youtube

20 February 2016

சர்வம்சிவமயம் அம்பாள்

சர்வம்சிவமயம்

அம்பாள்

     விநாயகனைச் சிவப்பரம் பொருளின் மூத்த மகன் என்றும் முருகனை அப்பரம்பொருளின் இளைய மகன் என்றும் கூறுவதுபோல் அம்பாளை அல்லது சக்தியை அப்பரம்பொருளின் மனைவி என்று சிலர் உண்மை அறியாமல் கூறுவர். அம்மை அல்லது அம்பாள் என்கின்ற வடிவம் சிவப்பரம்பொருளின் மனைவியோ அல்லது விநாயகன் முருகன் என்ற கடவுளர்களுக்கு அன்னையோ அல்ல.

    எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவம் என்கின்ற பரம்பொருள் ஓசை வடிவம் தாங்கி வந்த போது விநாயகர் என்றும் அறிவு வடிவம் தாங்கி வந்தபோது முருகன் என்றும் அழைக்கப்படுவதாய் அறிவோம். அதைப்போன்றுதான் தன் சிறப்பு நிலையில் உண்மை, அறிவு, இன்ப வடிவாய் இருக்கின்ற பரம்பொருள் பொதுநிலைக்கு உயிர்களுக்கு அருள்புரிவதற்காக எடுத்த இன்னொரு  வடிவம் அம்பாள் வடிவம்.

     தமிழர்களைப்போன்று பெண்களுக்கு உயரிய இடத்தைக் கொடுத்த பெருமை வேறு யாருக்கும் கிடையாது. தமிழர்கள், கங்கை, யமுனை, காவிரி, சரசுவதி என்று ஆறுகளுக்கெல்லாம் பெண்களின் பெயர்களைக் கொடுத்தார்கள். பிறந்த மண்ணுக்குத் தாய் நாடு என்று சொன்னார்கள். ஈன்ற தாய் பேசும் மொழியைத் தாய்மொழி என்றார்கள். அதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்ததுபோல பரம்பொருளின் ஆற்றலுக்கு, பலத்திற்கு, சக்திக்கு, அருளுக்கு அம்மை, அம்பாள் என்று பெண்வடிவம் கொடுத்திருக்கிறார்கள் தனித்தன்மை வாய்ந்த தமிழர்கள்.
சிவப்பரம்பொருள் தன் இயற்கையான நிலையிலிருந்து முதலில் தன் அருளை வெளிப்படுத்தியே பின்பு ஓசையாகவும் ஒளியாகவும் முதலில் தன் அருளை வந்து நமக்கு அருள் பாலிக்கின்றது என்பதனைச் சைவ நூல்கள் கூறும்.

    அப்படி இறைவனிடமிருந்து வெளிப்படும் அருள் ஒரு நல்ல அம்மாவைப் போன்று கருணையே வடிவாய் இருந்ததினாலே அவ்வருளுக்கும், ஆற்றலுக்கு, சக்திக்கு அம்மை அல்லது அம்பாள் என்று பெயரிட்டு வழிபட்டனர் நம் முன்னோர். அவ்வருளுக்குப் பெண் வடிவமும் கொடுத்தனர். இதனாலேயே மணிவாசகப் பெருமான் இறைவன் திருவருளை, “பால் நினந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து” என்று இறைவன் திருவருளை தாயினுக்கு ஒப்பிடுவார். “அருளது அரன் தனக்குச் சக்தியாகும்” என்று சாத்திர நூல்கள் குறிப்பிடும்.

     இறைவன் அன்பு என்றால் அவன் ஆற்றல் அருள். இறைவன் சுடர் என்றால் அவன் அருள் அச்சுடரின்  வெம்மை ஆகும். எனவே இறைவனின் திருவருள் அல்லது அம்பாள் என்பது இறைவனின் ஒரு கூறே தவிர வேறு ஒருபொருள் அல்ல.
நாம் நினைப்பதுபோல இறைவனும் இறைவியும் வேறு அல்ல! அவை ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரியாதவை. எனவேதான் சிவம் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவமில்லை என்ற வழக்கு  உண்டாயிற்று. சிவத்திற்கும் சக்திக்கும் இல்லறத்தில் வருவதுபோல், கணவன் மனைவிக்கு இடையில் சண்டைகள் வருவதுபோல் சண்டைகள் வருவதில்லை. சிவப்பரம்பொருளின் எண்ணப்படி அதன் திருவருள் செயல்களை நிகழ்த்தும். அதனாலேயே, “எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்” என்று சாத்திர நூலான சிவஞானசித்தியார் குறிப்பிடும்.

        அம்பாள் எனப்படுபவள் தத்துவமாகவும், பாமர மக்கள் விளங்கிக் கொள்ளவுமே இவ்வாறு மனைவியாகவும், மகளாகவும், தாயாகவும் இறைவனுக்குச் சொல்லப்படுகிறாள் என்பதைத் திருமூலர் பின்வருமாறு அழகாகக் குறிப்பிடுவார். “அரனுக்கு மனோன்மனி தாயும், அரனுக்கு மனோன்மனி மகளும், அரனுக்கு மனோன்மனி நல்தாரமுமாமே”. மேலும் தாரமும் ஆகுவாள் தத்துவமாய் நிற்பாள், காரண காரியம் ஆகும் கலப்பினள்” என்றும் குறிப்பிடுவார். எனவே நம்மில் பலர் நினைப்பது போல் அம்பாள் எனப்படுபவள் இறைவனுக்குத் தாயோ, மனைவியோ கிடையாது. அம்பாளாகப்பட்டவள் சிவப்பரம்பொருளான இறைவருடன் மேலுலகத்தில் இல்லறமும் நடத்தவில்லை. அடியார்களுக்காக அவ்வப்போது இறைவனும் அவர் திருவருளும் அம்மை அப்பராய்க் காட்சித் தந்து மறைவர்.

    உண்மை, அறிவு, இன்பமாய் இருக்கின்ற சிவப்பரம்பொருளின் திருவருளே சிவசக்தியாகவும், பராசக்தியாகவும், ஆதிபராசக்தியாகவும் உலகைப் படைத்து உயிர்களைச் செயல்படுத்த வருகின்றது. இப்படிச் சிவப்பரம்பொருளிலிருந்து வேறுபடாத திருவருளே பல்வேறு சக்தி வடிவங்களில் வருகின்றது. இதனை உணர்த்துவதே நவராத்திரிப் பண்டிகை. சிவப்பரம்பொருளின் ஆற்றல் அல்லது சக்தி அருள்திருவுருவாய் நவசக்திகளாய் வருகின்றது. இவற்றை மாணிக்கவாசகப் பெருமான் திருவெம்பாவையிருவ தமிழ் விரகர் திருஞானசம்பந்தப் பெருமான்,

“சினமலி கரியுரி செய்த சிவன்,
உறைதரு திருமிழலையை,
மிகு தனமனர் சிரபுர நகர் இறை,
தமிழ்விரகனது உரை ஒருபதும்
மனமகிழ்வோடு பயில்பவர்,
எழில்   மலர்மகள், கலைமகள், சயமகள்
இனமலி புகழ்மகள் இசைதர
இருநிலன் இடைஇனிது அமர்வரே”
– திருமுறை : 1 என்றும் குறிப்பிடுகின்றார். இதில் அவர் திருவீழிமிழலை எனும் தலத்திலுள்ள சிவப்பரம்பொருளைப் போற்றிப்பாடிய எம்பாடல்களைப் பாடினால் சரசுவதி, இலட்சுமி, உமை அல்லது துர்க்கை என்று சொல்லும் சக்திகளின் அருளைப் பெறுவர், காரணம் அவை சிவத்தின் திருவருள் என்று குறிப்பிடுகிறார்.

