youtube

20 March 2016

பங்குனி உத்திரத்தின் மகிமையும் சிறப்பும்:

மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.

நாம் எவ்வாறு ஒரு சுப காரியத்தைச் செய்யும் போது நாள் நட்சத்திரம் பார்த்து செய்கிறோமோ அதுபோலத்தான் தெய்வங்களும் அவர்களது திருமணங்களை நல்ல நாட்களில் நடத்தி இருப்பர்.

அதன்படி, உத்திரத்திற்கு தெய்வங்களே சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு. அதாவது பார்வதி - பரமேஸ்வரன், தெய்வயானை- முருகன், ஆண்டாள் - ரங்க மன்னார், மீனாட்சி சுந்தரேஸ்வரர் என் பல தெய்வத் தம்பதிகளின் திருமணங்கள் இந்த பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில்தான் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

இதைவிடச் சிறப்பான மற்றொரு விஷயம், ராமாயணத்தில் வரும் தசரதச் சக்ரவர்த்தியின் நான்கு புதல்வர்களும் பங்குனி உத்திரத்தில்தான் தங்களது திருமண வாழ்க்கையில் நுழைந்துள்ளனர்.

தெய்வங்களின் திருமணம் மட்டுமல்லாது, பல தெய்வ அவதாரங்களும் இந்த பங்குனி உத்திரத்தில் நடந்துள்ளது.

வள்ளியின் அவதாரமும், ஸ்ரீ ஐயப்பனின் அவதாரமும், அர்ஜ்ஜுனன் தோன்றியதும் இந்த நந்நாளில்தான்.

தெய்வங்களெல்லாம் தேர்ந்தெடுத்து சிறப்பித்த இந்த பங்குனி உத்திர நட்சத்திரத்தன்று விரதம் இருப்பதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும் உகந்த நாள் என்று கருதப்படுகிறது.

இந்த நந்நாளில் கோயில்களில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் :

பழனியில் காவடி உற்சவம், மயிலாப்பூரில் அறுபத்து மூவர் உற்சவம், சுவாமி மலையிலும், திருச்செந்தூரிலும் வள்ளி கல்யாணம், காஞ்சிபுரத்தில் கல்யாண உற்சவம், மதுரையில் மீனாட்சி திருமணம் என அன்று பல முக்கியக் கோயில்களிலும் திருவிழாக்கள் களை கட்டும்.

இவ்வளவு சிறப்பு மிக்க இந்த பங்குனி உத்திரத்திற்கு இந்த ஆண்டு மேலும் ஒரு சிறப்பாக அந்த நாளில் புனித வெள்ளி, ஹோலி, மிலாது நபி என அனைத்து மனத பண்டிகைகளையும் கொண்டுள்ளது. அதோடு அல்லாமல் அன்று பெளர்ணமியும் உள்ளது.

இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திர நாளில் ஆலயம் சென்று வழிபடுவோம். பக்தர்கள், எளியோருக்கு அன்னதானம் செய்து அவர்களது ஆசியைப் பெறுவோம்

No comments: