youtube

11 February 2016

ஷடானனம் ப்ரஹ்மண்ய தேவம்

ஷடானனம் ப்ரஹ்மண்ய தேவம்...


ஷடானனம் சந்தன லிபித காத்ரம்
மஹோரசம் திவ்ய மயூர வாஹனம்
ருத்ரஸ்ய ஸூனும் சுரலோக நாதம்
ப்ரம்ஹண்ய தேவம் சரணம் ப்ரபத்யே


shadAnanam chandana libitha ghAthram
mahOrasam dhivya mayuura vAhanam
rudhrasya suunum suralOka nAtham
brahmanya dEvam saranam prabhathyE
அண்ணனை வணங்கியபிறகு தம்பியை வணங்குவது தானே முறை. அதற்குப் பின்னர் யாரை வேண்டுமானாலும் வணங்கிக் கொள்ளலாம். அதனால் தான் ஆனைமுகனை வணங்கிவிட்டு இப்போது ஆறுமுகனை வணங்குகிறோம்.

ஷடானனம் - ஷட் + ஆனனம் - ஆறு முகங்கள் கொண்டவரும்

சந்தன லிபித காத்ரம் - சந்தனம் பூசிய திருமேனியைக் கொண்டவரும்

மஹோரசம் - பெரும் இரசிகரும் (கலைகளை எல்லாம் இரசிப்பவரும் வளர்ப்பவரும் அருள்பவரும்)

திவ்ய மயூர வாஹனம் - தெய்வீக மயில் வாகனம் கொண்டவரும்

ருத்ரஸ்ய ஸூனும் - ருத்ரனாகிய சிவபெருமானின் திருமகனும்

சுரலோக நாதம் - தேவலோகத்தின் தலைவனும் (தேவசேனாபதியும்)

ப்ரம்ஹண்ய தேவம் - பரம்பொருள் ஆனவரும் ஆன சுப்ரமண்ய தேவரின்

சரணம் ப்ரபத்யே - திருவடிகளைத் தஞ்சமடைகிறேன்

எடுத்தவுடனேயே திருமுருகனின் தனிச்சிறப்பான ஆறுமுகங்களைக் கூறுகிறது இந்த சுலோகம். ஆனைமுகனை கஜானனம் என்றும் ஐந்துமுகனான சிவபெருமானை பஞ்சானனம் என்றும் நான்முகனைச் சதுரானனம் என்றும் சொல்லிக் கேட்டிருப்போம். அவற்றை நினைவில் கொண்டால் ஷட் + ஆனனம் என்ற இந்தச் சொல்லையும் எளிதாக நினைவில் கொள்ளலாம்.

இன்றைக்கும் ஆறுமுகனடியார்கள் காவடி எடுக்கும் போதும் முடிகாணிக்கை செலுத்திய பின்னரும் தங்கள் மேனிகளில் சந்தனம் பூசிக் கொள்கிறார்கள். சேந்தனின் திருமேனியிலும் அதே சந்தனம் இருக்கின்றது போலும். அதனால் அதனை அடுத்தாகச் சொல்கிறது சுலோகம். ஷடானனம் சந்தன லிபித காத்ரம். நோயற்ற உடலைக் கொண்டவர்களை திடகாத்திரமாக இருக்கிறார்கள் என்று சொல்வார்களே - அதனை நினைவில் கொண்டால் இங்கே சொல்லப்பட்டிருக்கும் காத்ரம் என்ற சொல்லின் பொருள் மனத்தில் நிற்கும். லிபி என்றால் எழுத்து என்று பலருக்கும் தெரிந்திருக்கும். சந்தனம் எழுதிய திருமேனி என்பதற்கு இங்கே லிபித காத்ரம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

கலைகளை அருள்பவனும் அவற்றைக் காப்பவனும் ஆன திருமுருகன் மஹா ரசிகனாகவும் இருக்கத் தானே வேண்டும். அதனால் அவனை மஹோரசம் என்று போற்றுகிறது இந்த சுலோகம்.

கலைகளைச் சொன்னவுடனே நாதத்தையும் விந்துவையும் சொல்ல வேண்டுமே? நாத தத்துவமான மயிலை வாகனமாகக் கொண்டவன் என்று உடனே போற்றுகிறது இந்த சுலோகம்.

ருத்திரனின் நெற்றிக்கண்களிலிருந்து தோன்றிய திருமுருகனை திருக்குமரன் என்று அழைக்கும் விதமான ருத்ரஸ்ய ஸூனும் என்கிறது அடுத்த வரி.

தேவர்களின் படைகளுக்குத் தளபதியான தேவசேனாபதியே தேவலோகத்தைக் காத்து அருள்பவன் என்பதால் தேவலோகத்தின் தலைவன் என்கிறது அடுத்த பதம். தேவசேனாபதி என்பது இரண்டு விதமாகப் பிரிந்து அழகான பொருளைத் தருவதைக் காணலாம். தேவசேனாவின் பதி என்று ஒரு பொருளும் தேவர்களின் சேனாபதி என்று ஒரு பொருளும் அமைவது அழகு.

இப்படியெல்லாம் போற்றப்படும் சுப்ரமண்ய தேவரை அடியேன் தஞ்சமாக அடைகிறேன் என்று இறுதியில் சரணாகதி செய்யப்படுகிறது. தஞ்சம் அவனன்றிப் பிறிதில்லை.

No comments: