youtube

23 November 2016

 கார்த்திகை மாதத்தில் மட்டும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இதன் சிறப்பு என்ன?

கார்த்திகை மாதம் என்றவுடன் கார்த்திகை தீபத்திருநாள் நம் நினைவிற்கு வரும். பஞ்சபூத க்ஷேத்திரங்களில் அக்னி ஸ்தலமாகிய திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருநாள் அன்று சிவபெருமானின் ஜோதி ஸ்வரூபத்தைக் காணும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒருமித்த குரலில் பக்திப் பரவசத்தோடு அரோகரா என்று ஆர்ப்பரிக்கும் சப்தம் ஆகாயத்தைத் தொடும். கார்த்திகை மாதம் முழுவதும் பெரிய ஆலயங்கள் மட்டுமல்லாது, சிறு கோயில்களும் விளக்கொளியில் மின்னும். ஆன்மிக அதிர்வலைகளால் நம் அகத்தில் உள்ள அழுக்கை அகற்றி நெஞ்சத்திற்கு பக்தி நெகிழ்ச்சியைத் தரவல்லது இந்த கார்த்திகை மாதம்.

ஜோதிட சாஸ்திர ரீதியாக ஆராய்ந்தால், கார்த்திகை நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தில் பௌர்ணமி தோன்றும் மாதத்தை கார்த்திகை மாதம் என்றழைக்கிறோம். இவ்வாறே சித்திரை, வைகாசி என தமிழ் மாதங்கள் அனைத்தும் பௌர்ணமி நிலவு தோன்றும் நாளில் சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரத்தின் பெயரில் அமைந்திருப்பதை நாம் காணலாம். சந்திரனுக்கு ‘திங்கள்’ என்ற பெயரும் உண்டு. எனவேதான் திங்கள் என்றால் மாதம் என்றும் பொருள் கூறுவர் நம் தமிழறிஞர்கள்.

மற்ற மாதங்களில் உண்டாகும் பௌர்ணமி நாட்களை விட கார்த்திகை மாதப் பௌர்ணமிக்கு ஏன் இத்தனை மகத்துவம் தெரியுமா? ஜோதிடத்தில் சந்திரனை மனோகாரகன் என்றழைப்பர். நாம் பிறக்கும் நாளன்று சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரமே நமது ஜென்ம நட்சத்திரமாகவும், சந்திரன் அமர்ந்திருக்கும் ராசியே நமது ஜென்ம ராசியாகவும் அமைகின்றன. மனிதனின் மனநிலைக்கும், சந்திரனுக்கும் முழுமையான தொடர்பு உண்டு.

எனவேதான் சந்திராஷ்டம நாட்களில் மனம் சஞ்சலப்படுவதை நாம் கண்கூடாகக் காணலாம். இப்படி நம் மனதோடு முழுமையான தொடர்பினைக் கொண்ட சந்திரன் ஒவ்வொரு பௌர்ணமி நாளன்றும் முழுமையாக வளர்ந்து நின்றாலும், 100 சதவீத பலத்துடன் இருப்பது கார்த்திகை மாதப் பௌர்ணமியில் மட்டுமே. அதாவது, ரிஷப ராசியில் உச்ச பலத்துடன் முழு நிலவாக பௌர்ணமி சந்திரன் சஞ்சரிப்பது கார்த்திகை மாதத்தில் மட்டுமே வரக்கூடிய நிகழ்வாகும். மனோகாரகன் சந்திரன் முழுமையாக பலம் பெற்று ஒளி வீசும் அந்தநாள் நம் மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.

குறிப்பாக நம் உள்ளத்தில் இருட்டினைப் போக்கி ஒளியினைப் பாய்ச்சுகிறது. இதன் அறிகுறியாக நம் இல்லங்களில் வரிசையாக விளக்கேற்றி நாம் கொண்டாடுகிறோம். ஜோதிடத்தில் சந்திரனை தாயாகவும், சூரியனைத் தந்தையாகவும் உருவகப்படுத்துவார்கள். சந்திரனாகிய தாய், சூரியனின் நட்சத்திரமாகிய கிருத்திகையில், உச்ச பலத்தோடு முழுநிலவு ஆக ஒளி வீசும் காலம் இந்த கார்த்திகை மாதம். அதாவது, அம்மை-அப்பனின் இணைவாக, அர்த்தநாரீஸ்வர வடிவாக சிவபெருமான் அருள்புரியும் காலம் இது என்பதால் உலகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் கார்த்திகை மாதம் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

பல்வேறு காரணங்களால் கணவரை விட்டுப் பிரிந்து வாழும் பெண்கள் கார்த்திகை மாதத்தில் அருகில் உள்ள சிவாலயத்தில் விளக்கேற்றி வழிபட்டுவர விரைவில் கருத்து வேறுபாடு நீங்கும் என்றும், பணி நிமித்தம் பிரிந்திருப்போர் இடமாற்றம் பெற்றும் இணைந்து வாழ்வர் என்றும் பரிகாரம் சொல்வார்கள் விவரம் அறிந்த ஜோதிடர்கள். நம் உடலில் உள்ள நாடி, நரம்புகள் எல்லாம் கார்த்திகை மாதத்தில்தான் சீராக இயங்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த மாதத்தில் தியானத்தில் ஈடுபடுவோர்க்கு நிச்சயம் ஞானம் சித்தியாகும் என்பது அனுபவித்தவர்கள் கண்ட உண்மை.

கார்த்திகை மாதம் மாலை அணிந்து, நேர்த்தியாக விரதம் இருந்து ஞானகுருவாக ஐயப்பனை நினைத்து உருகி தங்களது சரண கோஷத்தினால் பக்தர்கள் பரவச நிலையினை அடைகின்றனர். அந்த ஐயப்பனும் பக்தர்களுக்கு ஜோதி ஸ்வரூபனாகவே காட்சியளிக்கிறான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இத்தனை பெருமை வாய்ந்த இந்த கார்த்திகை மாதத்தில் நம் இல்லங்களில் மட்டுமின்றி அருகிலுள்ள ஆலயத்திலும் விளக்கேற்றி வழிபடுவோம். கவலைகள் மறப்போம். ஓம் சிவ  ஓம்.

No comments: