youtube

26 December 2015

சபரி மலை செல்வது ஒரு யாகம்

சபரி மலை செல்வது ஒரு யாகம்

சபரிமலைக்கு அய்யன் தரிசனத்தின் போகும் போது நெய் கொண்டு செல்வது ஏன்?

இருமுடியில் நெய் நிறைத்து நெய்த்தேங்காய் சுமந்து செல்வதற்கு
முன்று காரணங்கள் உள்ளன. முதல் இரண்டு காரணங்கள் புராண கதைகளை சார்ந்ததாகவும் , மூன்றாவது நமது வாழ்க்கையை  சார்த்துமாய் உள்ளன.

முதல் காரணம்: பந்தளராஜன் மனைவிக்கு தலைவலி ஏற்படுகிறது. உடனே புலிப்பாலால் தலைவலி தீரும் என பொய்க்காரணம் காட்டி ஐயப்பனை காட்டுக்கு அனுப்புகின்றனர். வளர்ப்புத் தந்தையான பந்தள மன்னன் மிக வருத்தத்துடன் மகனை வழியனுப்பும் போது, காட்டில் உண்பதற்காக பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக நெய்யில் தயாரித்த சில உணவு வகைகளை ஒரு முடியாகக் கட்டினான். அதே சமயம், சிவபக்தனான பந்தள மன்னன், முக்கண்ணனான சிவனின் அம்சம்போல் ஒரு தேங்காயை மற்றொரு முடியில் வைத்துக் கொடுத்தான். அந்த இருமுடிகளையும் இணைத்து திருமுடிமேல் ஏந்திய சிறுவன் மணிகண்டன், புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்றான். இருமுடியை முதன்முதலில் தலையில் ஏற்றியது ஸ்ரீஐயப்பன் என்று புராணம் கூறுகிறது. இவ்வாறு ஐயப்பன் செய்தது போலவே, இருமுடியை தலையில் தாங்கி ஐயப்பனை வழிபடும் முறையாக அதுமாறி, நாளடைவில் நிலைத்தும்விட்டது.

இரண்டாவது காரணம்: ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை பந்தளமகாராஜா ராஜசேகரன் ஐயப்பனை விட்டு பிரிந்து செல்லும் காலம் வந்தது. ஐயப்பன் பிரியும் நேரத்தில் மணிகண்டா, நீ காட்டுக்குள் குடியிருக்கப் போவதாய் சொல்கிறாய். அங்கே மலைகளைக் கடந்து வரவேண்டும். அவை சாதாரண மலையல்ல. வயதான நான் உன்னைக் காண எப்படி வருவேன் என்றார். அதற்கு மணிகண்டன் உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டும். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்து விடலாம் என அருள்பாலித்தார். அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனைக் காண பந்தளராஜா மலைக்குச் செல்வார்.மகனை வெறுங்கையோடா பார்க்கச் செல்ல முடியும். அவனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டாமா? என்ன கொண்டு செல்வது என யோசித்தார். நெய் இலகுவில் கெட்டு போகாத ஒன்று.

எனவே நெய்யில் செய்த பலகாரங்களை கொண்டு செல்வார். மேலும் தனி நெய்யை தேங்காய்க்குள் ஊற்றி கொண்டு சென்றால் இன்னும் பல நாள் கெடாமல் இருக்கும். ஐயப்பனைக் காணச் செல்வதென்றால் எளிதான காரியமா? பந்தளத்திலிருந்து நடந்தே மலை ஏறுவார். மலையை அடைய பல நாட்களாகும்.எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது. இருமுடிகட்டில் முக்கியமானது நெய் தேங்காய்தான். அத்துடன் ஐயப்பன் அரண்மனையில் இருந்த போது அணிந்த நகைகளையும் எடுத்துச் சென்ற பழக்கம் நாளடைவில் உருவானது. அது இப்போது பெரும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று கருடன் வழிகாட்டுவது விசேஷ அம்சம். வயதான அவர் மலை ஏற முடியாமல் ஐயோ அப்பா என்று சொல்லியபடியே பல இடங்களில் உட்கார்ந்தும் விடுவார். இந்தச் சொற்களே திரிந்து ஐயப்பன் என ஆனதாகவும் சொல்லப்படுவதுண்டு.

மூன்றாவது முக்கிய காரணம், தேங்காய் மற்றும் ஓடு  என்பது நமது உடல். தேங்காயில் நார் எல்லாம் நமது நாடி நரம்புகளால் சூழ பட்டது. தேங்காயின் உள்ளே உள்ள வெள்ளை பகுதி நமது சதை பகுதி, நமது உடல் முழுவதும் நீர்  மற்றும் இரத்தம்நிரம்பி உள்ளது அது தான் இளநீர். நமக்கு இருப்பது போல்  தேங்காயின்  வெளியே இரண்டு கண்கள் உள்ளன. மூன்றாவது கண் தான் ஞான கண். நெய் நிறைப்பதற்கு முன் தேங்காயின் மூன்றாவது கண் ஆன ஞான கண் திறக்கபட்டு அதன் உள்ளே உள்ள இளநீர் வெளியே எடுக்கபட்டு, பிறகு நமது ஆன்மாவை நெய்யாக உறுக்கி, மூன்றாவது கண் ஆன ஞான கண் வழியாக நமது
துயமான ஆத்மாவை நெய் வடிவில் உருக்கி நீரைக்கப்படுகின்றது. சபரிமலை சென்று அடைந்த பிறகு குருசுவாமி துணை கொண்டு அந்த தேங்காயை இரு பாகமாக உடைக்கப்பட்டு , அதாவது நமது ஆணவம், அகம்பாவம் எல்லா வற்றையும் உடைத்து,நெய்யை  மட்டும் வெளியே எடுத்து, அந்த பரிசுத்தமான நமது ஆன்மா வடிவிலான நெய்யை  சரணாகத வத்சலனான சபரிகிரி வாசனுக்கு அபிஷேகம் செய்ய படுகின்றது. நமது ஆன்மாவே இறைவனிடம் சேர்த்த பின் நமது உடல் உயிர் இல்லாத பிணம். அதை உணர்த்த தான் தேங்காய் இரண்டு பாகத்தையும் தீயில் இடுகின்றோம்.

 எத்தனை முறை சபரிமலை சென்றோம் என்பது முக்கியமில்லை. ஒவ்வொரு வருடம் சபரிமலை சென்று நாம் எந்த அளவிற்கு, நமது வாழக்கையை செம்மை படுத்தி உள்ளோம் என்பதே முக்கியம். எல்லோரும் செல்கின்றனர் நாமும் செல்வோம் என்று செல்வதில் எந்த பயனும் இல்லை . சபரிமலை செல்வது ஒரு யாகம். மற்ற கோவில்களுக்கு செல்வது போல் செல்லக் கூடாது  நாம் எப்படி ஒழுக்கத்துடன் அய்யனை தரிசனம் செய்ய நம்மை ஆயத்தபடுத்தி உள்ளோம் என்பதே மிகவும் முக்கியம். எத்தனை முறை சந்நிதியில் அய்யனை தரிசனம் செய்தோம் என்பது முக்கியம் அல்ல அய்யன் நம்மை ஒருமுறை பார்த்தானா என்பது தான் முக்கியம்.

தற்காலத்தில் சபரிமலை செல்வது ஒரு உல்லாச பயணமாகி விட்டது. அப்படி செல்லாமல், அசைக்க முடியாத மனம் ஒருநிலை படுத்திய தூய பக்தியுடன் சபரிமலை செல்வோம் வாழ்வில் பல நன்மைகளை அவன் அருளாலே அடைவோம்.

சரணாகத வத்சலனே சரணம் ஐயப்பா.
Post a Comment