youtube

29 December 2016

கல்யாண ஆஞ்சனேயர்

கல்யாண ஆஞ்சனேயர். நீங்கள் அறியாத தகவல்.வானிலே பறந்துசெல்லும் வல்லமை படைத்த அனுமன், அளப்பரிய ஆற்றல்கொண்ட சூரியதேவனிடம் கல்வி கற்க விரும்பினான். சூரிய பகவானும், அனுமன் வருங்காலத்தில் மக்களின் துன்பங்களைப் போக்கும் சக்தி கொண்டவன் என்பதையறிந்து, அனுமனை சீடனாக ஏற்றுக்கொண்டு ஒரு நிபந்தனையையும் விதித்தார்.

தனது தேரின் ஓட்டத்தை எக்காரணத்தைக் கொண்டும் ஒரு கணம்கூட நிறுத்த இயலாது என்றும், அனுமனது முகத்தைப் பார்த்துதான் தன்னால் உபதேசிக்க இயலும் என்றும் சொன்னார்.

அந்த நிபந்தனைக்கு உடன்பட்டு, சூரிய பகவானைப் பார்த்தபடி தேரின் ஓட்டத்திற்கேற்ப பின்புறமாக ஓடிக்கொண்டே கல்வி பயின்றான் அனுமன்.

தன் மாணவன் பின்னோக்கி ஓடி சிரமப்படுகிறானே என்று பரிதாபப்பட்டாலும், தன் தேரோட்டத்தை நிறுத்தினால் உலகமே ஸ்தம்பித்து கோடிக்கணக்கான உயிர்கள் துன்பப்படுமே என்ற கவலையும் சூரியன் மனதில் எழுந்தது.

ஒருசமயம்…

கற்புக்கரசியான நளாயினியின் கணவன், ஒரு முனிவர் சொன்ன அறிவுரைகளைக் கேட்காமல் தாசி வீடு சென்று உல்லாசமாக இருந்தார். கோபம்கொண்ட முனிவர், “நாளை சூரியன் உதிக்கும்போது நீ காலமாகக் கடவாய்” என்று சபித்துவிட்டார்.

இதையறிந்த நளாயினி, சூரியன் உதித்தால்தானே என் கணவர் மரணமடைவார் என்று, “சூரிய பகவானே, நாளை நீ உதிக்காதே” என்று ஆகாயத்தைப் பார்த்துக் கட்டளையிட்டாள். பதிவிரதையின் கட்டளைக்குக் கட்டுப்பட்டார் சூரியன்.

ஓயாது ஓடிக்கொண்டிருந்த சூரிய ரதம் ஒரே ஒருநாள் நின்றது. பூலோகம் செயலற்றுப் போனது.

ஜீவன்கள் துன்பப்பட்டன. உடனே தேவர்கள், நளாயினியை சமாதானப்படுத்தினர். சாபம் கொடுத்த முனிவரும் தன் சாபத்தை மாற்றிக்கொண்டு கானகம் சென்றார்.

இவ்வாறு சூரியனின் ரதம் நின்றதும் பல நிகழ்வுகள் நடந்தன.



சூரியனின் தேரோட்டியான அருணன், வெகுநாட்களாக தேவலோகம் சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளைக் காண விருப்பம் கொண்டிருந்தான். இந்த ஒருநாள் விடுமுறையை அதற்குப் பயன்படுத்திக்கொள்ள எண்ணினான்.

அதே உருவத்தில் இந்திர லோகத்திற்கு சென்றால் அனுமதி கிடைக்காது என்பதை அறிந்திருந்த அருணன், அழகான அப்சரக்கன்னி வடிவெடுத்து இந்திரலோகம் சென்றான். அங்கே காவலர்கள் அவனைத் தடுத்தார்கள்.

“நான் மேனகையின் தோழியான அருணாதேவி. மேனகைக்கு ஒப்பனை செய்பவள். இன்று அவசரத்தில் சரியாக ஒப்பனை செய்யவில்லை. அதனால் முகம் களையிழந்துவிடும்” என்று காவலர்களைப் பார்த்து புன்னகைத்தாள் அருணாதேவி.

அவளது புன்னகையில் மயங்கிய காவலர்கள், “இவள் மேனகையைவிட மிக அழகாக இருக்கிறாளே’ என்று அவளது அழகை ரசித்தபடி உள்ளே செல்ல அனுமதித்தனர்.

அங்கே மேனகையின் நடனத்தை ரசித்துக்கொண்டிருந்த இந்திரன், சபையினுள்ளே வந்தமர்ந்த அருணாதேவியைக் கண்டு, அவள் அழகில் நிலை குலைந்தான்.

நடனம் முடிந்ததும் எல்லாரும் சென்றுவிட, அருணாதேவியைப் போக விடாமல் அவள் முன்வந்து நின்றான். பெண்களை வசப்படுத்தும் கலையில் நிபுணனான இந்திரன், அவளைக் கட்டியணைத்தான். அதன் விளைவாக அழகான குழந்தை ஒன்று பிறந்தது.

(தேவலோகத்தில் இனக்கவர்ச்சிக்குக் கட்டுப்பட்டால் பத்து மாத கர்ப்பம் இல்லை.)

“மேனகையின் நடனத்தைக் காணும் ஆவலில் இங்கே வந்தேன். உண்மையில் நான் பெண்ணல்ல. சூரிய தேவனின் தேரோட்டியான அருணன். அழகிய பெண் வடிவில் வந்தது இப்போது வினையாகிவிட்டது. நாளை மீண்டும் நான் ஆணாகி தேரோட்டும் பணியைத் தொடரவேண்டும். அப்போது இது தாயில்லாத குழந்தையாகிவிடுமே. என் செய்வேன்?” என்று வருந்தினான் பெண்ணாக இருந்த அருணன்.

அதற்கு இந்திரன், “கவலைப்படாதே அருணாதேவி. இந்தக் குழந்தையை அகல்யாதேவியிடம் ஒப்படைத்துவிடு. அவள் வளர்த்துக்கொள்வாள்” என்று ஆலோசனை கூறினான்.

அதன்படியே அகல்யாதேவியிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு அருணாதேவி மீண்டும் அருணனாக மாறி சூரியலோகம் வந்தடைந்தான்.

மறுநாள் தேர் ஓட்டுவதற்கு வந்தான் அருணன். அவன் முகத்தில் ஏதோ கவலை சூழ்ந்திருப்பதைக் கண்ட சூரிய பகவான், “எங்கே நேற்று முழுவதும் உன்னைக் காணவில்லை?” என்று கனிவுடன் கேட்டார்.

அருணன், வெட்கத்துடன் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் சொன்னான்.

“அப்படியா?” என்று வியந்த சூரியன், “நீ எடுத்த பெண் உருவத்தை நான் காணவேண்டுமே” என்று சொல்ல, வேறு வழியின்றி அருணன் மீண்டும் அருணாதேவியாக மாறினான்.

அவளது அழகில் மயங்கிய சூரியன் அருணாதேவியை நெருங்கி ஆலிங்கனம் செய்தார்.

இப்போது இன்னொரு குழந்தை அங்கே அழ ஆரம்பித்தது.

மீண்டும் ஆணாக மாறிய அருணன் சூரியனிடம், “தேவனே, இந்திரனும் நீங்களும் உணர்ச்சிவசப்பட்டதால், இப்பொழுது இரண்டு தாயில்லாத குழந்தைகள் அவதரித்துவிட்டன. இந்தக் குழந்தையையும் அகல்யா தேவியிடம் ஒப்படைத்துவிடுகிறேன்” என்று சொல்லி, அப்படியே ஒப்படைத்தான்.

கௌதம ரிஷியின் மனைவியான அகல்யா, இரு குழந்தைகளையும் வளர்த்துவந்தாள். இந்த நிலையில், அகல்யாதேவி தவம் மேற்கொள்ள விரும்பினாள்.

இந்திரனுக்கும் சூரியனுக்கும் மகனாக அவதரித்த பிள்ளைகளால் தன் மனைவியின் தவம் கெட்டுவிடக்கூடாது என்றெண்ணிய கௌதம ரிஷி, அதற்கு என்ன செய்வதென்று யோசித்தார்.

வனத்தில், குரங்கு முகமுடைய வனராஜன் ஒருவன் மகப்பேறுக்காக ஒற்றைக்காலில் நின்று நெடுங்காலம் தவம் செய்வதை அறிந்த கௌதம ரிஷி, அந்த இரு குழந்தைகளின் முகங்களையும் வானரவடிவத்தில் மாற்றி அவன்முன் சமர்ப்பித்தார். குழந்தைகள் அழும் குரலைக் கேட்டு தவம் கலைந்த வனராஜன், தன்னைப்போல முகம் கொண்ட இரு குழந்தைகளைக் கண்டு, இறைவன் கொடுத்த வரம் என்று அன்புடன் அரவணைத்து எடுத்துச் சென்றான்.

அந்த இரு குழந்தைகளும் கிஷ்கிந்தை என்ற கானகத்தில் வளர்ந்தன.

இந்திரனின் புதல்வன்தான் வாலி. சூரியனின் மகன்தான் சுக்ரீவன்.

ராமகாவியத்தில் இந்த இருவரும் சிறப்பான இடத்தைப் பெறுகிறார்கள்.

“அனுமனே! நீ என் மகன் சுக்ரீவனுக்கு என்றென்றும் துணையாக இருக்கவேண்டும். உன் ஞானம், பராக்கிரமம் அனைத்தும் அவனுக்கே பயன்படவேண்டும். இதுவே நான் எதிர்பார்க்கும் குருதட்சணை” என்று சூரியன் சொல்ல, அதை மனமார ஏற்றுக்கொண்டான் அனுமன்.

கல்வி, இசை, கலை, வேதங்கள் என அனைத்தையும் அனுமனுக்குக் கற்றுத்தந்தார் சூரியன்.

அனைத்தையும் கற்றுணர்ந்த அனுமன் “நவவியாகரண பண்டிதன்‘ என்ற பட்டமும் பெற விரும்பினான். ஆனால், ஒரு குறிப்பிட்ட வியாகரணத்தைக் கற்கவேண்டுமானால் குடும்பஸ்தனாக இருக்கவேண்டும் என்பது நியதி. ஆகவே, அனுமன் மணம் புரியவேண்டும்.

சூரியதேவன், நவவியாகரணத்தை முழுவதும் கற்றுக் கொடுக்க விரும்பினார். அதற்காக தன் மகள் சுவர்ச்சலாதேவியை தன் மாணவனுக்குத் திருமணம் முடித்துவைத்தார் என்கிறது சூரியபுராணம்.

பிரம்மச்சாரி என்று பெரும்பாலோர் போற்றும் அனுமனின் திருமணக்கோலத்தை, சென்னை- செங்கல்பட்டு சாலையில், தைலாவரம் என்னும் திருத்தலத்திலுள்ள ஸ்ரீகல்யாண ஆஞ்சனேயர் கோவிலில் தரிசிக்கலாம். இங்கு மூலவராகசுமார் எட்டடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீஜெயவீர ஆஞ்சனேயர் எழுந்தருளியுள்ளார். இதே கோவிலில் தனிச்சந்நிதியில் உற்சவராக சுவர்ச்சலாதேவியுடன் பத்மபீடத்தில் தரிசனம் தருகிறார் ஸ்ரீகல்யாண ஆஞ்சனேயர். நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம் ஏந்திய திருக்கோலத்தில், சுவர்ச்சலா சமேத சதுர்புஜ சுபமங்களவரத ஆஞ்சனேயர் என்ற திருநாமத்தில் பக்தர்கள் வேண்டுவதை அளித்து மகிழ்விக்கிறார்.

ஆக, அனுமனுக்கு குருவான சூரியனே மாமனாராகவும் ஆனார் என்கிறது புராணம்.

No comments: