youtube

27 December 2013

7, இடத்து அதிபர் எங்கிருந்தால் என்ன பலன்களைக் கொடுப்பார்?

7, இடத்து அதிபர் எங்கிருந்தால் என்ன பலன்களைக் கொடுப்பார்?


லக்னத்திற்கு 1,2,4,5,7,9,10,11 ஆகிய இடங்களில் ஏழாம் அதிபர் நின்றால் நல்ல பலன்களை அளிப்பார்.  3,6,8,12 போன்ற இடங்களில் ஏழாம் அதிபர் மறைந்தால் நல்ல பலன்களை அளிக்க மாட்டார்.  இப்பொழுது ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்னென்ன பலன்கள் நடக்கும் என்று பார்ப்போம்.
லக்னம்
ஏழாம் அதிபர் லக்னத்தில் இருந்தால் மனைவி வந்த பிறகு இவருக்கு யோகம் ஏற்படும்.  பதவி, புகழ் அனைத்தும் திருமணத்திற்குப் பிறகு கிடைக்கும்.  பணம் நிறையவே கிடைக்கும்.  அயன சயன யோகம் அனைத்துமே கிடைக்கும் . அதாவது நல்ல சாப்பாடு, நல்ல படுக்கை, நல்ல வாழ்க்கை அனைத்துமே கிடைக்கும்.  வசதி படைத்த மனைவி இந்த ஜாதகருக்கு அமையும்.  ஏழாம் அதிபரும், லக்னாதிபதியும் நட்பு பெற்ற கிரகங்களாக இருந்தால் இன்னும் நல்ல பலன்களாகச் சொல்ல வேண்டும்.  இருப்பினும் வேறு சில பெண்களின் நட்பும், ஜாதகருக்கு தாமாகவே அமையும்.  எனவே இவ்வாறு அமையப் பெற்றவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
இரண்டாம் தனஸ்தானமான இரண்டாம் வீட்டில் ஏழாம் அதிபர் நின்றால் பணக்கார மனைவி அமைவார்.  அதாவது மனைவி வருவார் என்று பார்த்தோம்.  குரு பார்த்தால் கோடிஸ்வர மனைவி அமையும்.  ஏழை வீட்டிலிருந்து பெண் வந்தாலும் ஜாதகர் திருமணம் செய்து கொண்ட பிறகு பணம் லட்சக் கணக்கில் கொட்டும்? எனவே மனைவி லட்சாதிபதியாக வருவார்  மனைவியின் பெயரில் தொழில் செய்தால் லாபம் அபரிதமாகக் கொட்டும்.  அதே நேரத்தில் ஏழாம் அதிபதியின் திசை வரும் பொழுது கண்டமும் ஏற்படலாம்.  குரு பார்த்தால் இந்த தோஷம் விலகும்.
மூன்றில் ஏழாம் அதிபர் மறையலாமா! மறையக்கூடாது.  மறைந்தால் மனைவியால் லாபம் இல்லை.  கணவன்-மனைவிக்குள் பிரச்சனைகள் ஏற்படும்.  எனவே ஒருசிலர் மறுமணம் செய்து கொள்வார்கள்.  மூன்றாமிடம் சகோதர ஸ்தானம் அல்லவா! எனவே மனைவியால் சகோதர சகோதரிகளுக்கு லாபம்.  கொழுந்தனார், நாத்தனார் இவர்களுக்கு மனைவி நல்லவராக இருப்பார், கணவருக்கு கெட்டவராக இருப்பார்.
நான்கில் ஏழாம் அதிபர் நான்கில் அமரலாம்.  இந்த இடம் சுக ஸ்தானம் அல்லவா!எனவே மனைவி வந்த பிறகு கணவர் வாழ்வில் வசந்தம் வீசும்.  சுகமாக வாழ்வார்.  இந்த இடம் வீடு வாகனத்தைக் குறிப்பிடும் இடம்.  எனவே மனைவியால் கணவர் வீடு வாங்குவார்.  கார் வாங்குவார் எல்லாம் மனைவி வந்த நேரம் என்று ஓயாமல் தன்னுடைய மனைவியை ஜாதகர் புகழ்வார்.  இதே அமைப்பு பெண்ணின் ஜாதகத்தில் இருந்தால் திருமணம் செய்துக் கொண்ட பிறகு சொந்தமாக வீடு அமையும்.  வாகனம் அமையும்.  இந்த இடம் தாயாரைக் குறிக்கும் இடமல்லவா! எனவே மனைவியால் தாயாருக்கு லாபமே! மனைவியின் ஆதரவில் தொழில் செய்தால் ராஜயோகத்தை அனுபவிக்கலாம்.  குடும்பத்தில் மனைவியை அனைவரும் தாங்குவார்கள். இவர்களும் அதற்கேற்ப பதவிசாக குடும்பத்தை நடத்துவார்கள். பெண்ணின் ஜாதகத்தில் இதே அமைப்பு காணப்பட்டால், மாமனார், மாமியார், மருமகளை தாங்கோ தாங்கவென்று தாங்குவதை நீங்கள் பார்த்திருக்கலாம்.  சில குடும்பங்களில் மருமகனுக்கு ராஜமரியாதை இருக்கும்.  இதற்குக் காரணம் அந்த ஜாதகரின் மனைவியின் ஜாதகத்தில் ஏழாம் அதிபர் நான்கில் இருக்கும்.  எனவே ஆண்களே! உங்கள் மனைவியின் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருந்தால், நீங்கள் பாக்கியவான்களே!
ஐந்தில்:ஏழாம் அதிபர் ஐந்தில் அமலாமா! கண்டிப்பாக அமரலாம்.  கேந்திர ஸ்தானாதிபர் திரி கோண ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் அமர்வது ராஜயோகமே! ஓர் ஆணின் ஜாதகத்தில் இப்படிப்பட்ட அமைப்பு இருந்தால் அற்புதமான வாழ்க்கை அமையும்.  சுகபோகமான வாழ்க்கை அமையும்.  பூர்வ ஜென்ம புண்ணியத்தின் விளைவாக நல்ல வாழ்க்கை அமையும்.   செய்தொழில் சிறக்கும் குழந்தைகளால் நல்ல ஆதாயத்தை அடைவார்கள்.  மனைவியால் செல்வமும், செல்வாக்கும் உயரும், இதே அமைப்பு பெண்ணின் ஜாதகத்தில் அமைந்தால், கணவன் அமைவார். திருமணத்திற்கு பிறகு வாழ்க்கைத் தரம் உயரும்.  உத்தியோக உயர்வு கிடைக்கும்.  செய்தொழில் சிறக்கும்.  நல்ல குழந்தைகள் பிறப்பார்கள்.  ஆசாரமான நல்ல ஒழுக்கமுள்ள கணவன் பெண்ணுக்கு அமைவார்.  அதே போல ஆணின் ஜாதகத்தில் இருந்தால் ஆசாரமான நல்ல ஒழுக்கமுள்ள, புக்தியுள்ள பண்புள்ள மனைவி அமைவார்.
ஆறில் நோய், கடன் எதிரிகளைக் குறிக்கக்கூடிய ஆறாம் இடத்தில் களத்திர ஸ்தானாதிபதி இருந்தால் என்ன நடக்கும், கடன் ஏற்படும்? நோய் ஏற்படும்.  எதிரிகள் ஏற்படும், எப்படி ஏற்படும் என்று கேட்கிறீர்களா! மனைவியால் கடன் ஏற்படும்.  மனைவியின் உடல் நலம் பாதிக்கும்.  திருமணம் ஆனப் பிறகு ஜாதகரின் மனைவி நோயாளியாக மாறுவார்.  ஜாதகர் சம்பாதிக்கும் பணம் அனைத்தும் மனைவியின் வைத்தியத்திற்காகவே செலவு செய்வார்.  இதனால் கடன் ஏற்படும்.  மனைவியோ எதிரியாக மாறும் சூழ்நிலை ஏற்படும்.  இப்படி நீங்கள் கணிக்கலாம்.  சில நேரங்களில் பெண்களால் அவமானம் அமையலாம்.  பணமும் விரயமாகலாம்,  எனவே பரிகாரங்கள் செய்து கொள்வது அவசியம்.
ஏழாம் அதிபர் ஏழில் நின்றால் சொந்த வீட்டில் இருக்கிறார் என்று பொருள்.  அப்படியென்றால் மனைவி ஸ்தானம் வலுவாக இருக்கிறது என்று பொருள்.  ஏழாம் அதிபர் சுபகிரகமானால் மனைவியால் மகிழ்ச்சி.  சந்தோஷம் இவை அனைத்தும் கிடைக்கும்.  வியாபாரம் நன்றாக நடக்கும்.  ஏழாம் அதிபர் தீய கிரகங்களானால் மனைவியின் கை ஓங்கும்.  மனைவியின் பேச்சை இவர் தட்ட மாட்டார்.  ஏழாம் அதிபர் லக்னாதிபதிக்கு நட்பாக அமைந்தால், கூட்டுத் தொழிலால் ஆதாயம் கிடைக்கும்.  வரக்கூடிய மனைவி செல்வச்செழிப்புடன் இருப்பார்.
ஏழாம் அதிபர் எட்டாம் இடத்தில் இருக்கலாமா! மறைவு ஸ்தானங்களில் இருக்கக் கூடாது என்பதே உண்மை.  எட்டாமிடம் என்பது அஸ்டம ஸ்தானமாகும்.  இங்கு எந்த கிரகம் வந்தாலும் தீமையைத் தரும்.  அப்படியிருக்கையில் மனைவிக்குரிய ஸ்தானாதிபதி இங்கு இருந்தால் கண்டிப்பாக தீமையைச் செய்வார்.  மனைவியால் நிம்மதி குறைவு ஏற்படும். பெண்களால் கவுரவத்தை இழப்பார்கள்.  மனைவியின் ஊதாரியதனத்தால் கணவர் வருந்துவார்.  பொறுப்பு இருக்காது.  எனவே பரிகாரம் செய்து கொள்வது அவசியமாகும்.
ஒன்பது அதிபர் பாக்ய ஸ்தானமல்லவா! எனவே இங்கு ஏழாம் அதிபர் நின்றால், மனத்திற்குப் பிடித்த மாதிரி மனைவி அமையும், மனைவியால் பல யோகங்கள் ஜாதகர் அனுபவிப்பார்.  இளம் வயதிலேயே திருமணம் நடந்து விடும்.  மனைவியால் பல யோகங்களை ஜாதகர் அனுபவிப்பார்.  இளம் வயதிலேயே திருமணம் நடந்து விடும்.  மனைவியால் வெளிநாடு செல்ல வாய்ப்பும் அமையும்.  புகழ், செல்வாக்கு ஜாதகருக்கு ஏற்படும்.  பார்ட்னரால் தொழில் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பத்து அதிபர் இந்த இடம் தொழில் ஸ்தானம் அல்லவா!  இங்கு ஏழாம் அதிபர் அமர்ந்தால், மனைவி உத்தியோகம் பார்த்து நல்ல வருமானத்தை அடைவார்.  மனைவி பெயரால் செய்யும் தொழில் சிறக்கும்.  ஏழாம் அதிபர் பத்தில் இருந்தாலும், பத்தாம் அதிபர் ஏழில் இருந்தாலும் தொழிலில் செய்தால்,அமோகமான லாபம் கிடைக்கும்.  நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.  வீட்டு நிர்வாகத்தை மனைவிதான் கவனித்துக் கொள்வார்.  ஆண்களுக்கு அவ்வளவாக்க் குடும்ப பொறுப்பு இருக்காது.  சுபகிரகங்கள் இங்கு அமரலாம்.  ஆனால் கேந்திரஸ்தானாதியாகி இங்கு அமர்ந்தால் கேந்திராதிபத்ய தோஷம் ஏற்படும்.  எனவே இந்த தோஷத்தைக் கட்டுபடுத்த அவசியம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.
பதினொன்று மனைவியைக் குறிக்கக் கூடிய ஏழாம் அதிபர் லாபஸ்தானமான 11 ல் அமர்ந்தால் என்ன நடக்கும்?அமோகமாக லாபம் கிடைக்கும்.  லட்சாதிபதி மனைவி கிடைக்குமா அல்லது கோடிஸ்வர மனைவி கிடைக்குமா என்று சிலர் நிம்மைக் கேட்பார்கள்.  ஏழாம் அதிபர் 11ல் நின்றால் கண்னை மூடிக்கொண்டு சொல்லுங்கள்.  வரக்கூடிய மனைவி லட்சாதிபதியாகவோ அல்லது கோடிஸ்வரராக வருவார்.  ஏழாம் அதிபதி லாபம் ஏறி (11ல்) குருவின் பார்வையைப் பெற்றால் கோடிஸ்வர மனைவி அமைவது நிச்சயம்.  செய்தொழில் சிறக்கும், வீடு வாசல் வாகனம் சிறப்பாக அமையும்.  ஓர் ஏழைக்கு இந்த அமைப்பு இருந்தால் கூட, திருமணத்திற்குப் பிறகு வசதியுடன், அந்தஸ்துடன் வாழ முடியும்.
பதினொன்று விரய ஸ்தானமான 12 ம் இடத்தில் ஏழாம் அதிபர் நின்றால், மனைவியால் விரையம் ஏற்படும்.  மனைவிக்காக ஜாதகர் நிறைய பொருள் விரயம் செய்வார். ஜாதகர் குடும்பத்திற்காக, வம்பு வழக்கிற்காக நிறைய செலவு செய்வார்.  பொருள் நஷ்டம் ஏற்படும்.  ஏழாம் அதிபதியும் பன்னிரண்டாம் அதிபதியும் ஒரே அதிபராக இருந்தால் இந்த பலன் மாறுபடும்.  ஏனெனில் ஏழாம் அதிபர் 12 ம் வீடான சொந்த வீட்டில் அல்லவா நிற்கிறது.  சில நேரங்களில் விவாகரத்து வரைக்கும் செல்லக் கூடும்.
இனி ஏழாம் பாவம் வாழ்க்கைக் துணை நலத்தைத் தவிர, வேறு ஏதேனும் சில விஷயங்களை நமக்கு சொல்லி விடுகிறது.  12 வீடுகளில் அத்தனை விஷயங்களையும் சொல்லி விட முடியுமா என ஆச்சரியப்பட வேண்டியதில்லை.  இந்த பன்னிரிண்டு வீடுகளில், ஒவ்வொரு வீட்டைக் கொண்டும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.  ஆனால் ஏழாம் வீட்டிற்கும் மட்டும் பல விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் விதமாக ஜோதிட சாஸ்திரம் அமைக்கப்படவில்லை.
ஏழாம் பாவம் என்பது முழுக்க முழுக்க இல்லற வாழ்க்கையை மட்டுமே தெரிந்து கொள்ளும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது.  இல்லற வாழ்க்கை எப்படி இருக்கும்.  வரக்கூடிய மனைவி அல்லது கணவர் எப்படி இருப்பார்.  வசதியான இடத்திலிருந்து மனைவி வருவாரா அல்லது கணவர்  எப்படி இருப்பார், வசதியான இடத்திலிருந்து மனைவி வருவாரா அல்லது கணவர் வருவாரா – இப்படி சுற்றச்சுற்றி மணவாழ்க்கையை மையப்படுத்தியே ஏழாம் பாவம் சொல்கிறது.  மணவாழ்க்கையைத் தவிர்த்து வேறு ஒரு சில விஷயங்களுக்காக ஏழாம் பாவத்தைப் பார்ப்பதில்லை.  திருமண வாழ்க்கையை தெரிந்து  கொள்ள மட்டுமே இந்த வீட்டைப் பார்க்கின்றார்கள்.
திருமண வாழ்க்கையைத் தவிர்த்து, வேறு ஒரு விஷயத்திற்காக இந்த ஏழாம் வீட்டைப் பார்க்கின்றார்கள் என்றால், அது வியாபாரம் செய்ய பங்குதார்ர்களைப் பார்ப்பதற்காகவே என்று சொல்ல்லாம்.  வியாபாரத்தில் தொழில் செய்ய நம்முடன் இணைப்பவர்களை பிஸினஸ் பார்ட்னர் என்று சொல்கிறோம்.  இல்லறத்திற்கு life partner ஐ தேர்வுசெய்வது போல, தொழில் செய்வதற்கு நாம் பார்ட்னர்களை சரியாகத் தேர்வு செய்வதில்லை.  இதன் காரணமாகவே பலபேர் வியாபாரத்தில் பார்ட்னர்களிடம் ஏமாந்து விடுகின்றனர்.  தொழில் செய்து நொடிந்து விடுகின்றனர்.  எனவே நண்பர்களை தொழில் பார்ட்னர்களாக சேர்த்து, தொழில் செய்வதாக இருந்தால், ஜாதகம் பார்த்து, பொருத்தம் பார்த்து அதன்பிறகே தொழில் செய்ய வேண்டும்.
ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாம் பாவம் லக்னத்திற்கு உதவி செய்யக்கூடிய வகையில் இருந்தால் நல்ல மனைவி கிடைப்பதைப் போல தொழில் செய்யவும், நல்ல பார்ட்னர் கிடைப்பார்.  ஏழாம் பாவம் பாதிக்கப்பட்டால் நல்லமனைவி அதாவது பிரச்சனைகளைக் கொடுக்காத மனைவி) கிடைக்கமாட்டார்.  எனவே நான் ஏழாம் பாவத்தில் என்னென்ன கிரகங்கள் இருந்தால் எப்படிப்பட்ட மனைவி அமையும்? மனைவியால் நல்ல நடக்குமா அல்லது நடக்காதா என்பதை நாம் தெரிந்து கொள்கிறோமல்லவா!  அந்த பலன்களை அப்படியே பிஸினஸ் பார்ட்னர்களுக்கு பொருத்திக் கொள்ளவேண்டும்.  மனைவியால் நல்லது நடக்கும் என்றால் பார்ட்னரால் நல்லது நடக்கும்.  மனைவியால் பிரச்சனை நடக்கும் என்றால் பார்ட்னரால் பிரச்சனை நடக்கும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
ஏழாம் வீட்டு அதிபர் 2ம் வீட்டில் லக்னாதிபதியோடு சேர்ந்து நின்றால் பார்ட்னரால் நல்ல லாபம் வரும்.  ஏராளமான பணத்தைப் பெறுவார்.  லக்னாதிபதியோடு சேராமல், தனியாக தனஸ்தானத்தில் ஏழாம் அதிபர் நின்றாலும் பார்ட்னரால் பணம் கிடைக்கும்.  இதே போல 9 வீட்டில் இருந்தாலும், 10 ம் வீட்டில் இருந்தாலும் நல்ல ஆதாயத்தை ஜாதகர் பார்ட்னரால் அடைவார்.  லாபஸ்தானமான 11ம் இடத்தில் 7ம் அதிபர் இருந்தால், பார்ட்னரால் அடைவார்.  லாபஸ்தானமான 11ம் இடத்தில் 7ம் அதிபர் இருந்தால், பார்ட்னரால் கண்டிப்பாக லாபம் கிடைக்கும்.  எனவே ஜாதகர் துணிந்து பார்ட்னர்ஷிப் கம்பெனியை நடத்தலாம்.
ஏழாம் வீட்டு அதிபர் 3,6,8,12 போன்ற இடங்களில் மறைந்தால் பார்ட்னரால் எவ்வித லாபமும் இல்லை.  பிரச்சனைகள்தான் ஏற்படும்.  ஏழாம் வீட்டு அதிபர் 6ல் அமர்ந்தால், இப்படிப்பட்ட ஜாதகர் வேறு ஒரு நபரைத் தொழிலில் பங்குதாராக சேர்த்துக் கொண்டு தொழிலைத் தொடங்கினால் தொழிலில் சரிவு ஏற்பட்டு, கடன் ஏற்படும்.  இப்படிப்பட்ட அமைப்பை உடையவர்கள் மற்றவர்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் நடத்தக் கூடாது. ஏழாம் அதிபர் 12ல் இருந்தால், அது விரயஸ்தானமல்லவா! பார்ட்னரால் ஏகப்பட்ட விரயம் ஆகிவிடும்.  எனவே ஏழாம் வீட்டை வைத்துக் கொண்டு ஒருவர் கூட்டுச் சேர்ந்து தொழிலை நடத்தலாமா அல்லது வேண்டாமா என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.
ஒருசிலர் கூட்டுத்தொழில் ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொல்கிறார்களே, அவர்களுடைய ஜாதகத்தில் கூட்டுத் தொழிலால் எவ்வித பிரச்சனைகளும் இல்லை என்றிருக்கிறதே! அப்படியென்றால் எடுத்த உடனேயே கூட்டுத் தொழில் வேறொரு நபருடன் செய்யலாமா என்று நினைக்கவேண்டாம்.  யாருடன் தொழில் செய்ய விரும்புகின்றோமோ, அவர்களுடைய ஜாதகமும், நம்முடைய ஜாதகமும் பொருந்துகிறதா என்று பார்க்கவேண்டும்.  திருமணப் பொருத்தம் எப்படி பார்க்கின்றார்களோ அப்படி தொழிலில் கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கும் பொருத்தம் பார்க்கவேண்டும்

No comments: