்பட்டிருந்தது. ஸ்ரீ பெரியவாள் இதைக் காட்டி “இதில் கொஞ்சம் சாக்கில் கட்டி வீட்டுக்கு கொண்டு போ” என்றார்.

எல்லோருக்கும் இப்படி பெரியவா உத்தரவிட்டது பெரும் வியப்பாயிருந்தது. கருங்கல் ஜல்லியை கார்வேட் நகரிலிருந்து சென்னைக்கு எடுத்துப் போவானேன்? அதில் அப்படி என்ன ரகசியம் உள்ளது என்றெல்லாம் சுற்றி இருந்தோரை சந்தேகப்பட வைத்தது இந்த உத்தரவு.

மகானிடம் விளக்கம் கேட்க முடியாதல்லவா எனவே உத்தரவு படி சாக்கில் கொஞ்சம் ஜல்லியை மூட்டையாக கட்டி கார் டிக்கியில் வைத்துக் கொண்டு சபேசன் புறப்பட்டார்.

வழியில் மலப்பாதைகள் நிறைந்த புத்தூர் வந்தது. இரவு நாலைந்து நபர்கள் நடுச்சாலையில் நின்று காரை மறித்தார்கள். அவர்கள் கொள்ளையர்கள் என்பதில் சந்தேகமில்லை.

கொள்ளையர்கள் எல்லோரையும் காரிலிருந்து இறங்கச் சொல்லி உள்ளே என்ன இருக்கிறதென்று அலசி பார்த்தனர். அங்கே ஒரு பேட்டியோ, பையையோ காணோம். ஆத்திரத்துடன் டிக்கியை நெம்பித் திறந்தனர்.

அங்கே மூட்டை!

“டேய் இங்கே இருக்குடா” என்று சந்தோஷத்துடன் ஒருவன் கூவினான். மூட்டையை எடுக்க முயன்றான். மிக கஷ்டப்பட்டு நகர்த்தி கீழே தள்ளி விட்டனர். பிறகு “போ போ” என்று சபேசனை விரட்டினர்.

சபேசன் வெகுவேகமாக காரை செலுத்திக் கொண்டு சென்று ஒரு கிராமம் வந்ததும் காரை நிறுத்தி மூச்சு விட்டார்.

“பயந்தே போயிட்டேன். நகையெல்லாம் கழட்டுன்னு சொல்லு வாங்களோன்னு நடுங்கிப் போயிட்டேன்” என்றால் அவர் மனைவி.

“எல்லோரையும் கட்டிப் போடாமல் விட்டானே” என்று பையன் பெருமூச்சு விடடான். “காரை நொறுக்காமல் போனானே” என்றாள் மகள்.

ஆனால் சபேசன் மட்டும் கார்வேட் நகரை நோக்கி மனப் பூர்வமான நன்றி உணர்த்தலோடு அந்த நடமாடும் தெய்வம் குடி கொண்ட திக்கை நோக்கி கும்பிட்டார்.

வருவதை அறிந்து காப்பாற்றிய தெய்வத்தை நினைத்து அவர் மனம் கசிந்தது. கனமான சாக்கு மூட்டையில் நிறைய பணம் இருக்கிறதென்று நகை நட்டுகளை கள்வர்கள் விட்டுவிட்ட அதிசயத்தை மகானின் தீர்க்க தரிசனம் முன்பே அறிந்திருந்து அருளிய விந்தையை சபேசன் உணர்ந்தார்.

இரண்டு நாட்கள் சென்றதும் அவர் மட்டும் மீண்டும் ஸ்ரீ பெரியவாளின் தரிசனத்திற்கு சென்று நடந்ததை பெரியவாளிடம் சொன்னார்.

“சுவாமி தான் உன்னை காப்பாத்தியிருக்கார்” என்றாராம். ஸ்ரீ பெரியவா தான் அந்த சுவாமி என்று சபேசனுக்கு தெரியாமலில்லை.

7 September 2016

சதாசிவ பிரம்மேந்திரர்

சதாசிவ பிரம்மேந்திரர் ஆற்றங்கரையில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த போது ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். பின்னர் சில மாதங்கள் கழித்து ஆற்றில் மண் அள்ளியபோது அவரது உடல் கண்டு எடுக்கப்பட்டது. அப்போது கண்விழித்த அவர் எதுவும் நடக்காதது போல எழுந்து சென்றார். இனி...

மூன்று மாதங்கள் வரை மணலில் புதைந்திருந்த காலத்திலும் சமாதி நிலையில் இருந்து விடுபடாமல் சதாசிவ பிரம்மேந்திரர் இருந்த செய்தி அவருடைய குருவான பரம சிவேந்திர சரஸ்வதி சுவாமிகளை எட்டிய போது ‘அப்படியொரு நிலையை எப்போது என்னால் எட்ட முடியும்’ என்று வியந்தாராம்.

குருவையே அப்படி வியக்க வைத்த சதாசிவ பிரம்மேந்திரர் எத்தனையோ சக்திகளைப் பெற்றிருந்த போதும் அதை விளம்பரப்படுத்திக் கொள்ளவோ, தன்னை ஒரு மகானாகக் காட்டிக் கொள்ளவோ எப்போதும் முயன்றதில்லை. அவருடைய அந்த சக்திகள் இயல்பாக தேவைப்பட்ட இடங்களில் வேலை செய்தன. அதற்கு சம்பந்தப்பட்டவர் போலவே அவர் காட்டிக் கொண்டதில்லை.

ஒரு முறை ஒரு தானியக் குவியலில் அமர்ந்தவர் அப்படியே சமாதி நிலையில் லயித்திருக்க ஆரம்பித்து விட்டார். அந்த விவசாயி அவரை தானியம் திருட வந்த கள்வன் என்று நினைத்து ஒரு கம்பால் அவரை அடிக்க ஓங்கினான். ஆனால் அவன் கை அப்படியே நின்று விட்டது. அவர் விழித்து அவனைப் பார்த்த போது தான் அவனால் கையைக் கீழே இறக்க முடிந்தது. அவன் அவரைத் திருடன் என நினைத்ததற்கு வருந்தி மன்னிப்பு கேட்பதற்கு முன் அவர் அங்கிருந்து போயுமிருந்தார்.

ஒரு முறை திருநெல்வேலியில் இருந்து குற்றாலத்திற்கு அவர் நடந்து போய்க் கொண்டிருந்தார். வழியில் சிலர் வண்டியில் மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். நெடிய கட்டை போல் அவர் போய்க்கொண்டிருந்ததைப் பார்த்து அவர்களில் ஒருவன் அவரை அழைத்து கட்டைகளை எடுத்துத் தரச் சொன்னான். எந்த விதமான மறுப்பும் சொல்லாமல் அவரும் எடுத்துத்தந்து அந்த மரக்கட்டைகளை வண்டியில் ஏற்றுவதற்கு உதவினார். வேலை முடிந்த பின் அவர் மறுபடி தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

அந்தக் கயவர்கள் தங்களுக்கு உதவிய ஒருவர் என்கிற நன்றியும் இல்லாமல் ‘இந்தக் கட்டை எங்கே போகிறது?’ என்று கூவி ஏளனமாகக் கேட்டார்கள்.

சதாசிவ பிரம்மேந்திரர் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் வண்டியில் ஏற்றி இருந்த கட்டைகள் திடீரென்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன. அப்போது தான் அவர்களுக்கு அவர் ஒரு யோகி என்பது புரிந்தது.

இன்னொரு சமயம் ஒரு பண்டிதன் அவருடைய பூர்வாங்கம் தெரியாமல் அவருக்குக் கிடைக்கும் புகழைக் கண்டு பொறாமைப்பட்டான். பல சமஸ்கிருத நூல்களைக் கற்றுத் தேர்ந்திருந்த அவன், அவர் வேத நூல்கள் பற்றிய பரிச்சயமே இல்லாதவர் என்றும், அவர் வாழும் வாழ்க்கை வேதங்களின் அங்கீகாரம் இல்லாதது என்றும் அவரிடம் நேரில் வந்து குற்றம் சாட்டினான்.

சதாசிவ பிரம்மேந்திரர் அப்போது அங்கே அருகில் இருந்த ஒரு சலவைத் தொழிலாளி நாக்கில் சில எழுத்துக்கள் எழுத, படிப்பறிவில்லாத அவர் வேத மந்திரங் களைச் சொல்ல ஆரம்பித்து விட்டார்.

அந்த மந்திரங்கள் ஒரு ஞானியின் வாழ்க்கை முறையை விவரிப்பதாக இருந்தன. அவை அனைத்தும் சதாசிவ பிரம்மேந்திரரின் வாழ்க்கையை ஒத்ததாகவும் இருந்தன.

இப்படி அவருடைய சக்திகளை உணர்ந்தவர்கள் சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல, அரசர்களும் தான்.

ஒரு முறை அவர் பயணத்தின் போது வழியில் ஒரு நவாபின் (சில குறிப்புகள் ஒரு படைத்தலைவன் என்கின்றன) அந்தப்புரத்துக்குள் புகுந்து விட்டார். ஆடைகள் இல்லாத ஒரு பித்தர் என்று அவரை எண்ணிய அந்தப்புர பெண்மணிகள் அலறி அடித்துக் கொண்டு ஒதுங்கினார்கள். ஆனால் அவரோ சுற்றுப்புற சூழலே உணராமல் அந்தப்புரத்தைக் கடந்து கொண்டு இருந்தார். இந்தத் தகவல் நவாபின் செவிகளை எட்டியது.

கோபம் கொண்ட நவாப் அந்தப் பித்தனின் கையை வெட்டிக் கொண்டு வரும்படி சிப்பாய்களிடம் ஆணை இட்டான். சிப்பாய்கள் விரைந்து வந்து சதாசிவ பிரம்மேந்திரரின் ஒரு கையை வெட்டினார்கள். கை வெட்டப்பட்டு ரத்தம் வந்து கொண்டிருந்த போதும் சிறிதும் சலனப்படாத அவர் சென்று கொண்டே இருந்தார். அந்தச் செய்தியும் நவாபின் செவிகளை எட்டியது.

திகைத்துப் போன நவாப் அந்த வெட்டப்பட்ட கையை எடுத்துக் கொண்டு ஓடி அவரை அடைந்து மன்னிப்பு கேட்டான்.

அந்தக் கையை அவனிடம் இருந்து வாங்கி மீண்டும் பொருத்திக் கொண்டு அவர் போய்க் கொண்டே இருந்தார்.

கையை வெட்டியதற்குக் கோபம் கூடக் கொள்ளாத அந்த யோகி சாதாரண மனிதர்களின் உணர்ச்சிகளை என்றோ கடந்திருந்தார் என்றல்லவா இதிலிருந்து நமக்குப் புரிகிறது.

கி.பி.1730 முதல் 1768–ம் ஆண்டு வரை புதுக்கோட்டை மன்னராக இருந்த விஜய ரகுநாத தொண்டைமான் சதாசிவ பிரம்மேந்திரர் பற்றிக் கேள்விப்பட்டு அவரைத் தன் அரண்மனைக்கு அழைத்து கவுரவிக்க விரும்பினார். தன் ஆட்சி எல்லைக்குள்ளே இருந்த அந்த யோகியைத் தானே நேரில் சென்று அழைக்கவும் செய்தார்.

மவுன விரதம் மேற்கொண்டிருந்த சதாசிவ பிரம்மேந்திரர் ஒன்றுமே பேசாமல் அமைதியாக இருந்தார். அவர் அப்படி அரண்மனைக்கு எல்லாம் வர மாட்டார் என்பதைப் புரிந்து கொண்ட மன்னர் ஆன்மிகம் குறித்த கேள்வி ஒன்றை அவரிடம் கேட்டார். அதற்காவது அவரிடம் இருந்து பதில் வந்தால் அது தனக்கு அவரது ஆசீர்வாதமாக இருக்கும் என்று மன்னர் எண்ணினார்.

சதாசிவ பிரம்மேந்திரர் மணலில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி மந்திரத்தைப் பதிலாக எழுதி விட்டுச் சென்றார்.

விஜய ரகுநாத தொண்டைமான் தன் அங்கவஸ்திரத்தில் அந்த மணலைக் கட்டி எடுத்துக் கொண்டு சென்று அரண்மனையில் பூஜித்து வந்ததாகச் சொல் கிறார்கள்.

சதாசிவ பிரம்மேந்திரரின் அருளைப் பெற்ற இன்னொரு மன்னர் சரபோஜி மன்னர். அவரது அமைச்சராக இருந்த மல்லாரி பண்டிட் என்பவர் சதாசிவ பிரம்மேந்திரரைச் சந்தித்து மன்னருக்கு மகன் பிறக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாகவும், அவரும் ஆசீர்வதித்து தனது ‘ஆத்மவித்யா விலாசம்’ என்ற நூலை அளித்ததாகவும் குறிப்பிட்டு எழுதிய கடிதம் வரலாற்று ஆவணமாக தஞ்சை சரஸ்வதி மகாலில் இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இப்படி ஒரு பிரம்ம ஞானியாகவே வாழ்ந்து வந்த சதாசிவ பிரம்மேந்திரர் தன் வாழ்வு கடைசிக் கட்டத்தை நெருங்குவதை உணர்ந்தார். அருகில் இருந்த அவரது பக்தர்களிடம் தனது சமாதியை கரூரை அடுத்த நெரூரில் அமைக்கும்படி எழுதிக் காட்டினார்.

அந்தப் பக்தர்கள் பெருந்துக்கம் அடைந்தனர். கண்களை மூடிக்கொண்டு கடைசி யாத்திரைக்குத் தயாராக இருந்த சதாசிவ பிரம்மேந்திரரிடம் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்திய அவர்கள் ‘இனி எங்களுக்கு யார் இருக்கிறார்கள்? எங்களுக்கு வழி காட்டுங்கள்’ என்று வேண்டினார்கள். கஷ்டப்பட்டு கண்களைத் திறந்த சதாசிவ பிரம்மேந்திரர் தன் கடைசி கீர்த்தனையை எழுதிக் காட்டினார்.

‘சர்வம் பிரம்ம மயம் ரே ரே  சர்வம் பிரம்ம மயம்...’ என்று தொடங்கும் அந்தக் கீர்த்தனையில் ‘எல்லாமே இறைமயம் தான். அப்படி இருக்கையில் கடவுளை எங்கே தேட வேண்டும். அந்தப் பிரம்மத்தில் அல்லவா நாமும் இருக்கிறோம்’ என்ற பொருள் இருக்கிறது.

1755 –ம் ஆண்டு சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதி அடைந்து இவ்வுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டார். நெரூரில் அவரது ஜீவ சமாதியைக் கட்ட புதுக்கோட்டை மன்னர் உதவி இருக்கிறார். இன்றும் அவரது ஜீவசமாதிக்குப் பல ஆன்மிக அன்பர்கள் சென்ற வண்ணம் இருக்கிறார்கள். சென்றவர்கள் அங்கு அவரது ஆன்மிக அலைகளை உணர்ந்த வண்ணம் இருக்கிறார்கள்.

அவரது ஜீவசமாதிக்கு ‘ஒரு யோகியின் சுயசரிதை’யை எழுதிய பரமஹம்ச யோகானந்தரும் சென்று வழிபட்டிருக்கிறார். அதையும் சதாசிவ பிரம்மேந்திரர் புரிந்த சில அற்புதச் செயல்களையும் அந்த நூலில் குறிப்பிட்டும் இருக்கிறார்.