youtube

12 February 2016

கருவறையில் அமைக்கப்படும் மூலவர் பற்றி காணலாம்

கருவறையில் அமைக்கப்படும் மூலவர் பற்றி காணலாம். மனிதனை இறைவனோடு தொடர்பு கொள்ளச் செய்வதே மூலவர் தான். மூலவருக்குரிய சிலையை விஞ்ஞான அடிப்படையில் வடிவமைக்க வேண்டும் என்பதை நம் முன்னோர்கள் தெளிவாக அறிந்திருந்தனர்.
இது தொடர்பான குறிப்புகளை அவர்கள் ரிக் வேதத்தில் எழுதி வைத்துள்ளனர். ஆலயங்களில் உள்ள மூலமூர்த்தி சிலா விக்கிரகம், சுதை மூர்த்தி, தாருக மூர்த்தி என்று மூன்று வகைப்படும், சிலா விக்கிரகங்கள் என்பவை கல் அல்லது உலோகத்தால் செய்யப்பட்டதாக இருக்கும். சுதை மூர்த்தி என்பது பலவித மூலிகை கலவைகளை சேர்த்து, அதனுடன் தேன், சுண்ணாம்பு கலந்து உருவாக்கப்பட்டதாக இருக்கும்.
தாருக மூர்த்தி என்பது மரத்தினால் செய்யப்பட்ட மூல அமைப்பாக இருக்கும். இத்தகைய மூலவர்களை தமிழ்நாடு முழுவதும் உள்ள பழமையான ஆலயங்களில் காணலாம். ஆனால் 99 சதவீத மூலவர் சிலைகள் கருங்கல்லில்தான் இருக்கும். ஆதிகாலத்தில் ஆலயங்கள் தோன்றும் முன்பே மூலவர்களை வடிவமைக்கும் கலையை தமிழர்கள் கற்றுக் கொண்டு விட்டனர்.
மலைக்காடுகளில் சுற்றித் திரிந்த அவர்களுக்கு எங்கு பார்த்தாலும் கருங்கற்களைத் தான் காண முடிந்தது. எத்தனை நாட்களுக்குத் தான் அந்த கற்களையே பார்த்துக் கொண்டிருக்க முடியும்? அந்த கற்களில் இறை வடிவங்களை செதுக்கத் தொடங்கினார்கள். அதன்பிறகு தான் கருங்கல்லில் பஞ்சபூதங்களும் இருக்கும் அறிவியல் உண்மையை அறிந்தனர்.
நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று – இந்த ஐந்தும் தான் பஞ்சபூதங்கள். ஒரு கல்லை மற்றொரு கல்லுடன் உராய்ந்தால் தீ வரும். எனவே தீ கருங்கல்லில் உள்ளது. கருங்கற்கள் பொடி, பொடியாக நொறுங்கும் போது மண்ணாக மாறுகிறது. இது நிலத்தை காட்டுகிறது. மலைக்காடுகளில் பார்த்தால் கல்லுக்குள் இருந்து தான் தண்ணீர் ஈரமாக கசிந்து வெளியில் வரும்.
ஆக கல்லுக்குள் தண்ணீரும் இருக்கிறது. கல்லுக்குள் தேரை உள்ளிட்ட உயிரினங்கள் வாழும். இதன் மூலம் கருங்கல்லில் ஆகாயமான வெற்றிடமும், சுவாசிக்க காற்றும் இருப்பது உறுதியாகிறது. இப்பிரபஞ்சத்தை காக்கும் கடவுளுக்குரிய மூலவர் சிலை, பஞ்சபூத சேர்க்கையோடு தொடர்பு கொண்டதாக இருத்தல் வேண்டும் என்று சிந்தித்த தமிழர்களுக்கு கருங்கல் ஒன்றே அவர்களின் தேர்வாக இருந்தது.
எனவே கருங்கற்களில் மூலவர் விக்கிரங்களை செய்தால், அவற்றில் மிக எளிதாக இறை சக்தியை ஏற்படுத்தி, அதன் மூலம் அலைகளை பெருக்க செய்து பயன்பெற முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தான் கருவறைகளில் மூலவர் விக்கிரகங்கள் கல்லால் வடிவமைக்கப்பட்டவைகளாக அமைந்தன. அதே சமயத்தில் வீதி உலா செல்லும் உற்சவர் மூர்த்தியை பஞ்சலோகங்களால் செய்தனர்.
வெளி இடங்களில் உள்ள சக்தியை கிரஹித்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் உற்சவர் சிலைகள் உலோகத்தில் செய்யப்பட்டன. நாளடைவில் மூல விக்கிரகங்களுக் குரிய கற்களை கண்டுபிடித்து தேர்வு செய்து, அதில் சிலை செய்து, அதற்கு இறை சக்தி ஏற்படுத்தும் நுட்பத்தையும், சூட்சமத்தையும் தமிழர்கள் தெரிந்து கொண்டனர்.
எனவே, ஆயிரம் ஆண்டுகள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயங்களில் உள்ள மூல விக்கிரகங்கள், சிற்ப சிறப்புகள் மட்டுமின்றி, அதன் பின்னணியில் இறை ஆற்றலை வாரி வழங்கும் தன்மைகளை நிரம்ப கொண்டுள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா கருங்கல்லும் இறை ஆற்றலை வெளிப்படுத்தாது.
கருங்கல்லில் சூரிய காந்தக்கல், சந்திர காந்த கல், அலிக்கல் என்று மூன்று வகைகள் உள்ளன. சூரிய காந்த கற்கள் எப்போதும் சூடாக இருக்கும். இந்த வகை கல்லில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் கடவுள்களான சிவன், வீரபத்திரர், துர்க்கை, காளி போன்ற இறை வடிவங்களை செதுக்குவார்கள். சந்திரகாந்த கல் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும்.
எனவே இந்த வகைக் கல்லில் பெருமாள், புத்தர், தட்சிணாமூர்த்தி போன்ற கடவுள்களின் வடிவங்களை செய்வார்கள். அலிக்கல் என்பது சூடாகவும் இருக்காது. குளிர்ச்சியாகவும் இருக்காது. கல்லைத் தட்டும் போது ஓசையும் வெளியில் வராது. இத்தகைய கற்களில் எந்த மூலவர் சிலையையும் செய்ய மாட்டார்கள். மூலவர்கள் சிலைகள் பொதுவாக நிற்கும் நிலை (ஸ்தானகம்) அமர்ந்திருப்பது (ஆசனம்) படுத்து இருப்பது (சயனக் கோலம்) என்று மூன்று வகையாக தயாரிப்பார்கள்.
இந்த மூவகை மூலவர்களை எவ்வளவு உயரம், எவ்வளவு அகலத்தில் படைக்க வேண்டும் என்பதற்கு சிற்ப சாஸ்திர விதிகள் உள்ளன. சிற்ப கலையில் நவதாலம் என்று ஒரு அமைப்பு உண்டு. இதன்படி மூலவர் சிலை முகத்தின் நீளத்தை போல 9 மடங்கு சிலையின் மொத்த உயரம் இருக்க வேண்டும் என்பது அந்த அமைப்புக்குரிய விதியாகும்.
இப்படி அனைத்து விதிகளுடன், சிற்பி தன் கைத் திறமையையும் காட்டும் போது தான் பிரமாதமான மூலவர் சிலை கிடைக்கும். அதற்காக கல்லே கடவுள் ஆகிவிடாது. கல்லிலும் கடவுள் இருக்கிறார் என்பதையே பிரபஞ்ச உண்மை நமக்கு காட்டுகிறது. பிறகு எப்படி கல் முழுமையான இறை சக்தியை பெறுகிறது என்று நீங்கள் யோசிக்கலாம்.
சிற்பி செதுக்கும் மூலவர் சிலையை பல வகையான தானியங்கள் ஒவ்வொன்றிலும் 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் வைப்பார்கள். தண்ணீருக்குள்ளும் அந்த சிலை ஒரு மண்டலம் வைக்கப்படும். இதன் மூலம் அந்த சிலை, காஸ்மிக் கதிர் சக்தி கொண்ட பிரபஞ்ச சக்தியை மிக, மிக எளிதாக பெற்று விடும்.
இதையடுத்து சிலைக்கு கண் திறக்கப்படும். இதற்கு சில நியதி உள்ளது. கண் திறக்க முதலில் ‘ரத்ன நியாசம்’ எனப்படும் ஆராதனை செய்வார்கள். பிறகு சிலையின் தலை, நெற்றி, கழுத்து, மார்பு, நாபி, கைகள், பாதங்களில் நவரத்தினங்களை வைத்து பூஜை செய்வார்கள். பால் நிவேதனம் செய்து தூப, தீப ஆராதனை காட்டுவார்கள்.
பின்னர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்படும். இதையடுத்து கலச பூஜை நடத்துவார்கள். கருவறையில் எந்த மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளாரே அதற்கான மந்திரத்தை ஜெபித்து பூஜை செய்வார்கள். பின்னர் ஸ்தபதி விராட் விஸ்வ பிரம்மனை நினைத்துக் கொண்டு, தங்க ஊசி மூலம் சிலை கண்ணைத் திறப்பார்கள்.
முதலில் வலது கண்ணையும், பிறகு இடது கண்ணையும் திறக்க வேண்டும். சிலைக்கு கண்கள் திறக்கப்படும் போது ஸ்தபதியை தவிர வேறு யாரும் அருகில் இருக்கக் கூடாது. நான்கு புறமும் திரையிட்டு, திரை உள்ளேயே தீபம் காட்டி, பால், பழம், தேன் ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். சிலைக்கு கண்கள் திறக்கப்பட்டதும், முதலில் கண்ணாடி, பசுவின் பின்பாகம், ஒற்றைப்படை எண்ணிக்கையிலான பெண்கள், நெற்கதிர்கள், நவதானியங்கள், சன்னியாசி, வேதவிற்பனர் என்ற வரிசையில் மூலவர் பார்வைபடும்படி செய்ய வேண்டும்.
இறுதியில் தான் பக்தர்கள் மூலவர் பார்வையில் படுதல் வேண்டும். ஆக கருவறையில் மூலவர் சிலையை நிலை நிறுத்துவதில் இவ்வளவு நியதிகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை நம் முன்னோர்கள் 4 வகையாக பிரித்து வைத்துள்ளனர். தேவர்கள் செய்யும் பிரதிஷ்டைக்கு தைவீகம் என்று பெயர்.
அசுரர்கள் பிரதிஷ்டை செய்தால் அதை அசுரம் என்பார்கள். ராஜாக்களும், பக்தர்களும் முயன்று மூலவரை பிரதிஷ்டை செய்தால் அதற்கு மானுஷம் என்று பெயர். ரிஷிகள் செய்யும் பிரதிஷ்டைக்கு ஆர்ஷம் என்று பெயர். இவற்றின் தத்தவத்தை உணர்ந்ததால்தான் ஆதிசங்கரர், ராமானுஜர், நால்வர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், வாரியார் போன்ற ஞானிகள் மூலவர் சிலையை கண்டதும் பரவசமாகி அங்கு இறை ஒளியை கண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இது புரியாமல் கல்லை வழிபடுபவர்கள் மூடர்கள் என்று நாத்திகவாதிகள் சொல்கிறார்கள். அவர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். ‘‘பஞ்ச சுத்தி செய்து நின்னை விளங்கும் பராபரமே...’’–என்ற நம் முன்னோர் வாக்குக்கு ஏற்ப கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட மூலவரை நாம் மனம் ஒன்றி வழிபட, வழிபட நமக்குள் ஞானம் விஞ்சும் என்பதை மறந்து விடக்கூடாது.
Post a Comment