    மேலும் இறைவனின் திருவருளான அம்பாளானது ஒன்பது வகையில் நின்று செயலாற்றுகின்றது என்று சற்று விளக்கமாகச் சைவ சித்தாந்த  சாத்திர நூலான சிவஞானசித்தியார் கூறுகின்றது. அதாவது சிவப்பரம்பொருள் தன் சிறப்பு நிலையில் உண்மை அறிவு இன்பமாய் இருக்கின்றபோது சக்தியானது சிவத்தில் ஒடுங்கியதாயும் உருப்பெற்று வெளிப்படாதநிலையில் இருப்பதாயும் நான்கு நிலைகளில் பரமசிவம், பராசக்தி, நாதம் அல்லது ஓசை, விந்து அல்லது ஒளி என்ற நிலையில் இருக்கின்றது என்கிறது. பின்பு இறைவன் சதாசிவம் வடிவம் கொள்ளும்போது அவனது சக்தி மனோன்மனியாகவும், இறைவன் மகேசுவர வடிவம் கொள்கின்றபோது மகேசுவரியாகவும், இறைவன் உருத்திரன் வடிவம் கொள்கின்றபோது உமையாகவும், இறைவன் திருமால் வடிவம் கொள்கின்றபோது திருமகளாகவும், இறைவன் பிரமனின் வடிவம் கொள்கின்ற போது சரசுவதியாகவும் நம்மிடம் வந்து அருள்பாலிக்கின்றது என்று கூறுகிறது.

 “சக்தியாய் விந்து சக்தியாய் மனோன்மனி தானாகி
ஏத்துறு மகேசையாகி உமை திரு வாணியாகி
வைத்துறும் சிவாஆதிக்கு இங்ஙன் வரும்சக்தி ஒருத்தியாகும்
ஏத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்”
– சிவஞானசித்தியார்.

        இப்பாடல்வழி நமக்குக் கிடைக்கக்கூடிய செய்தி என்னவெனில் சிவப்பரம்பொருளின் ஆற்றலாய் இருக்கக் கூடிய அவ்வொரு சக்தியே வெவ்வேறு வடிவங்களில் வருகின்றது என்கின்ற உண்மைதான். இறைவரும் அந்த அந்த தொழிலுக்கும் இயல்புக்கும் ஏற்ப வெவ்வேறு பெயர்களைக்  கொள்கிறார். இதையறியாமல் நம்மில் பலர் நமக்குப் பல கடவுள்கள் பல சக்திகள், பல ஆண் தெய்வங்கள் பல பெண் தெய்வங்கள் என்று மயங்குகின்றனர்.
இப்படி உண்மை, அறிவு, இன்பமாய் இருக்கும் கடவுளின் அருளைச் சக்தியைப் பாமரரும் புரிந்து கொள்ள பல புராணங்களை நம் முன்னோர் இயற்றினர்.

     இதில் சைவநெறிக்கு முரணானதை நாம் ஏற்றுக்கொண்டோமானால் பல குழப்பங்கள் ஏற்படும். அம்பாளுக்குத் தருகின்ற பல பெயர்களும் அச்சக்தியின் இயல்பை ஒட்டியேயாகும். திருவருளைப் போர்க்களத்தில் துர்க்கை எனவும், சினமிகுந்த கோலமாய் காளி என்றும் அனைத்துச் செல்வங்களை வழங்குகின்றபோது பவானி என்றும், புவனத்திற்கு அரசியாக புவனேஸ்வரி என்றும், அகிலத்திற்கு அரசியாய் அகிலாண்டேசுவரி என்றும், எல்லா உலகங்களுக்கும் பேரரசியாய் இராசராசேசுவரி என்றும், செகத்திற்கு ஈஸ்வரியாய் செகதீசுவரி என்றும், ஓம்கார பிரணவமாய் ஓங்காரி என்றும் ஆங்காரம் உடையவளாய் ஆங்காரி என்றும் அழகுமிக்கவளாய் சிங்காரி என்றும் சுந்தரம் மிக்கவளாய்ச் சுந்தரி என்றும் பலவாகக் கூறுகிறோம்.

        சிவப்பரம்பொருளின் அருள்நோக்கமே அம்பாள் என்பதனால் அவளின் கண்ணைக் குறித்து மீனைப்போன்ற கண்களை உடையவளாக மீனாட்சி என்றும் விசாலமான கண்களை உடையவளாக விசாலாட்சி என்றும் சிவனைக் காமிக்கின்ற கண்களை உடையவளாக சிவகாமி என்றும் ஏகம்பநாதரை காதல் கொள்வதினால் காஞ்சியில் காமாட்சி என்றும் அவளின் திருவருள் வடிவங்களில் சிலவற்றைக் கூறுவோம்.

     நம்முன்னோர்கள் உழவுத் தொழிலில் மழை அல்லது மாரியை நம்பி வாழ்ந்ததினால் இறைவன் திருவருளை மழையாகவே பார்த்தனர். எனவே அச்சிவப் பரம்பொருளின் பெண்வடிவம் கொடுக்கப்பட்டத் திருவருளை மாரி அல்லது மாரியம்மா என்று வழங்கினார்கள். மழை முத்து முத்தாகப் பெய்வதனால் முத்துமாரியம்மா என்றார்கள். கருமேகம் திரண்டு மழை பெய்வதனாலும் உயிர்களுக்குச் சதா அருள் வழங்குவதற்கு அருளைச் சூழ் போல் கருவாகக் கொண்டிருப்பதனால் கருமாரியம்மன் என்று சொன்னார்கள். இறைவன் திருவருள் நிறைந்திருக்கின்ற கோயில் மூலட்டானத்தையும் நாம் கருவறை என்று சொல்வதன் வழி இதனைப் புரிந்து கொள்ளலாம்.

     இறைவனைத் தந்தையாகவும் அவன் திருவருளைத் தாயாகவும் கொண்டு காணுகின்றபோது உயிர்கள் இன்னும் நெருக்கமாக உறவுகொண்டு பக்தி செலுத்த வாயில் இருக்கின்றது என்பதனாலேயே நம் முன்னோர்கள் இப்படியெல்லாம் சொல்லி வைத்தார்கள். சிவப்பரம்பொருளை அடைவதற்கு முதலில் அவரின் திருவருளை நாட வேண்டும் என்பதனால் தான் நாவுக்கரசு சுவாமிகளும், “தாயும் நீயே தந்தை நீயே” என்பார். சிவப்பரம்பொருளும் அவன் திருவருளான அம்பாளும் வேறல்ல என்று காட்டத்தான் அம்பாளுக்கும் இறைவனின் திருக்கோலத்திலிருக்கின்ற உடுக்கை, சூலம், மான், மழு, திருநீறு, நிலவு போன்றவை எல்லாம் அமைக்கப் பெற்றிருக்கும்.

     இதைத்தான் மாணிக்கவாசக சுவாமிகள் “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே” என்றார். வள்ளற்பெருமான், “தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம், அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம்” என்றார். இதனால்தான் இறைவன் திருமேனியில் இறைவி சரிபாதியாய் இருக்கின்றாள் என்று அருளாளர்கள் அம்பாளை அல்லது இறைவனின் திருவருளைப் பிரித்து பார்க்க முடியாது பாடினார்கள்.

    இதுவரை பார்த்தவற்றில் அம்பாள் என்பது சிவம் என்கின்ற பரம்பொருளின் அருள் வடிவம். அது அப்பரம்பொருளின் அன்னையோ மனைவியோ அல்ல. அவ்வருள் ஒருபோதும் உண்மை, அறிவு, இன்பமாய் இருக்கின்ற சிவம் என்கின்ற பரம்பொருளுக்கு வேறுபட்டோ அல்லது மாறுபட்டோ இருக்காது என்பதனை 

No comments: