youtube

16 March 2016

சிறுதெய்வ வகைப்பாடு

 சிறுதெய்வ வகைப்பாடு
மேலே வகைப்படுத்தப்பட்ட நாட்டுப்புறச் சிறுதெய்வங்களை இங்கு விளக்கமாகக் காணலாம்.
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக
2.4.1 பெண் தெய்வங்கள்
நாட்டுப்புறத் தெய்வங்களில் பெண்தெய்வங்களே மிகுதி என்பதால் பெண்தெய்வங்கள் முதன்மை நிலையில் வைத்து விளக்கப்படுகின்றன.
இனக்குழுச் சமுதாயத்தின் தொடக்கக் காலந்தொட்டுச் செழுமையின் அடையாளமாகவும் வலிமையின் குறியீடாகவும் பெண் கருதப்பட்டதால் பெண் வணங்குதற்கும் வழிபாட்டிற்கும் உரியவளானாள். பண்டைத் தமிழ் இலக்கியங்களில் பெண் தெய்வப் பெயர்களும் பெண் தெய்வ வழிபாடுகள் பற்றிய குறிப்புகளும் நிறைந்து காணப்படுகின்றன.
பெண் தெய்வங்கள்
தாய்த் தெய்வங்கள்கன்னித் தெய்வங்கள்
மனித உயிர்கள் அனைத்தையும் பெற்றெடுத்தவள் என்ற அடிப்படையில் தாயாகவும், என்றும் மாறாத, அழியாத கன்னித் தன்மையுடையவள் என்ற அடிப்படையில் கன்னியாகவும் பெண் தெய்வங்களை வழிபடும் மரபு காணப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் கூட இம்மரபு இருந்து வருவது குறிப்பிடத் தக்கதாகும்.
2.4.2 தாய்த் தெய்வ வழிபாடு
‘அம்மன்’ என்ற பொதுப் பெயரால் அழைக்கப்படும் பெண் தெய்வங்கள், பெண்மை மற்றும் தாய்மைக் குணங்களை ஒருசேரப் பெற்றவையாக விளங்குகின்றன. தொடக்கக் காலத்தில் வளமை தொடர்பான சடங்குகள் பெண்களைக் கொண்டே மேற்கொள்ளப்பட்டதால் பின்னாளில் பெண்களே வளமையின் குறியீடாகக் கருதி வழிபடப் பட்டனர். இதுவே, தாய்த் தெய்வ வழிபாடு தோன்றி வளர்வதற்குக் காரணமாய் அமைந்தது.
‘மழையாகப் பொழிந்து மண்ணுயிர்களைக் காப்பவள் மாரியம்மா; நதியாக ஓடி நஞ்சை புஞ்சைகளைக் காப்பவள் கங்கையம்மா; தீமைகள் அண்டாதவாறு காப்பவள் எல்லையம்மா’ என்று, பெண் தெய்வங்கள் வளமையை மையமிட்டே வணங்கப் பட்டன; வழிபடப் பட்டும் வருகின்றன. காவிரி, கங்கை, யமுனை, சரசுவதி போன்ற பெரு நதிகளைப் பெண் தெய்வங்களாகவும் தாய்த் தெய்வங்களாகவும் வழிபடுவது இந்திய மரபாகும்.
நாட்டுப்புறச் சிறுதெய்வங்களாக மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், சீலைக்காரியம்மன், திரௌபதையம்மன், நாச்சியம்மன், பேச்சியம்மன், கண்டியம்மன், வீருசின்னம்மாள், உச்சிமாகாளி, மந்தையம்மன், சோலையம்மன், ராக்காச்சி, எல்லையம்மன், அங்காளம்மன், பேச்சி, இசக்கி, பேராச்சி, ஜக்கம்மா போன்ற பெண் தெய்வங்கள் வணங்கப்பட்டு வருகின்றன. நன்மை அளிக்கும் தெய்வங்கள், தீமை அளிக்கும் தெய்வங்கள் என்று கூட இவற்றை வகைப்படுத்துவதுண்டு. சக்தியின் அவதாரமாக, வடிவமாகப் பெண் தெய்வங்கள் கருதப்பட்டு வணங்கப் படுகின்றன. பெண் தெய்வங்களில் பரவலாக வழிபடப் பட்டுவரும் மாரியம்மனின் இயல்புகளைப் பற்றிப் பார்ப்போம்.
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக
 மாரியம்மன்
தமிழகமெங்கும் பரவலாக மாரியம்மன் வழிபாடு காணப்படுகிறது. என்றாலும் தென் மாவட்டங்களில் இவ்வழிபாடு மிகுதி. கோட்டை மாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன், வீரபாண்டி மாரியம்மன் என்ற பெயர்களில் மாரியம்மன் வழிபாடு நிகழ்த்தப்படுகிறது.
மாரி - மழை. மாரியம்மன் வெம்மையைப் போக்கிக் குளிர்ச்சியைத் தருபவள், மழையாகப் பொழிந்து மண்ணில் உயிர்களைக் காப்பவள் என்ற நம்பிக்கையில் மழைத் தெய்வமாக வழிபடப்படுகிறாள். மாரியம்மன் வழிபாட்டுச் சடங்கின் போது சக்திக் கரகம் நீரால் நிரப்பப் படுவதும், அது அம்மனாக வழிபடப் படுவதும், வழிபாடு நிறைவடையும் நிலையில் கரகத்திலுள்ள நீர் நீர்நிலைகளில் விடப் படுவதுமாகிய செயல்கள் மாரியம்மன் மழைத் தெய்வமாக வணங்கப் படுவதற்குச் சான்றாக அமைகின்றன.
தீச்சட்டி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், ஆயிரங்கண் பானை எடுத்தல், சேத்தாண்டி வேடமிடுதல், முளைப்பாரி எடுத்தல் போன்றவை மாரியம்மனுக்காக மேற்கொள்ளப்படும் சடங்குகளாகவும் நேர்த்திக் கடன்களாகவும் விளங்குகின்றன.
 காளியம்மன்
தமிழகத்தில் மாரியம்மனுக்கு அடுத்த நிலையில் காளியம்மன் பரவலாக வழிபடப்படுகிறது. காளி என்று வேதங்களில் குறிப்பிடப்படும் இத்தெய்வம் கோப ஆவேசம் கொண்ட தெய்வமாகக் கருதி வணங்கப்படுகிறது. சங்க இலக்கியங்களில் பாலை நிலத்திற்குரிய தெய்வமாகச் சுட்டப்படும் கொற்றவையே காளி என்றும் குறிப்பிடுவதுண்டு. தமிழகக் கிராமங்களில் காளியம்மன் கோயில் தவறாது இருக்கும். பலியிடலும் அங்கமளித்தலும் (உடல் உறுப்புகளாக வடிவமைக்கப் பட்டுள்ள தகடுகளைக் காணிக்கையாகச் செலுத்துதல்) காளி வேடமிட்டு ஆடுதலும் காளியம்மன் வழிபாட்டில் குறிப்பிடத் தக்கவையாகும்.
2.4.3 கன்னித் தெய்வ வழிபாடு
கன்னித் தெய்வ வழிபாடு பெரும்பான்மையும் சிறுதெய்வ வழிபாடே ஆகும். கன்னி என்ற சொல்லிற்குப் ‘பூப்படைந்து திருமணமாகாத, கன்னித் தன்மை இழக்காத பெண்’ என்று அகராதி பொருள் கூறுகிறது. இயல்பாகவோ அல்லது கொலை செய்யப்பட்டோ இறக்கும் பெண்களைக் கன்னித் தெய்வமாக வழிபடும் மரபு தமிழகத்தில் பரவலாகக் காணப்படுகிறது. இறந்த கன்னிப் பெண், தன் வீட்டாருக்கு வளமையும் பாதுகாப்பும் அளிப்பதாகவும், அவள் கன்னிப் பெண்கள் மீது இறங்கி அருள்வாக்குச் சொல்வதாகவும் நம்பப்படுகிறது.
பொதுவாக ஒரு வீட்டின் திசைகளைக் கன்னி மூலை (தென்மேற்குப் பகுதி), அக்னி மூலை (தென்கிழக்குப் பகுதி), வாயு மூலை (வடமேற்குப் பகுதி), ஈசானி மூலை (வடகிழக்குப் பகுதி) என்று பிரித்துக் கூறுவதுண்டு. இதுவே இன்று வாஸ்து சாஸ்திரமாகக் கூறப்படுகிறது. வீட்டின் கன்னி மூலைப் பகுதியைத் தெய்வத்திற்கு உரிய இடமாகக் கருதி வழிபடுவது தொன்று தொட்டு இருந்துவரும் மரபாகும். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டுப் பாருங்கள், மேலும் சில விளக்கங்கள் கிடைக்கும். வீட்டுத் தெய்வமாக, குலதெய்வமாக, கன்னித் தெய்வங்களே வழிபடப்படுவது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.
 ஏழு கன்னிமார்
கன்னித் தெய்வங்கள் ஏழு என்று குறிப்பிடும் வழக்கம் காணப்படுகிறது. ஏழு கன்னிமார், சப்த கன்னியர், ஏழு கன்னித் தெய்வங்கள் என்று இதனைக் கூறுவதுண்டு. ஏழு கன்னித் தேவதைகள் வானத்திலிருந்து இறங்கி வந்து, நீராடிக் களிப்பது, துன்பப் படுவோர்க்கு உதவுவது போன்ற கதைகள் பரவலாக உள்ளன. வனப் பகுதிகளிலும் மலையை ஒட்டிய பகுதிகளிலும் திறந்த வெளியில் கன்னித் தெய்வக் கோயில்கள் இருக்கின்றன. இவற்றை வன தேவதைகளாகக் கொண்டு வனத்தில் வழிபடும் வழக்கமும் காணப்படுகிறது. ஒரே கல்லில் ஏழு பெண் உருவங்கள் வடிவமைக்கப் பட்டு வழிபடப் படுகிறது. இத்தெய்வங்களுக்கு என்று தனித்த வழிபாட்டு முறைகள் இல்லை. பிற தெய்வங்களுடன் இணைத்தே வழிபடப் படுகின்றன.
2.4.4 ஆண் தெய்வ வழிபாடு
நாட்டுப்புறச் சிறு தெய்வங்களில் பெண் தெய்வங்களை நோக்க ஆண் தெய்வங்கள் குறைவு என்றுதான் கூற வேண்டும். பெண் தெய்வங்கள் பல்வேறு சக்திகளைத் தங்கள் வசம் வைத்திருப்பதாகவும் ஆண் தெய்வங்கள் குறைந்த சக்தி உடையவையாகவும் நம்பப்படுவதே இதற்குக் காரணம் எனலாம். ‘சக்தி இருந்தா வேலையைச் செய், இல்லையென்றால் சிவனேன்னு கிட’ என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். இது பெண் தெய்வங்களைச் சிறப்பிக்கவே உருவாக்கப் பட்டதாகும்.
ஆண் தெய்வங்களில் சில முதன்மைத் தெய்வங்களாகவும் பல முதன்மைத் தெய்வங்களுக்குத் துணைமைத் தெய்வங்களாகவும் விளங்குகின்றன. துணைமைத் தெய்வங்களைப் ‘பரிவாரத் தெய்வங்கள்’ என்றும் கூறுவதுண்டு.
ஆண்தெய்வங்கள்
முதன்மைத் தெய்வங்கள்
துணைமைத் தெய்வங்கள்
அய்யனார்
முத்தையா சாமி
சுடலை மாடன்
அக்னி வீரன்
அண்ணன்மார் சாமி
இலாட சன்னாசி
மதுரைவீரன்
இருளப்ப சாமி
கருப்பசாமி
சடையாண்டி
முனீஸ்வரன்
ஒண்டி வீரன்
குருநாத சாமி
மாயாண்டி
மாட சாமி
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக
 முதன்மைத் தெய்வங்கள்
தனித்த கோயில்களையும் வழிபாட்டு முறைகளையும் தன்னகத்தே கொண்ட தெய்வங்களே இங்கு முதன்மைத் தெய்வங்கள் என்ற நிலையில் விளக்கப்படுகின்றன. இவை ஊர்த் தெய்வங்களாகவோ, காவல் தெய்வங்களாகவோ வழிபடப்படும்.
தமிழகத்தில் பரவலாக அய்யனார் வழிபாடும், தென் தமிழகப் பகுதியில்சுடலை மாடன் வழிபாடும், கொங்கு மண்டலப் பகுதியில் அண்ணன்மார் சாமிவழிபாடும் சிறப்பாகக் காணப்படுகின்றன. அந்தந்தப் பகுதி மக்களின் வழிபாட்டு முறைகளுக்கு ஏற்ப ஆண்டு தோறும் விழா எடுக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தெய்வத்திற்கும் என்று தனித்த வழிபாட்டு முறைகள் உள்ளன. மேற்கூறிய தெய்வங்களுக்கு அடுத்த நிலையில் மதுரை வீரன், கருப்ப சாமி, முனீஸ்வரன் போன்ற தெய்வங்கள் வழிபடப்படுகின்றன. சில கிராமங்களில் இத்தெய்வங்களுக்குச் சிறப்பான முறையில் வழிபாடு நிகழ்த்தப் படுவதுண்டு. முதன்மைத் தெய்வங்களோடு இணைத்தும் இவை வழிபடப்படுவதுண்டு.
 அய்யனார்
அய்யனார் தெய்வம் கிராமத்தைக் காக்கும் ஊர்ப் பொதுத் தெய்வமாக, காவல் தெய்வமாகப் பல்வேறு ஊர்களில் வழிபடப் படுகிறது. கூடமுடைய அய்யனார், செங்குளத்து அய்யனார், கொக்குளத்து அய்யனார் என்ற பெயர்களில் வணங்கப் படுகிறது.
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக
அய்யனார் கோயில்கள் திறந்த வெளியில் பெரும்பாலும் கண்மாய்க் கரைகளில் நீர்நிலையை ஒட்டியுள்ள பகுதிகளில் வயல் வெளிகளில் ஆலமர நிழலில் கிழக்குப் பார்த்த வாசலுடன் அமைந்திருக்கும். வெள்ளைக் குதிரை, வேட்டை நாய், வீரர்கள் புடைசூழ அய்யனார் வீற்றிருப்பார். பிரமாண்டமான அளவில் அய்யனார் சிலை இருப்பதும் அதனைச் சுற்றித் துப்பாக்கி ஏந்திய போலீஸ், சிப்பாய்கள் நிற்பதும், நாய், பூதங்கள் போன்ற பல உருவங்கள் இருப்பதும் பார்ப்போரை மிரளச் செய்யும்.
அய்யனார் பெரிய கும்பிடின் போது பக்தர்கள் மண்குதிரைகளைக் காணிக்கையாகச் செலுத்தும் வழக்கம் காணப்படுகிறது. இது குதிரையெடுப்பு, புரவியெடுப்பு, புரவிக்காணிக்கை என்று குறிப்பிடப் படுகிறது. காணிக்கைக் குதிரைகள் ஒரே இடத்தில் எடுக்கப்பட்ட மண்ணால் உருவாக்கப்பட்டு இருத்தல் வேண்டும், கும்பிடு முடிந்ததும் அக்குதிரைகள் உடைக்கப்பட வேண்டும் என்பது மரபாக உள்ளது. ஆண்டு தோறும் பல நூறு குதிரைகள் காணிக்கையாகச் செலுத்தப் படுகின்றன. முடிவில் உடைக்கப் படுகின்றன. பலி கொடுத்தல் என்ற சடங்கிற்காக மண் குதிரைகளை உடைக்கும் வழக்கம் காணப்படுவதாகக் கூறலாம். அய்யனாருக்குச் செய்யப்படும் அத்தனைச் சிறப்புகளும் அவரது வாகனமான குதிரைக்கும் செய்யப்படுகிறது. பல இடங்களில் குதிரையையே அய்யனாராக வழிபடும் நிலையும் காணப்படுகிறது.
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக
தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் கிராமத்தார்க்கும் தீங்கு வரும்போது அய்யனார் இக்குதிரைகளில் ஏறி, விரைந்துவந்து காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை காணப்படுகிறது.
 சுடலை மாடன்
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சுடலை மாடன் வழிபாடு சிறப்புப் பெற்று விளங்குகிறது. சுடலை என்பது சுடுகாட்டையும் மாடன் என்பது மாட்டுத் தலையை உடையவன் அல்லது காளையை வாகனமாக உடையவன் என்றும் பொருள்படும். காவல் தெய்வமாக வழிபடப்படும் சுடலை மாடன் கோயில்கள் சுடுகாட்டிற்கு அருகிலேயே அமைந்திருக்கும். சுடலை மாடனுக்கான கொடைவிழா மூன்று நாட்கள் வெகு சிறப்பாக நடத்தப்படும். சுடலை மாடன் வழிபாடு இரவிலேயே நிகழும். ஆடு, சேவல், பன்றி ஆகியவை பலி கொடுக்கப்படும். பூசாரி குருதி கலந்த உணவைச் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று குருதிச் சோற்றை (ஆவிகளுக்கு) வானை நோக்கிச் சூறையிடும் சடங்கு தவறாது இடம்பெறும்.
சுடலை மாடனுக்கென்று தனித்த உருவ அமைப்புக் கிடையாது. மண்பீடங்கள் மட்டுமே இருக்கும். கொடைவிழாவின் போது மட்டும் பீடத்தின் மீது உருவம் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படும். வழிபாடு முடிந்தவுடன் உருவம் அகற்றப் பட்டுவிடும். வில்லுப் பாட்டும் கணியான் கூத்தும் சுடலை மாடனோடு நெருங்கிய தொடர்புடைய வழிபாட்டுக் கலைகளாகும்.
 அண்ணன்மார் சாமி
தமிழகத்தில் உள்ள கொங்கு மண்டலப் பகுதியில் அண்ணன்மார் சாமிவழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. இப்பகுதியில் உள்ள ஊர்களில் தவறாமல் அண்ணன்மார் சாமி கோயில் இருக்கும். பொன்னர், சங்கர் என்ற இரு சகோதரர்களே அண்ணன்மார் என்ற பெயரில் தெய்வமாக வழிபடப்படுகின்றன. கொங்கு வெள்ளாளக் கவுண்டர்களின் குலதெய்வமாக அண்ணன்மார் சாமி விளங்குகிறது. பெரிய குதிரைகளின் மேல் அமர்ந்தவாறு பொன்னர், சங்கர் சிலைகள் அமைந்திருக்கும். அண்ணன்மார் சாமி கதைப் பாடல் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். வழிபாட்டின் போது இக்கதை உடுக்கைப் பாட்டாகப் பாடப்படும். அண்ணன்மார் சாமி வழிபாட்டைப் பெரிய நோம்பி (பெரிய கும்பிடு) என்று கொங்கு நாட்டார் குறிப்பிடுவதுண்டு.
 துணைமைத் தெய்வங்கள்
தலைமைத் தெய்வங்களுக்குத் துணையாகவோ, தனித்த நிலையில் சிறிய அளவிலோ, வழிபாட்டிற்கு உட்படுத்தப்படும் தெய்வங்களே இங்குத் துணைமைத் தெய்வங்களாகக் கொள்ளப்படுகின்றன. இவை பரிவாரத் தெய்வங்கள் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. இந்தப் பரிவாரத் தெய்வங்களுக்கு என்று தனிப்பட்ட வழிபாடு கிடையாது. ஆனால், கோயிலுக்குள் நுழைவோர் முதன்மைத் தெய்வங்களை மட்டுமல்லாது பரிவாரத் தெய்வங்களையும் வணங்கிவிட்டே வெளியே வரும் வழக்கம் கொண்டுள்ளனர். இவை பெரும்பாலும் குல தெய்வங்களாகவோ இனத் தெய்வங்களாகவோ அமையும். பெருந்தெய்வ வழிபாட்டிலும் இப்பரிவாரத் தெய்வங்களைக் காண முடியும். இவை ஆண் தெய்வங்களாகவோ பெண் தெய்வங்களாகவோ அமையும். முதன்மைத் தெய்வங்கள் ஊர்க்காவலுக்கும் வேட்டைக்கும் செல்லும் போது பரிவாரத் தெய்வங்கள் உடன் செல்வதாகக் கூறப்படுகின்றது.
மக்கள் தங்கள் குல தெய்வங்களைப் பாதுகாக்கும் பொருட்டு முதன்மைக் கோயிலில் கொண்டுபோய்க் குல தெய்வங்களைப் பிரதி்ஷ்டை செய்து வழிபடும் வழக்கமும் காணப்படுகிறது. பெரிய கும்பிடின்போது தங்கள் குல தெய்வத்திற்குப் பலியும் படையலும் செய்து வழிபடுவதுண்டு. இத்தகைய தெய்வங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது.

No comments: