youtube

18 October 2016

உருத்திராட்சமும் சித்தர்களும்!

உருத்திராட்ச மணி மாலைகள் சித்தர் பெருமக்களின் அடையாளங்களில் ஒன்றாகவே இருந்திருக்கிறது. இன்றும் கூட நாம் உருவகப் படுத்தும் சித்தர் உருவங்களில் இந்த உருத்திராட்ச மாலைகள் இடம் பெறுவதை கவனித்திருப்பீர்கள். உருத்திராட்ச மணிகளைப் பற்றிய குறிப்புகள் பல்வேறு சித்தர்களின் பாடல்களில் நமக்கு காணக் கிடைக்கிறது. அந்த பாடல்களை எல்லாம் தொகுத்து இங்கே பகிர வேண்டுமெனில் இந்த தொடர் இரண்டு வாரஙக்ளுக்கு மேல் நீளும் என்பதால் திருமூலர் மற்றும் அகத்தியர் கூறியவைகளை மட்டும் இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.


திருமூலர் உருத்திராட்ச மணிகளின் மகத்துவம் பற்றி பின்வருமாறு விளக்குகிறார்.உருத்திராட்ச மணிகள் எந்த அளவுக்கு மகத்துவமானவை என்பது இந்த பாடல்களின் மூலம் அறியலாம்.


"பூதி யணிவது சாதன மாதியிற்
காதணி தாம்பிர குண்டலங் கண்டிகை
ஓதி யவர்க்கும் உருத்திர சாதனந்
தீதில் சிவயோகி சாதனந் தேரிலே"

- திருமூலர் -

"காதணி குண்டலம் கண்டிகை நாதமுன்
ஊதுநற் சங்கம் உயர்கட்டி கப்பரை
ஓதுமில் பாதுகம் யோகாந்த ஆதனம்
ஏதுமில் யோகபட் டம்தண்டம் ஈரைந்தே"

- திருமூலர் -

அகத்தியரும் தனது பாடல்களில் உருத்திராட்ச மணி பற்றிய பல தகவல்களை கூறியிருக்கிறார். அந்த வகையில் இன்று நாம் காண இருப்பது மிகவும் அரியதான ஒரு தகவல். ஆன்மீகத்தில் நாட்டமுள்ளவர் அல்லது துறவறம் மேற்கொண்டவர்கள் உருத்திராட்ச மணி மாலையினை உடலில் அணிந்திருப்பதை அவதானித்திருப்பீர்கள். அந்த மணி மாலைகள் எத்தகையதாக என்ன அளவுடன் இருத்தல் வேண்டும் என்பதை அகத்தியர் தனது சீடருக்கு அருளியிருக்கிறார். அந்த பாடல் பின்வருமாறு...


"துதிக்கவென்றால் புலத்தியனே இன்னங்கூர்வேன்
துப்புரவாய் செபமாலை பூணுங்காலம்
மதிக்கவே செபமாலை ருத்திரட்ச
மன்னவனே யாறுமுகந் தானெடுப்பாய்
பதிக்கவே செபமாலை முப்பதிரெண்டு
பாங்குடனே சடையதிலே யணியவேண்டும்
விதிப்படியே ருத்ராட்ச மன்பத்தொன்று
வேதவிதிப் பிரமாணம் செப்பக்கேளே"

- அகத்தியர் -

"கேளப்பா புலத்தியனே யின்னங்கூர்வேன்
கொடியான ருத்திராட்சம் மன்பத்தொன்று
மீளப்பா மாலயது களுத்திலேதான்
மிக்கவே தான்றரிக்க விதியேயாகும்
தாளப்பா கரகணுக்கில் செபமாலை
தகமையுட னுத்திராட்சம் பன்னிரெண்டாகும்
வேளப்பா ருத்திராட்சம் கங்கணந்தான்
நாதமுறைத் தான்படியே வட்டமாச்சே"

- அகத்தியர் -

"அட்டமாம் ருத்திராட்ச முழங்கைமேலே
அன்புடனே சரமதுவும் சோடசந்தான்
திட்டமுடன் சோடசமாம் பதினாறப்பா
தீர்க்கமுடன் முழங்கரமா மணியத்துள்ளே
நிட்டையிலே தான்பூண்டு மதியங்கொண்டு
நிஷ்களங்க மானசெப மாலைபூண்டு
சட்டமுட னசுவினியர் சொன்னநீதி
சடாட்சரனே யுந்தமக்கு சாற்றினேனே"

- அகத்தியர் -

மனதை ஒருநிலைப் படுத்தி செபம் செய்திடும் வேளையில் அணிந்திட வேண்டிய உருத்திராட்சங்கள் பற்றிய தகவலை தான் அசுவினி தேவரிடம் இருந்து அறிந்து கொண்டதாக கூறுகிறார். அதாவது இந்த உருத்திராட்சங்கள் அனைத்துமே ஆறு முகங்களை உடையதாக இருக்க வேண்டுமாம். முப்பதி இரண்டு மணிகளால் கோர்க்கப் பட்ட உருத்திராட்ச மாலையினை சடையிலும், ஐம்பத்தியோரு மணிகளால் கட்டப் பட்ட மாலையினை கழுத்திலும், பன்னிரெண்டு மணிகளால் கோர்க்கப் பட்ட மாலையினை மணிக்கரத்திலும், பதினாறு மணிகளால் கட்டப் பட்ட மாலையினை முழங்கைக்கு மேற்பட்ட பகுதியிலும் அணிய வேண்டுமென்கிறார்.


அடுத்த முறை துறவியர் அல்லது சிவனடியார் எவரையேனும் சந்திக்க நேர்ந்தால் அகத்தியர் அருளியபடி அணிந்திருக்கின்றனரா என்பதை அவதானியுங்கள்.


நாளைய பதிவில் உருத்திராட்ச மணிகளின் மருத்துவ குணங்க்ளைப் பற்றி பார்ப்போம்.

No comments: