youtube

27 May 2013

சந்திரன்

தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது லட்சுமிக்கு முன்பு அமுதத்துடன் வெளிப்பட்டவன் சந்திரன். அமுதத்தை உண்ட தேவர்கள் மயக்கம் அடைந்தபோது தன் ஒளியை பாய்ச்சி அவர்களை விழிக்கச் செய்தவன் சந்திரன். சிவபிரானின் ஒரு கண்ணாக சந்திரன் வருணிக்கப்படுகிறார். சிவன் தன் உடலில் ஒரு பாதியை உமையவளுக்கு கொடுத்தான்.
அந்த உமையவள் கண் தான் சந்திரன். எனவே ஜோதிட சாஸ்தி ரத்தில் தாய்க்குக் காரக கிரகம் சந்திரன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவர் எந்த ராசியில் பிறந்திருக்கிறார் என்பதை சந்திரனை வைத்துச் சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம். ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் எந்த வீட்டில் (ராசியில்) அமர்ந்திருக்கிறாரோ, அதுவே அவர் பிறந்த ராசியாகும்.
அதாவது, அவர் பிறந்த நட்சத்திரம் அந்த ராசியில்தான் அமைந்திருக்கும். அத்திரி முனிவர்க்கும் அனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர். சந்திரன் விஷ்ணுவின் இதயத்திலிருந்து பிறந்தவர் என்றும் குறிப்புகள் உள்ளன. தக்கன் தனது மகள்களான 27 பேரை (27 நட்சத்திரங்கள்) சந்திரனுக்கு மணம் செய்து வைத்தான்.
அந்த இருபத்தேழு பெண்களில் ரோகிணி என்பவளிடத்தில் மட்டும் சந்திரன் அதிக அன்பு கொண்டிருந்தான். அதனால் தக்கன் கோபத்தில் சந்திரனுக்குச் சாபமிட்டான். அச்சாபத்தால் நாள்தோறும் தேய்பவனாகவும், சிவபெருமானது அனுக்கிரகத்தால் மீண்டும் வளர்பவனாகவும் சந்திரன் இருந்து வருகிறான். சந்திரன் பதினாறு கலைகளை உடையவன்.
இவனது மண்டலத்திலே பராசக்தி தங்கி இருக்கிறாள். சந்திரன் நவக்கிரகங்களிலே சுபக்கிரகர், சிவபெருமானது மூன்று கண்களிலே இடது கண்ணாக இருப்பவர். மூன்று வகை நாடிகளிலே இடைகலை நாடியாக இருப்பவர். மூன்று வகைக் குணங்களிலே சாத்வீக குணமுடையவர். பராசக்தியின் அம்சமாக இருப்பவர்.
மிகுந்த அழகுடையவர், உயிர்களுக்குப் போகங்களை ஊட்டுபவர். சந்திரனை அம்புலி, இந்து, கலாநிதி குமுத சகாயன், சசாங்கதன், கதிர், நிலா, மதி முதலான வேறு பெயர்களிலும் அழைக்கிறார்கள். சந்திரனை வெண்மைநிற மலர்களால் அர்ச்சிப்பதாலும் வெண்மை நிற வஸ்திரம் உடுத்திக் கொள்வதாலும் முத்து மாலை அணிவதாலும் பவுர்ணமி விரதம் இருப்பதாலும், வெண்மை நிற துணி தானம் செய்வதாலும், அரிசி தானம் கொடுப்பதாலும் சந்திரக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும்.
சந்திரன் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்கள் பெரும்பாலும் அழகாகத் தோற்றமளிப்பார்கள். அறிவாற்றல், தெய்வ பக்தி, தியாக உணர்வு போன்றவை இவர்களிடம் காணப்படும். சிற்றின்பத்தில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள். சிலருக்கு இரு மனைவியர் அமைவார்கள். வெளிநாடுகளுக்குச் சென்று பணம் சம்பாதிப்பார்கள்.
மற்றவர்களுடைய சொத்துகளை அனுபவிக்கும் யோகமும் இவர்களுக்கு உண்டாகும். உடலின் பின்பக்கங்களிலோ, கழுத்திலோ அல்லது கைகளிலோ மச்சம் அல்லது மரு இருக்கும். இவர்களுக்கு அடிக்கடி சளியால் தொல்லை ஏற்படும். கல்வித்துறை, மருத்துவத்துறை போன்றவற்றில் இவர்கள் சிறப்பாகப் பணியாற்றி ஏராளமாகச் சம்பாதிப்பார்கள்.
பன்னிரண்டு ராசிகளையும் சந்திரன் முப்பது நாட்களில் வலம் வருகிறார். ஒரு ராசியில் இரண்டரை நாட்கள் சஞ்சாரம் செய்கிறார். ஓர் ஆண்டில் பன்னிரண்டு முறை ராசிச் சக்கரத்தை வலம் வந்துவிடுகிறார். சந்திரன் 2,4,6,8,12 ஆகிய வீடுகளில் சஞ்சரித்தால் அது வேதையாகும். மேலும் ஜாதகத்தில் சந்திரன் தீமை செய்பவனாக இருந்தாலும் அவரை பூஜித்து அவருடைய கொடூரத்தைக் குறைப்பது நல்லது. அவரை பூஜிப்பது பரிகாரமாகும்
Post a Comment