youtube

10 February 2016

கருடபுராணம் - சில தகவல்கள் !!!!

இப்பூமியில் பிறந்த ஓவ்வோரு மனிதனும் இறந்த பின் இறுதியில் எங்கே செல்கிறான் என்ன ஆகிறான் என்பதை விளக்கமாக உரைக்கும் பதிவு இது..

சாவு வருவதற்கு முன்னும் வந்த பின்பும் உயிர்களை அச்சுறுத்தியோ அன்பு
காட்டியோ அழைத்து செல்லும் அந்த 3 நபர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? உயிர்களை எங்கே அழைத்துச்செல்கிறார்கள்? அவர்களின்
பூர்வீகம் என்ன? என்பதைப்பற்றி ஆராய்ச்சி செய்வோம்.
இத்தகைய ஆராய்ச்சிகளுக்குப் பெரும் துணையாக இருப்பது புராணங்கள் ஆகும். புராணங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டால் உண்மைகளை முழுமையாகக் கண்டறிய முடியுமா?
அது நம்பத்தகுந்த வகையிலும் அமையுமா? என்றெல்லாம் சந்தேகம் எழுவது இயற்கையானதுதான். காரணம் மிகைப்படுத்திக் கூறல் என்பது புராணங்களில் மிகுதியாகவே உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும்
புராணங்கள் முழுமையான கட்டுக்கதைகள் என்று ஒதுக்கித்தள்ளிவிடவும் முடியாது.
காரணம் புராணங்களில் கூறப்பட்டு இருக்கும் பல சம்பவங்களுக்கான அசைக்க
முடியாத ஆதாரங்கள் பல நவீன விஞ்ஞானத்தால் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே புராண விஷயங்களை பக்க சார்பற்று அலசி ஆராய்ந்து எடுத்த பல விஷயங்களை உண்மையென நம்பி அடுத்த விஷயங்களைப்பற்றிப் பார்ப்போம்.

இறந்தவர்களின் ஆத்மாவை அழைத்துச் செல்ல மூன்று நபர்கள் வருவதாக
இறந்தவர்களுக்கும் இறப்பில் இருந்து உயிர்ப்பித்து எழுந்தவர்களும் கூறுகிறார்கள்.
யார் அந்த முன்று நபர்கள்?
கிருஸ்துவம் அந்த 3 பேரையும் தேவதூதர்கள் என்கிறது.
இந்து மதமோ அவர்களை மரண தேவனான எமதர்மனின் தூதர்களான
கிங்கரர்கள் என்கிறது.
யார் இந்தக் கிங்கரர்கள்? இவர்கள் எப்படி இருப்பார்கள்? இவர்களின் வேலை என்ன? கருட புராணம் இவர்கள் அஞ்சத்தக்க உருவத்தை உடையவர்கள் என்றும் நெருப்பையே சுட்டுவிடும் அளவிற்கு சினமுடையவர்கள் என்றும் பாசம் முசலம் போன்ற ஆயுதங்களைத் தரித்தவர்கள் என்றும் கார்மேகம் போன்ற இருண்ட நிற ஆடைகளை அணிந்தவர்கள் என்றும் வர்ணிக்கிறது.
அவர்கள் வாழ்நாள் முடிந்துபோன உயிர்களை மரண தேவனிடம் கொண்டு சேர்க்கவே படைக்கப்பட்டவர்கள் என்றும் ஆசா பாசங்களுக்கு இடம் கொடுக்காமல் கடமையைச்செய்வதே அவர்களின் பணி என்றும் மாறுபடுத்திக் கூறினாலும் பைபிளும் குரானும் இதே மாதிரியான விளக்கங்களையே இவர்களைப் பற்றித் தருகிறது.
மேலும் இவர்களுக்குப் பூமியில் உயிர்களை அறுவடை செய்து யமதர்மனின் கிட்டங்கியில் சேர்ப்பதோடு வேலை முடிந்து விடுகிறது. உயிர்கள் புரிந்த
நன்மை தீமைகளை விசாரிப்பதும் அதற்கான சன்மானம் அல்லது தண்டனையை வழங்குவது எமதர்மனின் வேலை என்றும் தண்டனைகளை நிறைவேற்றுவது வேறு மாதிரியான கிங்கரர்கள் யக்ஷர்களின் வேலை என்றும் பழமையான நூல்கள் பலவற்றில் காண முடிகிறது.
உடலில் இருந்து உயிர் பிரிக்கப்பட்ட பின்பு அந்தந்த உயிர்களுக்கு என்ன
நிகழ்கிறது என்பதைக்கருடபுராணம் கவிதா லாவண்யத்தோடு விவரிப்பதைப் பார்ப்போம்.
செடியிலிருந்து மலரைக்கொய்தபின் இறைவனின் பாதத்தில் சமர்பிப்பது போல் உயிர்கள் கிங்கரர்களால் யமன் முன்னால் சமர்ப்பணம் ய்யப்படுகிறது. தன் முன்னால் ஜீவன் கொண்டு வரப்பட்டவுடன் மீண்டும் அந்த ஜீவனை பறித்த
இடத்திலேயே விட்டு வரும் படியும் மீண்டும் 12 நாட்கள் சென்றபின் தன் முன்னால் கொண்டு வரும்படியும் கட்டளை பிறப்பிப்பான்.
உடனே யமகிங்கரர்கள் ஒரு நொடி நேரத்திற்குள் 80 000 காத தூரத்தில் உள்ள பூமியில் உயிரைப் பறித்த இடத்தில் அந்த ஜீவனைக்கொண்டு விட்டு விடுவார்கள்.
இப்படி யமலோகம் சென்ற ஜீவன் மீண்டும் தனது உடல் இருக்கின்ற இடத்திற்கே திரும்பி வருவதனால் இறந்தவனின் உடலை சில மணி நேரமாவது ஈமக்கிரியைகள் செய்யாமல் வைத்திருக்க வேண்டும்.
காரணம் ஆயுள் முடியும் முன்பே அந்த ஜீவன் உடலை விட்டுப் போயிருந்தால்
மீண்டும் உயிர் பெற்று எழ வாய்ப்புள்ளது.
செத்துப்பிழைத்தவர்கள் என்று கருதப்படும் நபர்கள் இத்தகையவர்களே ஆவார்கள். அப்படியில்லாது நிரந்தரமாக உடலை விட்டுச் சென்றவர்கள்
பூமிக்கு வந்ததும் உயிரற்ற தனது உடலைப் பார்த்து அந்த உடலிற்குள் புகுந்து கொள்ள முயற்சிப்பார்கள். அந்த முயற்சி தோல்வி அடைவதனால் தாங்க முடியாத துயர வசப்பட்டு ஆவி வடிவில் இருந்தாலும் அழுது துடிப்பார்கள்.
தங்களது உடல் மயானத்திற்கு எடுத்து வரும்போதும் கூடவே வருவார்கள்.
அவர்களோடு மற்ற ஆவிகளும் கலந்து கொண்டு பாடையில் இருக்கும். உடல்
மீது விழுந்து அழுத்துவார்கள்.
இதனாலேயே பாடை அளவுக்கு அதிகமான பாரத்தைக் கொடுக்கும். இதை பாடை தூக்கிகளில் அனுபவசாலிகள் நிதர்சனமாகவே அறிவார்கள். உடல் மயானத்தைச்சென்றடைந்தவுடன் தனது உடல் எரியூட்டப்படும் சிதைக்கு மேலேயோ அல்லது புதை குழிக்கு 10 அடி உயரத்தில் ஆவி நின்று தனது உடல்
வெந்து சாம்பலாவதையோ மண்ணால் மூடப்படுவதையோ பார்த்து
பதைபதைத்து துடிக்குமாம்.
மிகப்பழமையான பெயர் தெரியாத ஏட்டு சுவடி ஒன்றில் சில மந்திரங்களைக்
குறிப்பிட்டு அம்மந்திரங்களை முறைப்படி உரு ஏற்றினால் சிதைக்கு மேலே நின்று துடிக்கும் ஆவி உருவை நேரில் காணலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இறந்த மனித உடலானது முற்றிலுமாக எரிந்து சாம்பலாகும் வரை அந்த
உடல் மீது உள்ள ஆசையும் உறவினர்கள் மீதும் நண்பர்கள் மீதும் கொண்ட அன்பும் வாழ்ந்த காலங்களில் உபயோகப்படுத்திய பொருட்களின் மீதுள்ள ஈடுபாடும் பிரிந்த உயிர்க்குக் கொஞ்சம் கூட குறைவது இல்லை.
உடல் எரிந்து சாம்பலான பின்பு உயிருக்குப் பிண்டங்களால் ஆன சரீரம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. உயிர் பிரிந்து தகனம் முடியும் வரை உயிருக்கு உருவம் என்பது கிடையாது.
காற்றில் மிதக்கும் வெண்மை அல்லது கருமை நிற புகை போன்ற வடிவத்திலேயே ஆவிகள் இருக்கும். இந்த இடத்தில் மிக முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.
ஆவிகளை நேரில் காணும் வாய்ப்புப் பெற்றவர்கள் வெண்பனி போன்றோ கரிய புகை வடிவிலோ ஆவிகளைப் பார்த்ததாகத்தான் கூறுகிறார்கள்.
மிகச்சிலர் மட்டுமே பௌதிக வடிவில் ஆவிகளைப் பார்த்ததாகக்
கூறுகிறார்கள்.
ஆவிகள் கருப்பு வெள்ளையாகத்தான் காட்சித்தருமா? மற்ற வண்ணங்களில்
ஆவிகள் வராதா? இந்த நிறங்களில் மட்டும் பெருவாரியான ஆவிகள்
காட்சி தருவது ஏன்? என்ற கேள்விகள் எல்லோருடைய மனதிலும் எழுவது இயற்கை.
இதற்கு பல காலமாக ஆவிகளைப்பற்றிய எனது தனிப்பட்ட ஆராய்ச்சிகளிலும் பல பழைய நூல்களில் கிடைத்த விஷயங்களிலும் வேறு பலர் மேற்கொண்ட சோதனைகளிலும் மிகத் தெளிவான பதில் கிடைத்துள்ளது.
பூமியில் நல்ல வண்ணம் வாழ்ந்து மறைந்து போன ஆவிகள் வெள்ளை நிறத்திலும் மனதிற்குள் காமக் குரோதங்களை சுமந்கும் பல தீய செயல்கள் புரிந்தும் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்துபோன ஆவிகள் கருப்பு நிறத்திலும் இருப்பதாகக்கண்டறியப்பட்டள்ளது.
மேலும் ஆன்மீக ரீதியில் முன்னேற்றமடைந்து மனிதருள் மாணிக்கமாய்
இருந்து முக்தி அடைந்த சித்த புருஷர்களின் ஆவிகள் மெல்லிய ஆரஞ்சு வண்ணத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
ஆனாலும் வைதீக சாஸ்திரங்கள் உயிர்கள் காற்று போன்ற இந்த வடிவில்
இருப்பதற்கு வேறு விளக்கங்கள் தருகிறது.
முறைப்படியான இறுதிச் சடங்குகளும் திதி திவசம் போன்றவைகள் கொடுக்கப்படாமல் இருக்கும் ஆவிகள் தான் உருவமற்று புகைவடிவில் நடமாடும் என்றும் சாஸ்திரப்படி இறுதிக் கிரியைகள் செய்யப்பட்ட ஆத்மாக்கள்
புகைவடிவில் இருந்தாலும் அந்தப்புகை வடிவம் கூட அவர்கள் பூமியில் வாழ்ந்த போது என்ன உருவத்தல் இருந்தார்களோ அதே உருவமாகத்தான் இருப்பார்கள் காட்சி தருவார்கள் என்கிறது.
சாஸ்திரங்கள் கூறும் கருத்திலும் தவறுகள் இல்லை என்றே நான் கருதுகிறேன். காரணம் சடங்குகள் முறைப்படி நடத்தப்பட்ட ஆவிகளுக்கு அழுத்தம் திருத்தமான பௌதிகத் தோற்றம் போலவே தெரிகிறது என்றும்
மற்றவர்களுக்கு அழுத்தமான உருவங்கள் அமையாததால் வெறும் புகை வடிவாக மட்டுமே தோன்றுகிறது என்ற முடிவிற்கு நம்மை வரவைக்கிறது.
முறைப்படியான சடங்குகள் செய்யப்பட்ட ஆவிகளுக்குச் சொந்த வடிவம்
எப்படி வந்தமைகிறது என்பதைக்கருட புராணம் அழகாகக் கூறுகிறது.
இறந்தவன் மகனால் முதல்நாள் வைக்கும் பிண்டத்தால் ஆவிக்குத் தலை உண்டாகிறது.
இரண்டாம் நாள் போடும் பிண்டத்தால் கழுத்தும் தோளும்
மூன்றாம் நாள் பிண்டத்தால் மார்பும்
நான்காம் நாளில் வயிறும்
ஐந்தாம் நாளில் உந்தியும்
ஆறாம் நாளில் பிருஷ்டமும்
ஏழாம் நாளில் குய்யமும்
எட்டாம் நாளில் தொடைகளும்
ஒன்பதாம் நாளில் கால்களும் உண்டாகி
பத்தாம் நாளில் புத்திரனால் பெறப்படும் பிண்டத்தால் சரீரம் முழுவதும் பூரணமாக உருவாகும்.
பிண்டங்களால் முழுமையான உருவத்தைப் பெற்ற ஆவி பதினோறாவது நாள் தான் சரீரத்தோடு வாழ்ந்த வீட்டிற்கு வந்து தான் உயிரோடு இருக்கின்ற பொழுது வீட்டில் நிகழ்ந்த அனைத்து சம்பவங்களையும் தன்னால் கழ்த்தப்பட்ட
எல்லாவிதமான காரியங்களையும் நினைத்துப்பார்த்து அழுது துடிக்குமாம்.
மீண்டும் நம்மால் இப்படி வாழ முடியாமல் போய்விட்டதே என்று எண்ணியெண்ணி அந்த ஆவி துடிப்பதை எரிமலை சீற்றத்திற்குள் அகப்பட்டு கொண்ட சிறு பறவைக் குஞ்சியின் துடிப்பிற்கு இணையாக ஒப்பிடப்படுகிறது.
கடந்தகால வாழ்க்கையை மீண்டும் வாழ ஆசைப்படுவதும் சரீரப்பிரவேசத்தில் மோகம் கொள்வதும் சாதாரணமான உலகியல் வாழ்க்கையில் வாழ்ந்து உழன்ற செத்துப்போன ஜீவன்கள் தான் என்பதையும் பரமார்த்திக வாழ்வை மேற்கொண்ட ஜீவன்கள் சரீரப்பிரிவைப்பற்றியோ மரணமடைந்ததைப்
பற்றியோ துளி கூடக் கவலைப்படுவதில்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
வாழ்ந்த வீட்டில் வீழ்ந்து கிடந்து அழும் ஆவியை பதின்மூன்றாவது நாள் எமகிங்கரர்கள் பாசக்கயிற்றால் கட்டி எமபுரிக்கு இழுத்துச்செல்வார்கள்.
அப்படி இழுத்துச்செல்லும் போது கூரிய பற்களுடைய ரம்பம் போன்ற இலை அமைப்புக்கொண்ட அமானுஷ்ய வனாந்திரம் ஒன்றின் வழியாக அந்த ஜீவன் பயணம் செய்யும் சூழ்நிலை ஏற்படும். அப்போது வாள் போன்ற மர இலைகள் அந்த ஜீவனின் பிண்ட உடலைக் குத்திக் காயப்படுத்தும்.
அதனால் ஏற்படும் வலியில் சுறுக்கு மாட்டப்பட்ட நாய் ஊளையிடுவதுபோல்
ஆவி கத்தித் துடிக்கும். வைவஸ்வத என்ற நரகம் வழியாகவும் ஜீவன் இழுத்துச்
செல்லப்படுமாம். அந்த நகரத்தில் உயரமான மாளிகைகள் மிக நெருக்கமாக அமைந்திருக்குமாம். அச்சத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்தும் கோர ரூபமுடைய பிராணிகள் பல ஜீவனைச் சூழ்ந்து கடித்துக் காயப்படுத்துமாம்.
மேலும் அந்நகரத்திற்குள் நுழைந்தவுடன் ஜீவனுக்குத் தாங்க முடியாத தாகம்
ஏற்படுமாம். தாகம் தணிக்க இரத்தமும் சீழும் கலந்த கொடுக்கப்படுமாம். அந்த
நகரத்து மேகங்களெல்லாம் இரத்தத்தையும் அழுகிய சதைத்துண்டகளையும் மழையாகப் பொழியுமாம்.
இத்தகைய அருவருக்கத்தக்க கஷ்டமான சூழலிலும் இறந்த ஜீவனுக்கு அதீதமான புத்திரபாசம் ஏற்படுமாம். பாவத்தின் தண்டனையும் பாசத்தின்
சோதனையும ஆவியைச்சட்டையில்லாமல் பனிப்பொழிவிற்குள் அகப்பட்டக்
கொண்டவனைப்போல் வருத்தி எடுக்குமாம்.
இப்படி வழி நெடுகலும் காற்று நிறைந்த வழியிலும் துஷ்ட ஜந்துக்கள் நிறைந்க வழியிலும் இழுத்துச் செல்லப்படும் ஜீவன் இருபத்தெட்டாவது நாளில
கொடுக்கப்படும் சிரார்த்த பிண்டத்தை உண்டு சற்று இளைபாறி முப்பதாவது நாள் யாமியம் என்ற நகரத்தை அடையும்.
அந்நகரில் வடவிருஷம் என்ற மரமும் பலவிதமான பிரேதக் கூட்டங்களும் நிறைந்திருக்கும். அங்கு இரண்டாவது மாசிக பிண்டத்தைப் பெற்ற
பின்பு சற்று இளைப்பாறி மீண்டும் கிங்கரர்களால் இழுத்துச்செல்லப்பட்டு திரைப்பஷிக மாசிக பிண்டத்தை வேண்டி சங்கமன் என்ற எட்க்ஷன் தலைமையில் உள்ள சௌரி என்ற பகுதியல் சிறிதுகாலம் தங்கி மூன்றாவது மாசிக பிண்டத்தைப் பெறுவார்கள்.
ஐந்து மற்றும் ஆறாவது பிண்டத்தை உண்டு கடந்த சென்று வைதரணி என்ற
நதிக்கரையை அடைவார்கள். சாதாரணமான நதிகளைப்போல் இந்த நதியில் தண்ணீர் இருக்காது. அதற்குப் பதிலாக ரத்தமும் சீழும் சிறுநீர் மலம் சளி இவைகள் ஒன்றாகக் கலந்து ஆறாக ஓடுமாம். இந்த நதியைப் பாவம் செய்த
ஆத்மாக்கள் அவ்வளவு சீக்கிரம் கடக்க முடியாமல் கிங்கரர்கள் ஆழத்தில் தள்ளி அழுத்துவார்கள்.
புண்ணியம் செய்த ஆத்மாக்களை ஒரு நொடிப்பொழுதிற்குள் ஆற்றின் மறுகரையில் கொண்டு விட்டுவிடுவார்கள். இப்படி பல இடங்களிலும் பலவிதமான அவஸ்தைகளையும் அனுபவங்களையும் பெற்றாலும் இறந்து ஏழாவது மாதம் ஆனாலும் கூட எமலோகத்திற்குச் செல்லும் பாதி வழியை மட்டும் தான் ஜீவன்கள் இதுவரை கடந்து வந்திருக்குமாம்.
பக்குவப்பதம் என்ற இடத்தில் எட்டாம் மாதம் பிண்டத்தையும் துக்கதம் என்ற இடத்தில் ஒன்பதாவது பிண்டத்தையும் நாதாக்தாதம் என்ற இடத்தில்
பத்தாவது பிண்டத்தையும் அதப்தம் என்ற இடத்தில் பதினோறாவது பிண்டத்தையும், சீதாப்ரம் என்ற இடத்தில் பன்னிரெண்டாவது அதாவது
வருஷாப்திய பிண்டத்தையும் பெறுவார்கள்.
மரணமடைந்து ஒரு வருடத்திற்குப்பின்னரே எமபுரிக்குள் ஜீவன்களால் நுழைய முடியும். எமதர்மன் முன்னால் நியாய விசாரணைக்கு ஜீவன் நிறுத்தப்படும் முன்னால் 12 சிரவணர்கள் இறந்த ஆத்மா செய்த பாவ புண்ணியக் ணக்குகளைப்பார்ப்பார்கள். அதன் பின்னரே எமதர்மனால் விசாரிக்கப்பட்டு தண்டனை பெறுவார்கள்.
இங்கு நாம் எமலோகத்திற்குப்போகும் வழியில் ஆத்மாவிற்கு ஏற்படும் பலவிதமான கஷ்ட நஷ்டங்களைப்பார்த்தோம். தீமை மட்டுமே வாழும் காலத்தில் செய்த ஆத்மாக்கள் துன்பங்களை அனுபவிப்பது நியாயமானதுதான். நன்மையைச்செய்த ஆத்மாக்கள் கூட இதே வழியில்தான்
அழைத்து செல்லப்படுவார்களா? இதே துன்பங்களைதான் அனுபவிப்பார்களா என்று வினா எழும்புவது இயற்கையானதுதான்.
நமது சாஸ்திரங்களும் தர்மங்களும் சத்திய வழியில் வாழ்க்கை நடத்துபவர்களை மரணதேவனின் தூதுவர்கள் வந்து அழைக்க மாட்டார்கள்.
இறைதூதர்கள் தான் வந்து அழைத்துச் செல்வார்கள் என்று கூறுகிறது.
நாம் கிங்கரர்களால் அழைத்து செல்லப்படும் பெருவாரியான ஆத்மாக்களைப்
பற்றி மட்டும் பேசியதனால் அவர்கள் அனுபவிக்கும் துயரங்களை விவரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

No comments: