youtube

22 March 2016

சரகலைபயிற்சி - Sarakalai- சரவித்தை

சரகலைபயிற்சி - Sarakalai- சரவித்தை

சித்தர் கலைகளில் உயர்நிலை கலைகளில்
முதன்மையான கலையே சரகலை
ஆகும்.இக்கலையினை ஆதியில் எம்பெருமான்
ஈசன் மகாசக்தியான அன்னை உமையவளுக்கு
உபதேசித்த உன்னத கலையாகும்.
சித்தர் கலைகள் அனைத்தும் இறைவனாகிய
சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டு பின்
அடுத்தடுத்து குருகுல வழி உபதேசமாக
சித்தர் பெருமக்களுக்கு உபதேசிக்கப்
பட்டவைகள் ஆகும்.

சிவன் சக்திக்குச் சொல்ல
சக்தி நந்திக்குச் சொல்ல
நந்தி காளங்கிக்குச் சொல்ல
காளங்கி மூலருக்குச் சொல்ல
மூலர் அகத்தியருக்குச் சொல்ல
என்ற சித்தர் பாடலின் படி ஆதி முதல் சித்தர்
எம்பெருமான் ஈசனே ஆகும்.

சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதே
பட்சி தெரிந்தவனை பகை கொள்ளாதே -
சரம் பார்ப்பான் பரம் பார்ப்பான் -
இவை முன்னோர் வாக்காகும். சரம்
தெரிந்தவனிடம் சரசமாடாதே என்பதன் பொருள்
சரகலையை இயக்கத் தெரிந்த வனிடம் சரசம்
என்ற விளையாட்டுத் தனமாக நடந்து
கொண்டால் சரம் கற்றவன் சீறி, சினந்து வாக்கு
விட்டால் அது அப்படியே பலித்து
விடும்.ஏனென்றால் பஞ்சபூத சக்திகள்
அனைத்தும் சரகலையில் தேர்ச்சி பெற்றவனின்
உடல், மனம் ,வாக்கு மூன்றிலும்
ஒருங்கிணைந்து ஆட்சி செய்யும்.
ஆனால் தெய்வீகக் கலையான சரகலையினை
முறைப்படி குருகுல முறையாக தீட்சை
பெற்று இதன் இரகசியங் களை பயிற்சி செய்து
சித்தி பெற்ற வருக்கு மட்டுமே இது
சாத்தியம். சித்தர் நூல்களை படித்து
தானாகவே பயிற்சி செய்து சித்தி பெறுவது
என்பது சாத்தியமாகாது.

ஏனென்றால் சரகலை
எனும் தெய்வீகக் கலையினை அனுபவ
முறையாக சித்தி செய்யும் சூட்சும
இரகசியங்கள் எந்த ஒரு சித்தர் நூல்களிலும்
பகிரங்கமாக வெளியிடப்பட
வில்லை. நவக்கிரகங்களின் செயல்பாடுகளை
கட்டுப்படுத்தும் வல்லமையும், பஞ்சபூத
சக்திகள் இக்கலைக்கு இணங்கி வேலை
செய்வதாலும் சித்தர் பெருமக்கள் இதன்
உண்மை இரகசியங்களை நூல்களில் பதிவு
செய்ய வில்லை. மேலும் தனக்கு இணக்கமான
சீடருக்கு மட்டும் குணம் ,தகுதி அறிந்து
உபதேசமாக தீட்சை அளித்து வந்துள்ளனர்.

நாம் மேலோர் எனப் போற்றப்படும்
மகான்கள்,யோகிகள், சித்தர்கள்,
முனிவர்கள்,ரிஷிகள்,அனைவரும் தெய்வீகக்
கலையான சரகலையில் தேர்ச்சி
பெற்றவர்களே.தான் இறைநிலையில் சித்தி
பெற்று,தன்னை நாடி வரும்
அன்பர்கள் குறையினை நீக்கி நல்வழி
காட்டவும் சரகலையினை பிரயோகம்
செய்துள்ளனர்.

சரகலையின் பிரயோக முறையால் மனம்
சார்ந்த பிரச்சினைகள், உடற்பிணிகள்,தொழில்
முன்னேற்றம்,தலைமைப் பண்பு,அனைத்து
காரிய வெற்றி,தேர்வில் வெற்றி,வெளியூர்
பயணங்களில் வெற்றி,நவகிரகங்களின்
தீமையை அகற்றவும்,கோர்ட் வழக்குகள்
வெற்றி,அனைத்து கலைகளில்
தேர்ச்சி,ஜோதிடம், மாந்திரீகம், மருத்துவம்,
போன்ற துறைகளில் வெற்றி பெறவும்,கடன்
நீங்கி பணம் வருவாய் பெறவும்,வாக்கு சித்தி
பெறவும்,மேலும் தனக்கு வரும் நன்மை
தீமைகளை அறிந்து தானே நிவர்த்தி செய்து
கொள்ளவும்,தன்னை நாடி வரும் அன்பருக்கு
உதவும் பொருட்டு அமையப்பெற்றது சரகலை
சாஸ்திரம் ஆகும்.

மேலும் சரகலை கற்று தேர்ச்சி பெற்றால்
இல்லறத்தில் பூரணத்துவ
நிம்மதி,சந்தோசம்,மகிழ்ச்சி பெறுவதுடன் சரம்
பார்ப்பான் பரம் பார்ப்பான் என்பதற்கிணங்க
ஆன்மீக இறைநிலை மெய்ஞான சித்தியும்
அடையலாம்.

சகோதர சகோதரிகளுக்கு பணிவான
வேண்டுகோள், பதிவு நீளம் பெரிதாக
இருக்களாம், இருப்பினும் ஒருமுறைக்கு
பலமுறை ஊன்றி படிக்கவும். காரணம்
என்னவென்றால் ஆன்மீகத்தில் காலடி எடுத்து
வைக்கும் ஒவ்வொருவரும் இந்த
சரவித்தையை தெரிந்துவைத்து கொள்வது
இன்றியமையாதது. ஏனென்றால் இது உங்கள்
வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் வள்ளமை
கொண்டது.

நாள், கோள், நட்சத்திரம் இவை முதலான
சோதிட நுட்பங்கள் எதுவுமே அறியாதவர்கள்
தங்கள் மன நினைவினாலே ஐயங்களை
தீர்த்துக் கொள்ள ஏதேனும் வழி உள்ளதா??
என்று உமாதேவி கேட்க!! அதற்கு
சிவபெருமான் உபதேசித்த கலையே சரகலை
அல்லது சரவித்தை.

கலைகளிலேயே முதன்மையானதும்
சிறப்பானதும் இந்த சரகலைதான் என்பது
அனுபவஸ்தர்கள் வாக்கு. காலை எழுந்தது
முதல் இரவு உறங்கப்போகும் வரை
உங்களுக்கும், உங்களை சுற்றி
உள்ளவர்களுக்கும் என்ன நடக்கப் போகின்றது
என்பதை இந்த சரகலையை கொண்டு 100%
சரியாக கணித்துவிடலாம். உங்களிடம் ஒருவர்
நல்லதுக்காக வருகிறாரா?? அவர் பேசுவது
உண்மையா?? இந்த நாள் உங்களுக்கு எப்படி??
போகும் காரியம் வெற்றி பெருமா?? என
அனைத்தையும் துள்ளியமாக
கணித்துவிடலாம்.
சரம் என்றால் சுவாசம் என்று பொருள்.

பொதுவாக நமது சுவாசம் மூன்று விதமாக
இயங்குகின்றது. அதாவது சுவாசம் இடது
பக்கமாக ஓடினால் இடகலை அல்லது
சந்திரகலை என்றும், வலது பக்கமாக ஓடினால்
பின்கலை அல்லது சூரியகலை என்றும்,
இரண்டிலும் ஓடினால் சுழுமுனை என்று
கூறுவர். இந்த சுழுமுனை சுவாசம் ஓடினால்
எந்த வேலையும் செய்யாமல் தியானத்தில்
மட்டும் அமர்ந்திருப்பதே நல்லது, மற்ற
வேலைகள் செய்தால் நடக்காது. சுவாசம்
வலது பக்கமாக ஓடினால் உடலால் செய்யும்
கடினமான வேலைகளை செய்வது சிறந்தது.

சுவாசம் இடது பக்கமாக ஓடினால் மனதால்
செய்யும் வேலையே சிறந்தது. மேலும்
சுவாசம் எந்த பக்கம் ஓடுகின்றதோ அதை
பூரணம் என்றும், சுவாசம் ஓடாத பக்கம்
சூனியம் என்றும் வகுத்துள்ளனர்.

உதாரணத்திற்கு உங்களுக்கு வலது பக்கம்
சுவாசம் ஓடுகின்றது என்று வைத்து
கொண்டால், வலது பக்கத்தை பூரணம்
என்றும், சுவாசம் ஓடாத இடது பக்கத்தை
சூனியம் என்று பொருள் கொள்ள வேண்டும்.

சரமாகிய சுவாசம் ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு பக்கத்தில் தொடங்க வேண்டும்
என்ற விதியுள்ளது. அது யாதெனில் திங்கள்,
புதன், வியாழன்(வளர்பிறை), வெள்ளி ஆகிய
நாட்களில் சுவாசம் இடது பக்கத்திலிருந்து தொடங்க வேண்டும். அதே போல் செவ்வாய்,
வியாழன்(தேய்பிறை), சனி, ஞாயிறு ஆகிய
நாட்களில் சுவாசம் வலது பக்கத்திலிருந்து தொடங்க வேண்டும். ஒருவேலை அந்த
நாளுக்குரிய சரம் ஓடாமல் வேறு சரம்
ஓடினால் நோய், பொருள் இழப்பு, மனக்கஷ்டம்
போன்றவை ஏற்படும். உதாரணதிற்கு திங்கள்
அன்று சுவாசம் இடது பக்கம் தொடங்காமல்
வலதில் தொடங்கினால் நோய் உண்டாகும்.

ஒருவருடைய சரம் சரியாக இயங்குகின்றது
என்பதை எப்படி கண்டுணர்வது என்றால்,
காலையில் கண்விழித்த உடனே உங்களது சரம்
(சுவாசம்) அந்நாளுக்குரிய சரத்தில்
ஓடுகின்றதா?? என்று கவனியுங்கள்.
அப்படி
ஓடினால் அந்நாள் உங்களுக்கு நன்மையான
நாள். உதாரணதிற்கு திங்கள் அன்று
கண்விழித்த உடனே உங்கள் சுவாசத்தை
கவனித்தால் இடதுபக்கத்தில் ஓடி
கொண்டிருக்க வேண்டும். அதற்கு பிறகு
சுவாசம் எந்த பக்கம் வேண்டுமானாலும்
மாறிக்கொள்ளலாம். தவறில்லை. ஆனால்
அப்படி ஓடாமல் திங்களன்று சூரியனுக்குரிய
வலதுகலையில் தொடங்கினால் நோய்
ஏற்படுவது 100% உறுதி. எழுந்த உடனே
சுவாசத்தை கவனித்து சரத்தை மாற்ற
கற்றுக்கொண்டால் நோயிலிருந்து தப்பித்துக்
கொள்ளலாம்.

அக்காலத்தில் முனிவர்கள் கையில் தண்டம்
என்ற ஒன்றை வைத்திருப்பார்கள்.
அது இந்த
சுவாசத்தை மாற்ற உதவும் கருவியே தவிர
வேறு ஒன்றுமில்லை. சுவாசத்தை எப்படி
மாற்ற வேண்டும் என்றால் அதற்கு பல வழிகள்
உண்டு. அவை

1. படுக்கையிலிருந்து எழும்போது எந்த
காலை முதலில் தரையில் அழுத்தி
ஊணுகின்றீர்களோ அந்த பக்கம் சுவாசம்
மாறிக்கொள்ளும்.

2. படுக்கையிலிருந்து எழாமல் எந்த பக்கம்
ஓடவேண்டுமோ அதற்கு எதிர் பக்கம் திரும்பி
படுத்துக்கொண்டு சுவாத்தை கவனிக்க
வேண்டும். உதாரணதிற்கு வலது பக்கம் சரம்
ஓடவேண்டும் என்று வைத்துக் கொள்வோம்,
உடனே இடது பக்கமாக திரும்பி படுத்து,
இடது கையை மடித்து தலைக்கு கீழே
வைத்து, கால்களை நீட்டி வலது கையை
வலது தொடை மீது வைத்துக்கொண்டு
உங்கள் சுவாசத்தை கவனித்தால், தானாகவே
சுவாசம் வலது கலைக்கு மாறிகொள்ளும்.

3. அல்லது நிமிர்ந்து உட்கார்ந்து இடது
தொடை மீது வலது காலைப் போட்டு
உட்கார்ந்தால் சுவாசம் வலதில் மாறியோடும்.
இதுவே கால்மேல் கால் போட்டு உட்காரும்
முறை. ஷிரடி பாபா படத்தை பார்த்தால்
புரியும்.

4.அல்லது உட்காரும்போது இடது கையை
தரையில் அழுத்தி சற்று இடது பக்கம்
சாய்ந்தவாறு உட்கார்ந்தால் சரம் வலதில்
மாறியோடும்.

5.அல்லது இடது அக்குலில் ஒரு கணமான
துண்டை மடித்து வைத்து கொண்டால்,
சுவாசம் வலதில் மாறிக்கொள்ளும்.

இவை அனைத்தும் சூரிய உதயத்திற்கு 20
நிமிடத்திற்கு முன்போ அல்லது உதயத்திற்கு
பின் 20 நிமிடத்திற்கு உள்ளாகவோ செய்து
கொண்டால் கூட போதுமானது. பிரம்ம
முகுர்த்தத்தில் செய்தால் மிக்க பயன் உண்டு,
அதாவது சூரிய உதயத்திற்கு 1 1/2 (4.30
A.M)மணி நேரத்திற்கு முன் உள்ள காலம்.

சுவாசத்தை கவனித்தல் என்பது இயற்கையான
தியான முறையாகும். எனவே இதில்
தியானமும் அடக்கம். புத்தரின் விபாசான
சுவாசத்தை என்னேரமும் கவனித்தலே ஆகும்.
இப்படி கவனிப்பதால் சரம் இடம்,வலம்,சுழுமுனை என மாறுவதை கவனிக்க முடிவும்.

மேலும் சுழுமுனை சுவாசம் ஓடும்போது
கவனித்தலே தியானமுறைகளில் சிறந்தது,
இதற்கென்று வேறு எதுவும் தேவையில்லை.

இப்படி கவனிக்கும் போது உங்களை சுற்றி
என்ன நடக்கின்றது?? எது உண்மை?? என
அனைத்தையும் துள்ளியமாக கண்டறிய
முடிவும்.

அது எப்படி?? ஒருவர் உங்களிடம் பேசுகின்றார்
என்றால், அவர் எந்த பக்கத்தில் வந்து
நிற்கின்றார் என கவனிக்கவும். அதாவது
உங்களின் வலது பக்கமாவா? அல்லது இடது
பக்கமாவா? என்று கவனிக்கவும். அவர்
உயரமான இடத்தில் நின்று பேசினாலோ
அல்லது உங்களிடம் நேருக்கு நேர் நின்று
பேசினாலோ அல்லது இடது பக்கத்தில் நின்று
பேசினாலோ உங்களின் இடது பக்கத்தில்
நிற்கின்றார் என கொள்ளவேண்டும். இதுவே
உங்கள் வலது பக்கத்தில் நன்றாலோ அல்லது
உங்களை விட தாழ்வான இடத்தில் நின்றாலோ
அல்லது உங்களுக்கு பின்னாடி நின்றாலோ
உங்களின் வலது என கொள்ளவேண்டும்.

இப்படி வலது, இடது என்பதை வைத்தே
அனைத்தையும் கணித்து விடலாம். முன்பே
கண்டது போல பூரணம் என்பது சரம் ஓடும்
பக்கம், அதுபோல் ஓடாத பக்கம் சூனியம்.

ஒருவர் சரம் ஓடும் பக்கம் நின்று எதாவது
பேசினால் அல்லது கேட்டால் அது உண்மை
மற்றும் நடக்கும் என்று பொருள், ஓடாத பக்கம்
நின்றால் அது பொய் மற்றும் நடக்காது என்று
பொருள். இது போன்று சகலத்தையும்
துள்ளியமாக கணிக்கலாம்.

திசைகளில் சூரியனுக்குரிய திசை கிழக்கு
மற்றும் வடக்கு ஆகும். அதுபோல்
சந்திரனுக்குரிய திசை மேற்கு மற்றும் தெற்கு
ஆகும். ஒருவருக்கு சரம் வலதில் ஓடும்
காலத்தில் சூரியனுக்குரிய திசையில் பயணம்
செய்தால் காரியம் நன்மையில் முடியும்.

அதுபோல் இடதில் ஓடினால் சந்திரனுக்குரிய
திசையில் செல்வது நல்லது. சந்திரன்
ஓடும்போது சூரியதிசையிலோ அல்லது
சூரியன் ஓடும்போது சந்திரதிசையிலோ
சென்றால் காரியம் சித்திக்காது.

சூரியசரம் நடக்கும்போது அதற்குரிய
திசையில் செல்லாமல் மாறாக
செல்லவேண்டும் என்றால் வலது காலை
முன்வைத்து ஒற்றையடியாக மூன்றடி தூரம்
நடந்துவிட்டுப் பயணத்தை தொடங்க
வேண்டும்.இதேபோல் சந்திரசரத்திற்கு இடதுகாலை முன்வைத்து செல்ல
வேண்டும். இரண்டுசரமும் ஒன்றாக நடந்தால்
இரண்டு கால்களையும் ஒன்றாகக்
கூட்டிவைத்து மூச்சடக்கி தத்தித்தத்தி
மூன்றுமுறை சென்றுபின் பயணம் செய்ய
வேண்டும்.

அதேபோல் ஒரு நல்ல ஒழுக்கநெறியுள்ள
உயர்ந்த மனிதரை சந்திக்கும் போது உங்களில்
பூரண பக்கத்தில் அவர் உள்ளபடி
நின்றுகொண்டால் மிக்க நன்மை தரும்.

அதேபோல் வழக்கு, தீயவர் போன்றோரை
சந்திக்க நேர்ந்தால் உங்களின் சூனிய
பக்கத்தில் அவர் உள்ளபடி செய்து கொண்டால்
அவர் பலம் குன்றிவிடும்.

கோவிலுக்கு செல்லும்போதும் உங்கள்
பூரணபக்கம் சுவாமியும், சுவாமியின்
பூரணபக்கம் நிங்களும் இருந்தால் மிக்க பலன்
உண்டு. அந்தந்த நாளுக்குரிய சரம் சுவாமிக்கு
முழுவதுமாக ஓடுவதாக கணக்கில் கொள்ள
வேண்டும்.

#எச்சரிக்கை- உலகையே ஆண்டுவந்த
ராஜவம்சத்தினர் இன்று இருந்த தடம்
தெரியாமல் அழிந்து மண்ணான காரணம், இது
போன்ற தெய்வ கலையை தவறாக தன்
சுயநலத்திற்காக பயன்படுத்தினதால்தான்
என்பது மறுக்க முடியாத உண்மை.

"சரம் பார்ப்பவனிடம் சரசம் கொள்ளாதே"
என்பது முன்னோர் வாக்கு. ஏன்னென்றால் "
சரம் பார்ப்பவன் பரம் பார்ப்பவன் ஆவான்".
எனவே நல்லவழியில் இதை பயன்படுத்தினால்
தெய்வத்திற்கு நிகராக கொண்டு செல்லும்
என்பது உறுதி.

#குறிப்பு- அடிப்படை சரவித்தையை மட்டுமே
இங்கு பதிவுசெய்ய பட்டுள்ளது. அனைத்தும்
தெரிய வேண்டும் என்றும் படத்தில் உள்ள
புத்தகத்தை கையில் வைத்து கொள்ளுங்கள்.

மேலும் சரவித்தையை குருமுகமாகதான்
மட்டுமே கற்க வேண்டும் என்று
சொல்வார்கள். அதை நம்ப வேண்டாம்.
இலவசமாக கிடைத்தால் கற்று கொள்ளுங்கள்.

பணம் கொடுத்து கிடைத்தால் இதையேதான்
சொல்ல போகிறார்கள். முன்பே கூறியது
போல் "சரம் பார்ப்பவன் பரம் பார்ப்பவன்". பணம்
பார்ப்பவன் அல்ல. குருவின் மீதும் திருவின்
மீதும் நம்பிக்கை வைத்து தொடங்குங்கள்.

மற்றவை தானாகவே வந்து சேரும்.இயற்கையு
ம் இறைவனும் கண்டிப்பாக ஒருவனுக்கு
நன்மையை மட்டுமே செய்வார்கள்.

வருடத்தில் எல்லா நாட்களும் எல்லா
நேரங்களிலும் சரம் பார்க்க வேண்டும் என்ற
அவசியம் இருந்தாலும், சரம் தானாகவே
சரியாக நடக்க ஒரு வழி உண்டு. அதாவது சரம்
பார்ப்பதில் நாள் சரம், நட்சத்திர சரம், திதி சரம்,
பஞ்சபூத சரம் மற்றும் அயன சரம் என்ற
முறைகள் உண்டு. இதில் அயன சரத்தை தவிர
மற்ற எல்லா சரங்களும் அடிக்கடி பார்த்து
சரிசெய்வது. ஆனால் அயன சரம் மட்டும்
வருடத்தில் இரண்டே நாட்கள் மட்டுமே பார்க்க
முடியும். மேலும் இந்த இரண்டு நாட்களில்
சரத்தை சரியாக நடக்கவிட்டால் போதும்,
வருடத்தில் எல்லா நாட்களிலும் சரம் சரியாக
நடக்கும்.

ஆடி மாதம் முதல் தேதி முதல் சூரியன்
தெற்கு நோக்கி நகரும் தட்சிணாயண காலம்
என்றும், வடக்கு நோக்கி நகரும் காலம் தை
மாதம் முதல் தேதி முதல் உத்தராயண காலம்
என்றும் சொல்வர். அயனம் ஆரம்பமாவதற்கு
முதல் நாள் பகலில் ஒருபொழுது மட்டுமே
உணவு உண்டு பரிசுத்தமாக இருந்து மறுநாள்
உத்தராயண மாகிய தைமாதம் முதல் தேதி
பொழுது விடிவதற்கு முன் ஐந்து நாழிகை
இருக்கும்பொழுது சரம் பார்க்க வேண்டும்.

அப்படி பார்க்கும் பொழுது எந்த நாளாக
இருந்தாலும் கவனிக்க தேவையில்லை. சரம்
இடதுபக்கமாக ஐந்து நாழிகை நேரம் சிதறாமல்
ஓட வேண்டும். தட்சிணாயணம் ஆடி மாதம்
முதல் தேதியானால் சரம் வலது பக்கத்தில்
ஐந்து நாழிகை நேரம் சிதறாமல் ஓட
வேண்டும். அவ்வாறு சரம் ஓடினால்
வருடத்தில் எல்லா நாட்களும் நலமாக
அமையும்.

இந்த சரவித்தையை படிப்பதோடு மட்டும்
விட்டுவிடாமல் உங்கள் வாழ்க்கையில் இதை
ஒரு அங்கமாக கொண்டால் அனைத்தும்
நன்மையாகவே நடக்கும் என்பது உறுதி.

அனைத்தையும் நன்கு புரியும்வரை
ஒருமுறைக்கு பலமுறை படித்து பலன் பெற
வேண்டும் என்பது பணிவான வேண்டுகோள்.

சரம் பார்த்தலை அதிகாலை 4 முதல் 6 மணி
வரை பார்த்து, தவறாக நடந்தால் சரிசெய்து
கொள்ள வேண்டும். துள்ளியமாக
கூறவேண்டும் என்றால் சூரிய உதயத்திற்கு
இரண்டு மணி நேரத்திற்கு முன் பார்க்க
வேண்டும். இதை பிரம்மமுகுர்த்த நேரம்
என்றும் வள்ளலார் இதை அமுதகாற்று
இறங்கும் நேரம் என்றும் கூறுவார்.

வள்ளலாரின் உபதேசத்தில் (அதிகாலை
எழுந்திருந்து இறைவனை வணங்குதல்)
என்பதன் காரணம் இதுதானாகும். இப்படி
எழுபவர்களுக்கு அந்த நாள் முழுவதும்
கிடைக்க வேண்டிய பயன் அந்த இரண்டு மணி
நேரத்திலேயே கிடைத்துவிடும் என்பார்.

சொல்ல கணக்கில்லாத பல நன்மைகளை இந்த
இரண்டு மணி நேரம் தன்னுல் அடக்கியுள்ளது.

வள்ளலார் உபதேசங்களை நன்கு அறிந்தவர்
இந்நேரத்தை சிறப்பாக பயன்படுத்திகொள்வர்.

முடியாதவர்கள் இதற்காக கஷ்டபட
தேவையில்லை, 4.30 மணிக்கு விழிப்பு
வந்ததும் சரத்தை கவனித்து அதற்கு ஏற்றது
போல் திரும்பி படுத்துக் கொண்டு உங்கள்
சுவாசத்தை கவனித்தலோ, இறை பிராத்தனை
செய்தலோ, அங், மோ, ஓம் போன்ற எதோ ஒரு
மந்திரத்தை மனதால் தொடர்ந்து உட்சரிப்பதோ,
கண்களை மூடி உள்ளே தெரியும் இருளை
கவனிப்பதோ போன்ற எதாவது ஒன்றே
போதுமானது, படுக்கையிலிருந்து
எழவேண்டிய அவசியமில்லை.
புறதூய்மையை விட அகதூய்மையே
சிறந்தது. இந்நேரம் நீங்கள் செய்யும்
செயலுக்கு பலன் ஆயிரம் மடங்கு அதிகமாக
கிடைக்கும் என்பது உறுதி. முயற்சி செய்து
பாருங்கள் தியானத்திற்கு என்று தனி நேரம்
ஒதுக்க தேவை இருக்காது. உங்கள் உள்ளினும்
உங்களை சுற்றியும் நல்ல மாற்றத்தை உணர
ஆரம்பிப்பீர்கள்.

இருப்பினும் திங்கள் காலையில் எழுந்தவுடன்
சரம் பார்க்க மறந்துவிட்டிர்கள் என்று
வைத்துக்கொள்வோம். அந்த நாளில்
முதல்முதலாக நீங்கள் கவனிக்கும்
சுவாசத்தையே கணக்கில் கொள்ள வேண்டும்.

அது பகலாகட்டும், மதியமாகட்டும்,
மாலையாகட்டும் நீங்கள் கவனிக்கும் முதல்
சுவாசம் இடதில் ஓடும். அதன்பின் ஐந்து
நிமிடத்திலோ அல்லது அதற்குமேல் பார்த்தால்
சரம் மாறிக்கொள்ளும் அதில் தவறில்லை.

அப்படி இல்லாமல் நீங்கள் கவனிக்கும் முதல்
சரம் வலது பக்கத்தில் நடந்தால், சரத்தை
இடது பக்கத்தில் மாற்றி கொண்டாலே
போதுமானது. சிலருக்கு காலை எழுந்தவுடன்
சரம் சரியாக நடக்கும் பின் சிறிது நேரம்
கழித்து சரம் மாறி நடக்கும். அதில் எந்த ஒரு
தவறும் இல்லை. நீங்கள் கவனிக்கும்
முதல்முதல் சரத்தையே கணக்கில் கொண்டு
சரி செய்ய வேண்டும். அதற்கடுத்து நடக்கும்
சரங்கள் மாறி நடந்தால் தவறில்லை.

நாம் சில முக்கிய காரியங்கள் செய்யும்முன்,
அச்செயலுக்கு ஏற்ற சர ஓட்டத்தை
மாற்றிவிட்டு செய்தால் அது நிச்சயம்
பலிக்கும். அல்லது சர ஓட்டத்திற்கு தக்கபடி
செயல்களில் ஈடுபட்டால் செய்யும் காரியம்
தோல்வியை தழுவாது, வெற்றியை
கொடுக்கும்.

நமக்கு #வலப்புறம் (பிங்கலை)
மூச்சோட்டம் செல்லும்போது செய்யப்பட
வேண்டிய காரியங்கள்:-
1. உணவு உட்கொள்வதற்கு.
2. குளிப்பதற்கு.
3. மலம் கழிப்பதற்கு.
4. முக்கியமானவரைக் காணுவதற்கு.
5. விஞ்ஞான, கணித ஆய்வு செய்வதற்கு.
6. கடினமான தொழில் செய்வதற்கு.
7. பணம் கோரி பெறுவதற்கு.
8. தன் பொருளை விற்பணை செய்வதற்கு.
9. நோய் தீருவதற்கு, மருந்து
உட்கொள்வதற்கு.
10. போதனை செய்வதற்கு.
11. தீராத வழக்கு தீருவதற்கு. 12.
உறங்குவதற்கு. மேற்கண்ட காரியங்களை
நமது மூச்சோட்டம் சூரியகலையில்
இருக்கும்போது செய்ய, அவை சுபமாக
முடியும். சூரியகலை ஆண்தன்மையுடையது.

நமக்கு #இடப்புறம் (இடகலை) மூச்சோட்டம்
செல்லும்போது செய்யப்பட வேண்டிய
காரியங்கள்:-
1. தாகம் தீர்க்க நீர் அருந்துதல். 2. பொருள்
வாங்குதல்.
3. ஜலம் (சிறுநீர்) கழிப்பதற்கு. 4. சொத்துகள்
வாங்குவதற்கும், பதிவு செய்வதற்கும்.
5. வீடுகட்ட, கடகால் தோண்டுவதற்கு.
6. புதுமனை புகுதல்.
7. சிகை அலங்கரிக்க.
8. ஆடை, ஆபரணம் வாங்குவதற்கு.
9. விவசாய நாற்று நடுவதற்கு. 10. தாலுக்கு
பொன் வாங்குவதற்கு.
11. தாலி கட்டுவதற்கு.
12. கிணறு வெட்டுவதற்கு.
13. புதிய படிப்பு படிக்க.
14. அரசியல் அமைச்சர்களை பார்க்க.
மேற்கண்ட காரியங்களை நமது மூச்சோட்டம்
சந்திரகலையில் இருக்கும்போது செய்ய,
அவை சுபமாக முடியும், என்று ஞான சர
நூல் கூறுகிறது. சந்திர கலை பெண்
தன்மையுடையது.

நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர் நாளை
இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும்
கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்று
கூறுகின்றார் என வைத்துக் கொள்வோம்.

தொலைக்காட்சி உங்களுக்கு இடது பக்கத்தில்
உள்ளது என வைத்துக் கொள்வோம்.

உங்களுக்கு அந்நேரம் இடது பக்கத்தில் சரம்
நடந்தால் முதலில் சொன்ன இந்தியாவுக்கு
வெற்றி எனவும், சரம் வலது பக்கம் நடந்தால்
இரண்டாவதாக சொன்ன ஆஸ்திரேலியாவுக்கு
வெற்றி என பொருள். இதேபோல் உங்கள்
மனைவி உங்களது வலது பக்கத்தில் நின்று
கொண்டு தனக்கு வரவேண்டிய 1000
பணத்தை தன் தோழியிடம் வாங்கி வருகிறேன்
என கூறும்போது உங்களுக்கு வலது பக்கம்
சரம் ஓடினால் கிடைக்கும் என்றும், இடது
பக்கம் ஓடினால் கிடைக்காது என்று பொருள்.

அதுபோல் கூட்டத்தில் இருக்கும் போது
ஒருவர் பேசிக்கொண்டிருப்பதை நீங்கள் கேட்க
நேர்ந்தால் அதிலும் உங்களுக்கு அவர் பக்கம்
மூச்சு ஓடவில்லை என்றால் அவர் பேசுவது
பொய் என பொருள்.

இவ்வாறு வழக்கு, அரசியல் என
அனைத்தையும் நீங்கள் உங்களது மூச்சை
கவனித்து சரியான படி நடந்தும், துஷ்டரை
கண்டால் தூர விலகியும், முடிந்தவரை
நன்னெறி கூறி திருத்தியும், உண்மைக்கு
புறம்பாகவும் சுயநலமாகவும் நடக்காதபடி
நல்வழி செல்லவும் நல்வழி காட்டியாக இந்த
சரசாஸ்திரமே அமையும்.

மேலும் உங்களிடம் ஒருவர் தனது நோய்
குணமாகுமா?? என கேட்டால், கேட்பவர் பக்கம்
உங்கள் சரம் ஓடினால் குணமாகிவிடும் என்று
பொருள். அதேபோல் உங்களுக்கு அவர் பக்கம்
மூச்சோடி அவருக்கும் உங்கள் பக்கம்
மூச்சோடினால் அந்நோயானது அவர்
வீட்டிற்கு செல்லும் முன்பே குணமாகிவிடும்.

மேலும் இருவருக்கும் எதிர்எதிர் திசையில்
மூச்சோடினால் அந்நோய் தற்போது குணமாக
வாய்ப்பில்லை என்று பொருள். எதிரே
உள்ளவரின் சரத்தை நாம் எப்படி
கண்டுபிடிப்பது என்றால்??

அவர் உட்கார்ந்திருந்தாலோ அல்லது
நின்றாலோ, அவர் உடம்பின் எப்பக்கம் அழுத்தம்
கொடுத்திருக்கின்றது என கண்டு அதற்கு
எதிர்திசையில் சரம் ஓடுவதாக எடுத்து
கொள்ள வேண்டும். மேலும் வந்தவர்
பெரும்பாலும் சரசாஸ்திரத்தை பற்றி அறிய
வாய்ப்பில்லை, எனவே அக்கிழமையின்படி
அவருக்கு எத்திசையில் ஓடுகின்றது என்பதை
எடுத்து கொள்ளலாம். அவர் உங்கள் வீட்டின்
உள்ளே வரும்போது எந்த காலை முதலில்
வைத்து வருகின்றார் என கவினித்து அதற்கு
எதிர் திசையில் ஓடுவதாக கணிக்கலாம்.

வருபவர் வலதுகாலை முதலடியாக வைத்தால்
அவருக்கு இடதுகலை நடக்கின்றது எனவும்,
இடதுகாலை முதலடியாக வைத்தால்
வலதுகலை நடக்கின்றது என கொள்ள
வேண்டும்.

மேலும் அவர் பேசிய முதல் வார்த்தையை
நன்கு கவனித்து அவ்வார்த்தையில் உள்ள
எழுத்துக்களை எண்ணி, அது ஒற்றை படையாக
அமைந்தால் அவர் இடதுபக்கம் அழுத்தம்
கொடுக்கின்றார் என அர்த்தம், எனவே
அவருக்கு சூரியகலை ஓடுகின்றது என
கணிக்க வேண்டும். இதேபோல் பேசிய
வார்த்தைகளின் எண்ணிக்கை இரட்டைபடை
எனில் வலதுபக்க அழுத்தம் எனக்கொண்டு
அவருக்கு இடதுகலை நடக்கின்றது என
கொள்ளவேண்டும். மேலும் அவர் உங்களுக்கு
முன்பக்கமாகவோ, இடதுபக்கமாகவோ அல்லது
உயரமான இடத்திலிருந்தோ கேட்கின்றாரெனில்
அவருக்கு இடது கலை ஓடுவதாக கொள்ள
வேண்டும். அதேபோல் வந்தவர் உங்களுக்கு
பின்பக்கமாகவோ, வலதுபக்கமாகவோ அல்லது
உங்களைவிட தாழ்வான இடத்தில் இருந்து
கேட்டால் அவருக்கு வலதுகலை நடப்பதாக
எடுத்துக் கொள்ள வேண்டும். இதை சரியாக
புரிந்து கொண்டு பறவை, மிருகம்,. என
அனைத்தும் அருகிலிருந்தாலும் சரி
தூரத்திலிருந்தாலும் சரி அவருக்கு ஓடும்
மூச்சானது உங்களுக்கு தெரிந்துவிடும்.
Post a Comment