youtube

18 January 2013

வசியம் மந்திரம் சித்தியாக செயல் முறை

நண்பர்களே!, மாந்திரிகத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் விளைவுகள் இதுவரை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் படவில்லை. மேலும் இம்மாதிரியான கலைகளை போலியான அறிவியல்(Pseudo Science) என்று நவீன அறிவியல் நிராகரிக்கிறது. எனவே இந்த கலையில் தவறான முன்னெடுப்புகள் அல்லது முயற்சிகள் தேவையற்ற எதிர்விளைவுகளையும், பாதிப்புகளையும் உண்டாக்கி விடக் கூடும்.

ஆகவே தகுதியான குருவின் வழிகாட்டுதல் இல்லாத பட்சத்தில் யாரும் இவற்றை முயற்சிக்க வேண்டாம். இங்கே பகிரப் படும் தகவல்கள் அனைத்தும் காலத்தால் அழிந்து கொண்டிருக்கும் சித்தர் பெருமக்கள் அருளிய தகவல்களை ஆவணப் படுத்தி, அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறு முயற்சி மட்டுமே!.

மாந்திரிக வரிசையில் இன்று முதலாவதாக வசியம் பற்றி பார்ப்போம். வசியம் என்பது ஒரு மனிதனை அல்லது மனிதர்களை தன் வயப்படுத்தி, தனது இச்சைகளுக்கு ஏற்ப அவரை அல்லது அவர்களை ஆட்டுவிப்பதாகும். தேவைகளைப் பொறுத்து இந்த வசியம் எட்டு பிரிவுகளாக அறியப் படுகிறது. அவை “ஜனவசியம்”, “ராஜவசியம்”, “புருஷவசியம்”, “ஸ்திரிவசியம்”, “மிருகவசியம்”, “தேவவசியம்”, “சத்துருவசியம்”, “லோகவசியம்” என அறியப் படுகிறது. இவற்றிற்கென தனித்த்துவமான செயல்முறைகள் சித்தர்களின் பாடல்களில் கூறப் பட்டிருக்கின்றன.

எந்த ஒரு மாந்திரிக முறையிலும் சித்தியடைய மந்திரம், யந்திரம் மற்றும் அதனை பிரயோகிக்கும் தந்திரம் ஆகிய மூன்றும் ஒன்றினைவது அவசியமாகிறது. இது தொடர்பான முன் தயாரிப்புகளைப் பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம். இருப்பினும் வாசிப்பின் வசதி கருதி மீண்டுமொரு தடவை வசிய முறைக்கான முன் தயாரிப்பு தகவல்களை மீண்டுமொரு முறை இங்கே தருகிறேன்.

வசிய முறையில் சித்தியடைய பயிற்சியினை ஒரு ஞாயிற்றுக் கிழமையில் துவக்கிட வேண்டும். மந்திர உச்சாடனத்தின் போது உருத்திராட்ச மணி மாலையினை பயன் படுத்திட வேண்டும். வட கிழக்கு திசையினை நோக்கியாவாறு, வில்வ மரத்தினால் ஆன பலகையை ஆசனமாக பயன் படுத்தி அமர வேண்டும். வசியத்திற்கான அதிதேவதை ஈசன், மல்லிகை மலரை பூசைக்கு பயன்படுத்திட வேண்டும்.

செம்பட்டு ஆடையை அணிவதற்கும்,அணிவிப்பதற்கும் பயன் படுத்திட வேண்டும். வசிய முறைக்கான மூல மந்திரம் “ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா”. வெள்ளி அல்லது செப்புத் தகட்டில் கீறப்பட்ட யந்திரத்தை பயன்படுத்திட வேண்டுமாம். காலை, மாலை என இரு வேளைகளும் பூசைகளை செய்திட வேண்டும்.

எல்லாம் சரிதான் இந்த யந்திரத்தை எப்படி அமைப்பது?, அந்த யந்திரத்தை பயன் படுத்தி எவ்வாறு சித்தியடைவது?

வசிய முறையில் சித்தியடைய மந்திரம், யந்திரம் மற்றும் இவற்றை பிரயோகிக்கும் தந்திரம் அவசியமென முன்பே பார்த்தோம். அந்த வகையில் முக்கியமான யந்திரத்தை எப்படி அமைத்திட வேண்டும் மற்றும் இதனை எவ்வாறு பயன் படுத்திட வேண்டும் என்பதை இனி பார்ப்போம்.

வசிய முறைக்கு பயன்படுத்த வேண்டிய யந்திரத்தினை அமைக்கும் முறையினைப் பற்றி கருவூரார் தனது பாடலில் பின்வருமாறு கூறுகிறார்.


"தானேதானாறுவகை நேரேகீறி
தண்மையாயாறுவரை குறுக்கேகீறி
கோனேகேளிருபத்தைந் தரையுமாச்சு
கொற்றவனேயரைதோரும் பீடங்கேளு
தேனேபார் முதல்வரையில் நாற்கோணந்தான்
தெளிவாகமருவரையில் முக்கோணந்
மானே நான் சொல்லுகிற ணன்டைவீட்டில்
மத்திடுவாய்வட்டமதை போடுபோடே"

"போடே நீயடுத்தவரை யைங்கோணம்பார்
பொன்னவனேயறுகோண படுதத்வீடு
நாடேநீநடுவணையைப் பிடித்துமாறு
நாயகனேயரைதோறும் மாறிக்கொள்ளு
வாடாதேவயநமசி யென்றுபோடு
வகையாகநடுவணையை முன்போல்மாறு
தேடாதேவகாரத்தில் றீயும்போடு
தெளிவாகயகராகத்தில் ஸ்ரீயும்போடே"

"ஸ்ரீயும்போட்டானவுடன் சொல்லக்கேளு
திகழானநகாரத்தில் ஐயும்போடு
நீயுமேமகாரத்தில் கிலியும்போடு
நேர்மையாய்சிகரத்தில் சௌவும்போடு
வாயுள்ளோய் எ - ஒ - அ - இ - உ - போடு
வாகாகவகாரத்தில் லம்தானையா
மாயுள்ளவளரென்சீஷா வகுக்கக்கேண்மோ
மைந்தனேயகாரத்தில் சௌவும்போடே"

"போட்டவுடன் நகாரத்தில் ஐம்தானப்பா
பொன்னவனேமகாரத்தில் ஈம்தான்போடு
நாட்டுவாய்ச்சிகாரத்தில் நம்தானையா
நலமாகப்போட்டுமல்லோ நவிலக்கேளு
தாட்டிகமாயிவையெல்லாங் கோர்வையாக
தப்பாமலரைதோரும் வரைந்துகொண்டு
காட்டுவேன்நடுவணையை முன்போல்மாறு
கருத்தகவரைதோறு மிப்படிப்படியேமாறே"

இந்த பாடல்களின் படி யந்திரத்தினை கீறினால் கீழே உள்ள படத்தில் இருப்பதைப் போல யந்திரம் இருக்கும்.இப்போது நமக்கு தேவையான அனைத்து முன் தயாரிப்புகளும், உபகரணங்களும் தயாராகி விட்டது.வாருங்கள் வசிய சித்தி பெறுவதற்கான செயல் முறையினை(தந்திரம்) பார்ப்போம்.

குருவருளை வேண்டி அவரின் மேலான அனுமதியுடன் ஒரு ஞாயிற்று கிழமை நாளில் நீராடி, செம்பட்டு ஆடை அணிந்து வடகிழக்கு திசையை நோக்கி வில்வ மரத்தினாலான ஆசனத்தில் அமர்ந்துகொண்டு, முன்னால் செம்பட்டிலான துணியில் யந்திரத்தை வைத்து; வசிய மூல மந்திரமான “ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா” என்ற மந்திரத்தை செபித்தவாறே மல்லிகை மலர்களால் யந்திரத்தை 108 தடவை அர்ச்சிக்க வேண்டும் என்கிறார். இதனை காலை மாலை என இரு வேளையும் ஒரு மண்டலம் தொடர்ச்சியாக செய்து வர வசியம் சித்திக்குமாம்.
Post a Comment