youtube

18 January 2013

மங்களம் தரும் ஸ்ரீதுளசி
 

 
முன்னொரு காலத்தில் சங்கசூடன் என்னும் ஓர் அசுரன் இருந்தான். அவன் அருந்தவம் பல புரிந்து வரங்கள் பல பெற்றிருந்தான். வர பலத்தால் அவன் பல கொடுமைகளைச் செய்து வந்தான். குழந்தைகளை மிதித்தும், குணசீலர்களைக் கொடுமைப்படுத்தியும், யாகங்களைச் சிதைத்தும், பெண்களின் கற்பைச் சூறையாடியும் களியாட்டம் போட்டு வந்தான்.
அவனது கொடுமைகளைத் தாங்க முடியாமல் மண்ணவரும் விண்ணவரும் பெரும் துயரம் அடைந்தனர். சங்கசூடனை அழிக்க வழி தெரியாமல் திணறினார்கள். கடைசியாக அவர்கள் மும்மூர்த்திகளிடம் சென்று தங்கள் குறைகளை முறையிட்டார்கள். அதனால் கோபமடைந்த மும்மூர்த்திகளுக்கும் சங்கடசூடனுக்கும் யுத்தம் நடந்தது.
ஆனால் சங்கசூடனை யாராலும் வெல்ல முடியவில்லை. அதற்கு காரணம் அவன் கடுந்தவம் புரிந்து அதன் பயனாய் பெற்றுத் தன் கழுத்தில் அணிந்திருந்த ஸ்ரீகிருஷ்ண கவசமாகும். அந்தக் கவசம் அவன் கழுத்தில் இருக்கும் வரை அவனை யாராலும் வெல்லவோ, அழிக்கவோ முடியாதென்று மும்மூர்த்திகளும் உணர்ந்தனர்.
சங்கசூடனின் மனைவி துளசி. மகாபதி விரதை, கற்புக்கரசி, கணவன் சொல்லை மீறி எந்தச் செயலும் செய்யாதவள். அழகு, அன்பு, கருணை அனைத்தும் நிறைந்தவள். அவளின் கற்பின் திறன் கணவனுக்கு அரனாக விளங்கியது. துளசியின் கற்பின் மகிமையை உணர்ந்த பரந்தாமன் கற்பினுக்கு அரனாக விளங்கும் துளசியை புகழ்ந்து ஸ்தோத்திரம் சொல்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று முடிவு செய்தார்.
பிறகு பத்து தோத்திரங்களால் பகவான் துளசியை புகழ்ந்துரைத்து துதித்தார். வைகுந்த வாசனே தன்னைத் துதித்ததை எண்ணி துளசி தன்னை மறந்தாள். நெஞ்சம் நிகழ்ந்தாள், மிகவும் மகிழ்ந்தாள். அன்பைப் பொழிந்தாள், அவரை வாயாரப் போற்றிப் பாடினாள், ஆடினாள், கற்புக்கனலாக நின்ற அவளை நாராயணர் ஆதரவாகப் பார்த்து வேண்டிய வரங்களைக் கேள் என்றார்.
அதற்கு அவள் மீண்டும் பிறவா வரமும், பிறந்தால் நாராயணரை மறவா மனமும் வேண்டும் என்றாள். பிறகு ஸ்ரீமகா விஷ்ணுவின் பாதார விந்தங்களில் பணிந்தாள், அவளது உயிர் மகாவிஷ்ணுவின் பாதங்களில் ஒளி வடிவாகச் சென்றடைந்தது.
அவளது உடல் கண்டகி என்னும் நதியாக மாறியது. அவளது கேசம், துளசி செடியாக துளசி வனமானது. ஸ்ரீமஹாவிஷ்ணு அந்த துளசியை மாலையாக்கி அணிந்து துவளத்தாமனாகக் காட்சி அளிப்பவரானார். மனைவியைப் பிரிந்த சங்கசூடன் சக்தியற்ற வனானான். அவன் முற்பகலில் செய்த கொடுமைகளே பிற்பகலில் அவன் அழிவிற்கு வழி வகுத்தன.
அவனை ஸ்ரீமஹாவிஷ்ணு எளிதில் வதம் செய்து எல்லோருக்கும் மங்களங்கள் தந்தருளினார். ஸ்ரீதேவியின் ஓர் அங்கம் பூவுலகில் தங்கி தம் மக்களின் உடற்பிணி உள்ளப்பிணி ஆகிய பிணிகளைப் போக்கி பேரின்ப வாழ்வளிக்க எடுத்த வடிவமே ஸ்ரீதுளசி. சாதாரணமாக காண்பவர்களுக்குச் செடியின் உருவமாகவும், பிணிகளைத் தீர்க்கும் மருந்துச் செடியாகவும் தெரிவாள்.
ஆனால் தெய்வீக நோக்குடன் காணும் போது உலகத்தை விளங்க வைக்கும் மகாலட்சுமியின் உருவ மாகக் காட்சி அளிக் கிறாள். ஸ்ரீதுளசி மாதா. ஸ்ரீமகா லட்சுமியே இந்த துளசிச் செடியாய் மாறி ஸ்ரீமகா விஷ்ணுவிற்கு மிகவும் விருப்பமுள்ள மலராக விளங்குகிறார். துளசி இல்லாத பூஜையை மகாவிஷ்ணு ஏற்றுக் கொள்வதில்லை.
"திருத்துழாய்'' என்ற பெயரில் பெருமாள் கோவில்களில் சிறந்த பூஜைப் பொருளாக விளங்குவது இந்தத் துளசியே! துளசி உள்ள இடத்தில் ஸ்ரீமகாவிஷ்ணு எப்போதும் வாசம் செய்கிறார். துளசியினால் விஷ்ணுவைப் பூஜித்தால் 1000 பால்குடங்கள் கொண்டு அபிஷேகம் செய்த மனமகிழ்ச்சியை ஸ்ரீமகாவிஷ்ணு அடைகிறார்.
கடைசி காலத்தில் துளசிதீர்த்தம் உட்கொண்டால் பிறவி நீங்கி வைகுண்ட பதவி கிடைக்கும். துளசியினால் ஸ்ரீமகாவிஷ்ணுவை மட்டுமின்றி ஸ்ரீமகாதேவனையும் அர்ச்சிக்கலாம். ஏனெனில் அவர் ஸ்ரீசங்கர நாரயாணராக இருக்கிறார்.
இத்தகைய மகிமை வாய்ந்த ஸ்ரீதுளசியை நம் வீடுகளில் அழகிய மாடங்களில் வளர்த்து, பக்தி சிரத்தையுடன் பூஜித்தால் வாழ்க்கையில் சர்வமங்களங் களையும் பெறலாம். கன்னிப் பெண்கள் பூஜித்தால் நல்ல கணவனைப் பெறுவார்கள்.
சுமங்கலிகள் பூஜித்தால் தீர்க்கமாங்கல்யத்தையும், சகல சவுபாக்கியங்களையும் பெறுவார்கள். இவ்வளவு பெருமை வாய்ந்த துளசி சரித்திரத்தை மனமுவந்து படிப்பவருக்கும், படிப்பதை கேட்பவருக்கும், ஸ்ரீதுளசி மாதாவின் பெருங்கருணையும் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பரிபூர்ண அருளும் கிடைக்கும்.

துளசியைப் பயன்படுத்துவது எப்படி?

கோவில்களிலும், நீர்நிலை கரைகளிலும், பாறை இடுக்குகளிலும் துளசி முளைத்திருக்கும். துளசியை விஷ்ணுவின் மனைவி என்பார்கள். ஏனெனில், அவனது மார்பில் என்றும் நீங்கா இடம் பெற்றிருப்பது துளசி மாலை. துளசியை பூமாதேவியின் அவதாரமாகக் கருதி பறிக்க வேண்டும்.
விஷ்ணு சேவைக்கும், குழந்தைகள், நோயாளிகளுக்கு மருந்தாகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதன் ஒரு துளியைக் கூட வீணாக்கக் கூடாது. தேவையான அளவு மட்டுமே பறிக்க வேண்டும். பயபக்தியுடன் சாப்பிட வேண்டும்.
கருந்துளசி மகிமை
கருந்துளசி விசேஷ குணமுடையது. இதன் சாறை இரும்புக் கரண்டியில் சுடவைத்து தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் கபக்கட்டு, காய்ச்சல் முதலானவை நீங்கும். நாய்த்துளசி என்ற ரகமும் சளியைக் குணமாக்கும் சக்தி கொண்டது.
துளசி அர்ச்சனை ஏன்?
பெருமாள் எப்போதும் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார். எனவே அவர் குளிர்ந்த தன்மையுடைவராகக் கருதப்படுகிறார். அவரது உடலுக்கு உஷ்ணம் தர வேண்டும் என்ற அக்கறையில், அவரது பக்தர்கள் உடலுக்கு வெப்பம் தரும் துளசி மாலை அணிவிக்கிறார்கள். துளசியால் அர்ச்சனை செய்கிறார்கள். குளிர்ச்சியால் மனிதனுக்கு இருமல், சளி ஏற்படுகிறது. இதைக் குணமாக்க துளசியைச் சாப்பிட்டு வெப்பத்தைக் கொடுக்கிறார்கள்.
சங்காபிஷேகத்தில் துளசி.
சங்கு, துளசி, சாளக்கிராமம் (புண்ணிய நதிகளில் கிடைக்கும் கல் வடிவ சிலை) மூன்றையும் ஒன்றாக பூஜிப்பவர்களுக்கு மகாஞானி யாகும் பாக்கியமும், முக்காலமும் உணரும் சக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம். சங்கில் தீர்த்தம் நிரப்பி துளசி மேல் வைத்து சங்காபிஷேகம் செய்வது மிகவும் சிறந்தது. சிவபெருமானுக்கு பிடித்த அபிஷேகங்களில் உயர்ந்தது சங்காபிஷேகம்.          

துளசியைப் பறிக்கும் முறை

துளசியை தனித்தனி இலையாகப் பறிக்கக்கூடாது. துளசியைக் கதிரோடு பறிக்க வேண்டும். நான்கு இதழ்களோடும், நடுவில் தளிரும் உள்ளதாகவும், அல்லது ஆறு இதழ்கள் உள்ளதாகவும் பறிக்க வேண்டும். துளசி இலை கிடைக்காவிட்டால் துளசித்தண்டை பறித்துக்கொள்ளலாம். அதுவும் இல்லாவிட்டால் துளசி வேர், வேரும் இல்லாவிட்டால் துளசி நட்டிருந்த மண்ணை எடுத்து சுவாமியின் பாதத்தில் வைக்கலாம். மண்ணும் கிடைக்காவிட்டால் `துளசி' என உச்சரித்தாலே போதும்.
துளசியைப் பறிக்க ஏற்ற நாட்கள்.
துளசியின் இலைகள் மட்டுமின்றி விதை, தண்டு, வேர் முதலான எல்லாமே பூஜைக்கு உரியவைதான். ஞாயிறு, செவ்வாய், வெள்ளியில் துளசி பறிக்கக்கூடாது. சதுர்த்தசி, அஷ்டமி, பவுர்ணமி, ஏகாதசி திதிகளில் பறிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
எவ்வகை துளசி யாருக்கு ஏற்றது?
சிலர் கருந்துளியைப் பயன் படுத்தக்கூடாது என் பார்கள். இது தவறான வாதம். துளசி கருமையாக மாறியிருந்தால் அது கிருஷ்ண துளசி எனப் படும். இந்த வகை துளசியை கிருஷ் ணனுக்கு மாலையாக அணி விக்கலாம். வீட்டில் கண் ணன் சிலை வைத்திருந்தால் அவருக்குச் சூட்டலாம். பச்சையும் சிறிதே வெண்மையும் கலந்த துளசியை `வெண் துளசி' என்பர். இதை ராமபிரானுக்கு மாலையாகச் சூட்ட வேண்டும். இது தவிர `செந்துளசி' என்ற அரிய ரகமும் உண்டு.

துளசியின் வகைகள் மற்றும் வேறு பெயர்கள்

துளசியில் 9 வகைகள்இருக்கின்றன.
1. கரியமால் துளசி
2. கருந்துளசி
3. கற்பூரத் துளசி
4. செந்துளசி
5. காட்டுத்துளசி
6. சிவ துளசி
7. நீலத்துளசி
8. பெருந்துளசி
9. நாய்த்துளசி.
துளசியின்  வேறு  பெயர்கள்...........
1.திருத்துழாய் (ஆண்டாளுக்கு முதலில் இந்தப் பெயரே இருந்தது),
2.துளபம்,
3.துளவம்,
4.சுகந்தா,
5.பிருந்தா,
6.வைஷ்ணவி,
7. லட்சுமி,
8. கவுரி,
9. மாதவி,
10.ஹரிப்பிரியா,
11.அம்ருதா,
12. சுரபி.

துளசி 10 பெருமை

1) தெய்வ மூலிகையாம் துளசியின் மகிமை அளவு கடந்தது.  
2) துளசி விஷ்ணுவிற்கு உகந்தது.  
3) ஈசுவரன், குபேரன், இந்திரன், அக்னி, பார்வதி, முருகன் ஆகியோர் துளசியை வழிபட்டனர்.  
4) துளசியை வணங்குவதால் நற்குலம், ஒழுக்கம், மக்கள்பேறு, செல்வம், கல்வி, நோயற்ற வாழ்வு, வியாபாரம் முதலியன பெருகும்.  
5) துளசி 400 விதமான நோய்களை போக்கும்.
6) சல்லிய கரணி என்னும் உயிர் ஊட்ட சக்தியை துளசி வழங்குகிறது என ஆயுர்வேத நூற்கள் கூறுகின்றன.  
7) துளசிச் செடியினை வளர்த்து, நீர் பாய்ச்சி, ஆண்களும் பெண்களும் வழிபட வேண்டும்.  
8) துளசிச் செடியின் வேர் மண்ணை நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.  
9) திருமணம் ஆகாத பெண்கள் தான் விரும்பிய கணவனை அடையவும், சுமங்கலிப் பெண்கள் மாங்கல்யம் நிலை பெறவும் துளசியை வழிபட வேண்டும்.
10) வாஸ்து தோஷம் நீங்க துளசி மாடத்தில் துளசியை வைத்து வழிபடலாம்.
துளசிச்செடியினை வளர்த்து, நீர் பாய்ச்சி, ஆண்களும் பெண்களும் வழிபட வேண்டும். 

துளசியை வழிபட வேண்டிய காலங்கள்

1.அன்றாடம் பெண்களும், ஆண்களும் வழிபடலாம்.
2.திருமணமாகாத பெண்கள் பவுர்ணமி மற்றும் துவாதசி திதிகளில் ஆராதனை செய்யலாம்.
3.ஏகாதசியன்று விரதமிருந்து வழிபட்டால்நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
4.திருமணமான பெண்கள் ஸ்ரீதுளசி தேவியை வழிபட்டு வந்தால், நன்மக்கட்பேறு அடைவர்.கர்ப்பம் தரித்த பெண்களின் அச்சம் நீங்கும்.
5.துளசி கவசத்தை மும்முறை காலை நேரத்தில் கூறி வருபவர்களுக்கு அஷ்டலட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
6.துளசி விரத்தை ஐப்பசி மாத வளர்பிறை துவாதசியில் தொடங்கி கார்த்திகை மாத வளர்பிறை துவாதசியில் முடிக்க வேண்டும்.
7.வேத விற்பன்னர் மூலம் அஷ்டாஷரம்,புருஷ சூக்தம் முதலியவற்றால் வழிபாடு பெற்றால் இஷ்டமான பலன்  உடனே கிட்டும்.
8.பெண் மூலிகையாம் துளசியின் அருகில் ஆண் மூலிகையான தொட்டால் சிணுங்கியை வைத்து வழிபட்டு வந்தால் நோய், நொடியின்றி நீண்ட நாள் வாழலாம். முதியோர்கள் நீண்ட ஆயுள் பெறுவர்.
9.வீடுகளில் பூஜை செய்ய முடியாதவர்கள் ஆலயங்களுக்குச் சென்று, திருவிளக்கேற்றி வழிபாடு செய்தால் பலன் முழுவதும் பெறுவர்.
10.ஆலயங்களில் தரும் துளசியை அருந்துபவர் சத்யநாராயண பூஜை செய்த பலன் பெறுவர்.
11.மகா விஷ்ணுவிற்கும்,ஸ்ரீதுளசிக்கும் திருமணம் செய்து வைப்பதன் மூலம் அசுவமேத யாகம் செய்த பலன் அடையலாம்.

துளசியின் மகத்துவம்

துளசிச் செடியின் வேர் மண்ணை நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும். திருமணமாகாத பெண்கள் தான் விரும்பிய மணாளனை அடையவும், சுமங்கலிப் பெண்கள் மாங்கல்யம் நிலை பெறவும் துளசியை வழிபட வேண்டும். வாஸ்து தோஷம் நீங்க துளசி மாடத்தில் துளசியை வைத்து வழிபடலாம்.

 

இல்லங்களில் துளசியை வளர்த்துப் பூஜிப்பதால் அந்த இல்லமே செழிப்படையும் என்பது ஐதீகம். துளசியின் மஞ்சரியை ஸ்ரீகிருஷ்ணருக்குச் சமர்ப்பிப்பவர் எல்லா விதப் பூக்களையும் சமர்ப்பித்த பலனை அடைவார்கள் என்று ஸ்ரீ பத்ம புராணம் கூறுகிறது.
துளசி இலை, ஹரியின் பூஜையில் சேர்க்கப்படாவிட்டால் அந்தப் பூஜையின் பலன் கிடைப்பதில்லை. மேலும் நிவேதனத்தின் போது துளசியின் ஸ்பரிசம் இருந்தால் மட்டுமே அந்த நிவேதனத்தை இறைவன் ஏற்கிறார். ஆகவே, துளசி தீர்த்தத்தால் மட்டுமே நிவேதனம் செய்ய வேண்டும்.
துளசி இலையின்,நுனியில் பிரம்மாவும், மத்தியில் விஷ்ணுவும் அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில், இரு அசுவினி தேவர்களும், எட்டு வசுக்களும், பதினோரு ருத்ரர்களும் பன்னிரண்டு ஆதித்யர்களும் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம்.
ஸ்ரீ கிருஷ்ணரை துளசியால் அர்ச்சிப்பவர், தம் முன்னோர்களையும் பிறவித்தளையில் இருந்து விடுவிக்கிறார். துளசி நிறைந்த காட்டுக்குள் பிரவேசிப்பவரது பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியாகிறது. எந்த இல்லத்தில் துளசி இருக்கிறாளோ அந்த இல்லத்தை துர்சக்திகள் அண்டாது.
அதனால் தான் வீட்டு முற்றத்தில் துளசி வளர்க்கும் மரபு உண்டாகியது. மேலும் அந்த இல்லத்தில் வசிப்பவர்களுக்கு யம பயம் கிடையாது. துளசியை வளர்த்து, தரிசித்து, பூஜிப்பதால் மனம், வாக்கு, உடல் ஆகிய மூன்றாலும் செய்த பாவங்கள் தொலையும்.
பூஜையின் போது துளசியை சமர்ப்பித்தால் பக்தி அதிகரிக்கும். துளசிச்செடியின் அடியில் ஸ்ரீ கிருஷ்ணரை வைத்துப் பூஜித்தால் மோட்ச சாம்ராஜ்யம் கிட்டும். துளசியைப் பூஜிப்பது, கங்கா ஸ்நானத்திற்குச் சமமான பலனைக் கொடுக்கும்.
கொடும் பாவங்கள் செய்தவனாயினும், அந்திமக் காலத்தில் துளசித் தீர்த்தம் அருந்தி, துளசித் தளத்தை தலையில் தரித்துப் பின் உயிர் நீக்க நேர்ந்தால், கட்டாயம் முக்தி அடைகிறான். துளசித்தளம், ஸ்ரீவிஷ்ணுவுக்கு மட்டுமின்றி சிவபெருமானையும் பூஜிக்க ஏற்றது.
விநாயகரை துளசியால் பூஜிக்கலாகாது. விரதத்தில் சிறந்ததாகப் போற்றப்படும் ஏகாதசி விரதத்தன்று உபவாசம் இருப்பவர்கள், ஏழு முறை துளசி இலையைச் சாப்பிடலாம். மறுநாள் துளசி தீர்த்தம் அருந்தியே விரதத்தை முடிக்க வேண்டும்.
ஏகாதசி அன்று துளசி பறிக்கக்கூடாது. திருவோண நட்சத்திரம், சப்தமி, அஷ்டமி, துவாதசி, சதுர்த்தசி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, மாலை வேளை, இரவு நேரம், ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி  ஆகியப நாட்களிலும், எண்ணை தேய்த்துக் கொண்டும் துளசி பறிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் இறை நாமத்தை உச்சரித்தவாறே பறிக்க வேண்டும். துளசியைப் பறித்து மூன்று நாள் வரை உபயோகிக்கலாம். துளசி மணிமாலை அணிவது உடலை நோய்கள் அண்டாது காக்கும். துளசி மணி மாலையால் செய்யப்படும் ஜபம் பன்மடங்கு பலனைக் கொடுக்கும்.
மூதாதையரின் திதி காரியங்களில் துளசி பயன்படுத்துவதாலும், துளசிச் செடிகளின் நிழல் படும் இடங்களில் செய்வதாலும் பரிபூரணப் பலன் கிடைக்கிறது. தானங்கள் செய்யும் போது முழுமையான பலன், தானம் செய்யும் பொருளுடன் துளசித்தளம் சேர்த்துக் கொடுப்பதாலேயே கிடைக்கிறது.
சங்கு, துளசி, சாளக்கிராமம் மூன்றையும் ஒன்றாக வைத்துப் பூஜிப்பவர்களுக்கு முக்காலமும் உணரும் மகாஞானியாகும் பாக்கியம் கிடைக்கும். கார்த்திகை மாதம், சுக்ல பட்ச துவாதசி திதியை `பிருந்தாவன துவாதசி' என கர்நாடக, மராட்டிய மாநிலங்களில் கொண்டாடுகிறார்கள்.அன்றுதான் ஸ்ரீகிருஷ்ணருக்கும், துளசிக்கும் திருமணம் நடந்ததாக ஐதீகம்.
நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகப் போற்றப்படுவதால், துளசி மாடத்தில் நெல்லி மரக்கொம்பையும் நட்டு, வாழை மர, தோரணங்களுடன், மாக்கோலமிட்டு அலங்கரித்து பூஜை செய்வார்கள். நிறைய தீபங்கள் ஏற்றி, பெண்களுக்கு தாம்பூலம், இனிப்பு அளிப்பது வழக்கம். எல்லா நலன்களும் தரும் ஸ்ரீ துளசியைப் பூஜித்து, வெற்றி பெறுவோம்!!

துளசி மாடக்கோலம்

துளசி மாடக்கோலம் 7x7 நேர்ப்புள்ளி வலையமைப்பில் இடப்பட்ட புள்ளிகளைச் சுற்றிச்செல்லும் வளை கோடுகளைப் பயன்படுத்திவரையப்பட்ட ஒரேமாதிரியான ஆறு கூறுகளை இணைத்துப் பெறப்பட்டுள்ளது. இவ்வாறான கூறுகளை ஒன்றுடனொன்று மூலைகளில் தொடுத்துக் கோலத்தை விரிவாக்கம் செய்யலாம்.
இணைக்கப்படும் கூறுகளின் எண்ணிக்கைக்கோ அல்லது உருவாக்கும் உருவமைப்புக்கோ எந்த வித எல்லையும் கிடையாது. கிடைக்கும் இடத்தின் அளவுக்கும், நேரத்துக்கும் தக்கபடி கோலத்தை அமைத்துக்கொள்ள முடியும். கோலம் வரைபவரின் கற்பனாசக்திக்கு ஏற்றபடி கோலத்தின் உருவ அமைப்புக்கு பொருத்தமான பெயரையும் இட்டுக்கொள்ளலாம்.
ஒரு கூறு கூட இங்கே காட்டப்பட்டதுபோல்தான் இருக்கவேண்டுமென்ற தேவை இல்லை. 7 x 7 நேர்ப்புள்ளிகளைப் பயன்படுத்தி பல்வேறு விதமான கூறுகளையும் கூட வரையமுடியும். அதுமட்டுமின்றி 7 x 7 நேர்ப்புள்ளிகளுக்குப் பதிலாக புள்ளிகளின் எண்ணிக்கையைக் குறைத்தோ, கூட்டியோகூட வெவ்வேறு அளவுள்ள கூறுகளை உருவாக்கலாம்.

உண்மையான பக்தியை நிரூபித்த துளசி

கிருஷ்ண பகவான் பாமா, ருக்மணி இருவர் மீதும் சமமாக அன்பு வைத்திருந்தார். இதில் ருக்மணி கிருஷ்ணன் மீது அளவில்லாத அன்பும், ஆழமான பக்தியும் கொண்டிருந்தாள். அத்துடன் கிருஷ்ணனை தன் மனதில் வைத்து எப்போதும் பூஜித்து வந்தாள்.
ஆனால் பாமாவோ, விஷ்ணு தன்னை மார்பில் சுமந்திருப்பதாலும், கண்ணனுக்கு தேரோட்டியாக இருந்ததாலும், தனது திருமணத்தின் போது ஏராளமான செல்வம் கொண்டு வந்தாலும் நாரதரின் உதவியோடு கண்ணனை தனக்கே உரிமையாக்கிகொள்ள நினைத்தாள்.
இதற்காக கண்ணனை, துலாபார தராசு தட்டின் ஒரு புறமும், மற்றொரு தட்டில் தனது செல்வம் முழுவதையும் வைத்தாள். ஆனால் தராசு சமமாகவில்லை. அப்போது அங்கு வந்த ருக்மணி, கண்ணனுக்காக கொடுக்க தன்னிடம் ஒன்றுமில்லையே என வருந்தி, கண்ணனுக்கு பிடித்த துளசி இலை ஒன்றை தராசு தட்டில் வைத்தார்.
அப்போது தராசு சமமாகியது. கண்ணன் புன்முறுவலுடன், நான் இப்போது யாருக்கு சொந்தமானவன் என்பது உங்களுக்கே புரிந்திருக்கும். நான், எனது என்ற அகந்தையை ஒழித்து, உண்மையான பக்தியுடன் என்னை சரண் அடைபவருக்கே நான் சொந்தம், என்றார்.
தனது அகந்தை நீங்கிய நிலையில் கண்ணனின் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமா, அந்த துளசி இலையை தன் தலையில் சூடிக்கொண்டாள்.

துளசியின் சிறப்பும், பெருமையும்

எத்தனை வகைப்பூக்கள் இருந்தாலும், துளசி செடி இல்லாவிட்டால் அது நந்தவனம் ஆகாது. 

*
துளசி மட்டுமிருந்தால் கூட அது சிறந்த நந்த வனமாகி விடும். 

*
துளசி படர்ந்த இடம் பிருந்தாவனமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா. 

*
துளசி மாலை அணிந்தோ, துளசி மாலையை கையில் பிடித்தோ பூஜிப்பவர்களுக்கு, 1000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். 

*
மரண காலத்தில் துளசி தீர்த்தம் அருந்துபவர்களை பெருமாள் தன்னுடன் சேர்த்து கொள்கிறார். 

*
பவுர்ணமி, அமாவாசை, சஷ்டி, தீட்டு காலங்கள், துவாதசி, மாதப்பிறப்பு, உச்சி வேளை, இரவு வேளை, எண்ணை தேய்த்து   கொண்டு துளசி பறிக்க கூடாது. 

*
அதிகாலைப்பொழுதும், சனிக்கிழமைகளிலும் விரல் நகம் படாமல் விஷ்ணு பெயரை உச்சரித்து கொண்டு துளசி பறிக்க வேண்டும். 

*
துளசி பறித்த 3 நாள் வரை உபயோகப்படுத்தலாம். 

*
விரதநாள், மூதாதையரின் திதி நாள், தெய்வ பிரதிஷ்டை நாள், இறைவனை வணங்கும் வேளை, தானம் செய்யும் போது ஆகிய  இடங்களில் துளசி பயன்படுத்துவதால் அந்த செயல் பரிபூரண பலன் கொடுக்கும்

துளசி மாலை அணிவது ஏன்?

கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான். விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு. கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன். ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனம் ஆடியவன். குளிர்ந்த மேனியன். எனவே தான், கண்ணன் துளசி மாலை அணிந்து கொள்வான். 

வீடுகளின் பின்பக்கத்தில் துளசிமாடம் அமைப்பதும் இதனால்தான். பூச்சிகள் நுழையாமல் தடுக்க, வீட்டின் பின்புறத்தில் துளசிமாடம் வைத்து, அதனை வழிபட்டார்கள். துளசி இருக்கும் இடத்தில் லட்சுமி வசிப்பாள். விஷ்ணு அருள் கிடைக்கும். 

வீட்டின் தென் மேற்குப் பகுதியில் சூரிய உதயத்தைப் பார்த்த நிலையில் துளசி செடியை தொட்டியில் வைத்து வழிபட வேண்டும். துளசி மாடத்திற்கு தினமும் நீர் ஊற்றி, கோலமிட்டு வழிபட்டு வந்தால் நல்லது. துளசி மாலையை விஷ்ணுவுக்கு அணிவித்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்
Post a Comment