youtube

19 November 2012

சிவ தீட்சை

சிவ தீட்சை

அகத்தியர் அருளிய முப்பத்தி இரண்டு சிவ தீட்சைகளில் முதல் எட்டு திட்சைகளைப் பற்றி இன்றைய பதிவில் காண்போம்.தீட்சைகளில் முதன்மையானது இந்த சிவ தீட்சைகள்தான்.இந்த தீட்சைகளை முறையாக குருவின் மூலமாய் பெற்று செபிக்க தீட்சைகள் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.
"தீட்சையிலே முதற்தீட்சை சிவதீட்சைதான்
ஸ்ரீம் அம் ஓம் யென் றுலட்சம் ஜெபித்துவோதக்
காட்சிபெறத் தேகமெல்லாம் வியர்வை காணும்
கண்மாய்கை இல்லையடா கண்டுதேறு
ஆச்சுதடா சிவதீட்சை ரெண்டுங்கேளு
ஆம் ஓம் ஹரீம் ரீம் யென்று நீயும்
மூச்சடா உள்ளடங்கும் லட்சமோத
முத்தியுண்டாஞ் சத்தியுண்டாஞ் சித்தியாமே."
- அகத்தியர் -
"ஸ்ரீம் அம் ஓம்" என்று லட்சம் முறை செபிக்க முதல் தீட்சை சித்தியாகும். அப்போது இறைவனின் திருக்காட்சியைக் காணலாம் என்கிறார். காட்சியைக் காணும் போது தேகமெல்லாம் வேர்த்துப் போகும். ஆனால் இந்தக் காட்சி கண் மாயை அல்ல, இதைக் கண்டு தேறுவதே முதல் தீட்சையாகும் என்கிறார் அகத்தியர்.
"ஆம் ஓம் ஹரீம் ரீம்" என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க இரண்டாவது தீட்சை சித்தியாகும். அப்போது மூச்சு உள்ளடங்குவதுடன் , முக்தியும், சக்தியும் சித்தியாகும் என்கிறார் அகத்தியர்.
"சித்தியாஞ் சிவதீட்சை மூன்றுகேளு
செப்புவேன் குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம் யென்று லட்சம்
பத்தியாய்ச் செய்துவர மோட்சமாகும்
பாணுவைப்போற் தேகமெல்லாம் ஒளியுமாகும்
துத்தியஞ்செய் சிவதீட்சை நாலுகேளு
துடியுடனே ஸ்ரீங் அங் உங் கென்று
முத்திபெற லட்சமுருச் செபித்தாற்சித்தி
மோட்சமய்யா தேவதைகள் பணியுந்தானே."
- அகத்தியர் -
"குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம்" என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க மூன்றாவது தீட்சை சித்தியாகும். அப்போது சந்திரனை போல தேகம் ஒளிவீசும் என்கிறார்.
"ஸ்ரீங் அங் உங்" என்று லட்சம் முறை செபிக்க நான்காவது தீட்சை சித்தியாகும். அப்போது மோட்சமும், தேவதைகள் உனக்கு பணியும் தன்மையும் ஏற்படும் என்கிறார் அகத்தியர்.
"பணிந்துதான் சிவதீட்சை அஞ்சுங்கேளு
பண்பாக யங் வங் றீங் றுந்தான்
துணிந்தோது லட்சமுருச் செபித்தாற்சித்தி
தொண்டுசெய்வார் தேவதைகள் சட்டைக்கும்
அணிந்துகொள்வாய் சிவதீட்சை ஆறுங்கேளு
அன்புடனே சங் ரங் உம் ஆம் என்றுலட்சம்
குனிந்துநிமிர் தேகமதில் வாசம் வீசும்
குணமாகுந் தெகசித்தி சுருக்குத்தானே."
- அகத்தியர் -
"யங் வங் றீங்" என்று லட்சம் முறைசெபிக்க ஐந்தாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேவதைகள் ஒரு சட்டையைத் தரும். அதை அணிந்துகொள் என்கிறார்.
"சங் ரங் உம் ஆம்" என்று லட்சம் முறை செபிக்க ஆறாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேகத்தில் வாசம் வீசும். அத்துடன் தேகசுத்தியும் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.
"தானேசெய் சிவதழுட்சை ஏழுநீயும்
சந்தோஸ மாய்ஓது இங் ரங் அவ்வு மென்றுலட்சம்
மானேந்தும் ஈசுவரனும் அருகில் நிற்பார்
வானவர்கள் மகிழ்வாக வாவென்பார்கள்
நானென்ற தீட்சையெட்டும் உற்றுக்கேளு
நன்றாக மங் றீங் ரா ரா வென் றுலட்சம்
ஆனந்த முண்டாகுந் தேவர்வந்து
அன்பாக உனைச்சேர்ந்து அணைவார்பாரே."
- அகத்தியர் -
"இங் ரங் அவ்வு" லட்சம் முறை செபிக்க, மானை கையில் ஏந்தி இருக்கும் சிவன் அருகில் இருப்பார். வானவர்கள் மகிழ்ச்சியுடன் வா வா என்று அழைப்பார்கள் என்கிறார் அகத்தியர்.
"மங் றீங் ரா ரா" என்று லட்சம் முறை செபிக்க ஆனந்தம் உண்டாகும்.அத்துடன் தேவர்கள் வந்து உன்னுடன் இணைவார்கள் என்கிறார் அகத்தியர்.

No comments: